IND Vs BAN இஷாந்த் ஷர்மாவின் பேய் ஆட்டத்தில் வங்கதேசத்தை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்தியா

இஷாந்

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணி வீரர்கள் தொடக்கம் முதலே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம், ஒரு இன்னிங்ஸ் உள்பட தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 14.1 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இஷாந்த் ஷர்மா 13 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, தொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா விளையாடும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீது அதிக கவனம் இருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம், தனது முதல் இன்னிங்சில் 106 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்த போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடப்பதால் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது.போட்டியின் முதல் நாளில் தொடக்கம் முதலே இந்திய வேகப்பந்துவீச்சளர்களின் கையே ஓங்கி இருந்தது.

இஷாந்தின் ஆக்ரோஷ பந்துவீச்சில் வீழ்ந்த வங்கதேசம்

போட்டியின் முதல் நாளில் இஷாந்த் சர்மாவின் அதிகவேக மற்றும் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணியினர் பெரிதும் தடுமாறினர்.

வங்கதேச பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட முடியாதவண்ணம் இந்திய வேகப்பந்துவீச்சளர்களின் அழுத்தம் இருந்தது.

உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் எடுக்க, மிக சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 12 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

இதனையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, தனது தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மாவை சொற்ப ரன்களில் இழந்தது.

புஜாராவுடன் இணை சேர்ந்த அணித்தலைவர் விராட் கோலி நன்கு அடித்தாடினார். இவ்விருவரும் 94 ரன்கள் சேர்த்தனர்.

விராட் கோலியின் சாதனை மழை

55 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரஹானே தன் பங்குக்கு 51 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில் நன்கு விளையாடிவந்த அணித்தலைவர் விராட் கோலி, மிக சிறப்பாக வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டார்.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், விராட் கோலி அடித்த பல ஷாட்கள் பெரும் பாராட்டுகளை பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27-வது சதத்தை நிறைவு செய்த விராட் கோலி 18 பவுண்டரிகளின் உதவியோடு, 136 ரன்கள் எடுத்தார்.

அணித்தலைவராக டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். கேப்டனாக விரைவாக 5000 ரன்கள் எடுத்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோலி முறியடித்தார்.

அதேபோல் சர்வதே போட்டிகளில் கேப்டனாக 41 சதங்களை எடுத்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

89.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்த இந்தியா, தனது முதல் இன்னிங்க்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இதனால் வங்கதேச அணியைவிட, இந்திய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய வங்கதேசம் மீண்டும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் பெரிதும் தடுமாறியது.

இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சில் வங்கதேச அணியின் முதல் 4 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது நாளின் இறுதியில், வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வரும் இந்த டெஸ்ட் போட்டி, பெரும்பாலும் பந்துவீச்சளர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

போட்டியில் முதல் நாளில் 13 விக்கெட்டுகளும், இரண்டாவது நாளில் 12 விக்கெட்டுகளும் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: