JNU வன்முறை: ஒரு பக்கம் ஜெய் ஸ்ரீராம், மற்றொரு பக்கம் இன்குலாப் ஜிந்தாபாத் - என்ன நடக்கிறது அங்கே? #GroundReport

ஒரு பக்கம் ஜெய் ஸ்ரீராம், மற்றொரு பக்கம் இன்குலாப் ஜிந்தாபாத் - JNU #GroundReport

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

நூற்றுக்கணக்கான போலீஸார் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் உரக்க கேட்கிறது, இன்னொரு பக்கம் இன்குலாப் ஜிந்தாபாத் கோஷம். இப்படியாகத்தான் இருந்தது மாலையில் நாங்கள் சென்றபோது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

ஒரு கல்வி நிறுவனம் போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.

வழியெங்கும் தடுப்பு அரண்கள்

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் சென்றபோது அந்த சாலையில் பலகட்ட சோதனைக்கு பிறகே எங்களை வாயில் அருகே செல்லவே அனுமதித்தார்கள். பல்கலைக்கழக வாயிலின் அந்தப் பக்கம் பெரும் திரளாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

வழியெங்கும் தடுப்பு அரண்கள்

பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பிய அவர்கள், மாணவர்களை தாக்கியவர்கள் வலதுசாரி அமைப்பான ஏ.பி.வி.பி.யை சேர்ந்தவர்கள் என குற்றம்சாட்டினர்.

மேலும் அவர்கள், போலீஸார் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்களுக்கு உதவுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதனை விளக்கும் பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாணவர் தமிழ் பாரதன், காஷ்மீரி மாணவர்களை குறிவைத்து நேற்று தாக்குதல் நடந்ததாக கூறுகிறார்.

அந்த தாக்குதல் குறித்து விவரித்த அவர், "காஷ்மீரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் பால்கனி இருந்ததால், அதில் இறங்கி அவர்கள் தப்பினர். அந்த கலவர கும்பல் எங்கள் விடுதிக்கு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும்," என்றார்.

நேற்று நடந்த தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய போது தடுக்கி விழுந்ததில் இவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இடதுசாரிகளே வெளியே செல்லுங்கள்

பல்கலைக்கழக நுழைவாயிலிருந்து நூறு அடிகள் தள்ளி ஏ.பி.வி.பி மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

ஏ.பி.வி.பி மாணவர்கள்
படக்குறிப்பு, ஏ.பி.வி.பி மாணவர்கள்

பாரத் மாதாகி ஜெய், ஜெய் ஸ்ரீராம் ஆகிய கோஷங்களை அங்கு கேட்க முடிந்தது.

மாணவர்கள் உட்பட முந்நூறுக்கும் அதிகமான ஏ.பி.வி.பி அமைப்பினர் அங்கு கூடி இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைக்கு முழு காரணம் இடதுசாரிகள் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

கல்விபுல சூழலே இடதுசாரிகளால் கெட்டுவிட்டது என்று கூறிய அவர்கள், பல்கலைக்கழகத்தில் அவர்கள் வன்முறையை விதைப்பதாக கோஷமிட்டனர்.

மாறிய காட்சிகள்

ஒரு பக்கம் ஜெய் ஸ்ரீராம், மற்றொரு பக்கம் இன்குலாப் ஜிந்தாபாத் - JNU #GroundReport

இரண்டு தரப்பிலும் வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென பல்வேறு இடங்களிலிருந்து ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி கோஷமிட்டுக்கொண்டே வந்தனர்.

நிலைமை பதற்றமாவதை உணர்ந்த போலீஸார், பெரும் எண்ணிகையில் வந்து ஏ.பி.வி.பி அமைப்பினரை கட்டுப்படுத்தினர்.

இவை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே, பத்துக்கும் மேற்பட்ட பெண் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேறினர்.

பிபிசி தமிழிடம் பேசிய ஒரு மாணவி, "பல்கலைக்கழகத்தில் எப்போது என்ன சூழல் மாறும் என்றே தெரியவில்லை. நாங்கள் பாதுகாப்பிற்காக வெளியேறுகிறோம்," என்றார்.

இந்த மனநிலை அங்கு பலரிடம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.

மாலை 7 மணிக்கு நாம் அங்கிருந்து கிளம்பிய வரை இருதரப்பிலும் மாணவர்கள் கலையாமல் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: