பாரத் பந்த்: நாளை மறுநாள் நாடுமுழுவதும் வேலைநிறுத்தம் - தொழிற் சங்கங்கள் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்து வரும் ஜனவரி 8ஆம் தேதி (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன,
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்க கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, வேலைவாய்ப்பின்மை, அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் தொழிற் சங்கக் கூட்டமைப்புகள் அது தொடர்பாக கடந்த வாரம், மத்திய இணை அமைச்சர் கங்வாரை சந்தித்து முறையிட்டிருந்தன. தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருவதாக அப்போது அமைச்சர் கூறியதாக தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தங்களது 14 அம்ச கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தீர்ப்பதற்குரிய உறுதிமொழியை அமைச்சர் வழங்கவில்லை என்று பல்வேறு தொழிற் சங்கங்கள் இணைந்து கூட்டறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டிருந்தன.
கோரிக்கைகள் என்னென்ன?
வேலைவாய்ப்பின்மை, அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் தபன் சென், மத்திய அரசு 'தொழிலாளர்களுக்கு எதிராக' செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
"தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசு சாதாரண தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. எங்களது வலிமையை ஜனவரி 8ஆம் தேதி காட்டுவோம்" என்று அவர் கூறினார்.
ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.
இதுகுறித்து பேசிய பிஎம்எஸ் தொழிற் சங்கத்தின் தலைவர் விர்ஜேஷ் உபாத்யாய "இது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் நடத்தப்படும் அரசியல் ரீதியிலான வேலைநிறுத்தம்" என்று கூறினார்.
அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான வெங்கடாச்சலம், "ஏமாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ள முதலாளிகளின் பக்கம் இந்த அரசு உள்ளது" என்று கூறுகிறார்.
நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்கவுள்ளதாக தொழிற் சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












