மகாராஷ்டிர ஆளுநர், பட்னாவிஸ் கடிதங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனை தயாராக இருந்த நிலையில், ஆட்சியமைக்கும்படி பாஜகவுக்கு இரவோடு இரவாக ஆளுநர் அழைப்பு விடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிசுக்கு முதல்வராக பதவிப் பிரமானம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை விசாரித்தது.
தங்களுக்கு உள்ள ஆதரவைத் தெரிவித்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த கடிதம் மற்றும், பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அளித்த கடிதம் ஆகியவற்றை திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கும்படி மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்க தொடங்கியது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவரின் முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இன்றே (ஞாயிற்றுக்கிழமை) பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
மனுதாரர்களின் சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிங்வி ஆஜரானார்கள்.
வாதம்... பிரதிவாதம்
பாரதிய ஜனதா கட்சி இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதம் .
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தை தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று தனது வாதத்தை தொடங்கினாட் கபில் சிபல்.
அவர், "சுயேச்சையாக செயல்படுவதற்கு ஆளுநருக்கென சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால், அது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கும், அரசமைப்புக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்"என்றார் கபில்.
அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் என்றும் கபில் சிபில் வாதிட்டார்.
மேலும் அவர், "மகாராஷ்டிரா ஆளுநர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்".
எதன் அடிப்படையில் பட்னவிஸை முதல்வராக பதவி ஏற்க செய்தார் ஆளுநர்? பெரும்பான்மை கோரப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார் கபில்.
"காலை 5.57 மணிக்கு குடியரசு தலைவர் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அடுத்து 3 மணி நேரத்திற்குள்ளேயே பட்னவிஸும், அஜித் பவாரும் பதவி ஏற்கிறார்கள். இது மிகவும் விநோதமாக உள்ளது. நாட்டில் எமெர்ஜென்ஸி நிலவுகிறதா?" என்று தனது வாதத்தை முன் வைத்தார் கபில் சிபல்.
பெரும்பான்மை இருப்பதாக அவர்கள் கருதினால், அவர்கள் இன்றே அதனை நிரூபிக்க வேண்டும் என்றார் கபில்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு இதே போன்றதொரு சூழ்நிலை நிலவியபோது, 24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை தனது தரப்பு வாதத்தின்போது கபில் சிபல் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரான துஷார் மேத்தா, எந்த தரப்புக்காக இந்த வழக்கில் ஆஜராகியுள்ளதாக நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மேத்தா, "இந்த வழக்கு குறித்த தகவல், எனக்கு நேற்று நள்ளிரவு அளிக்கப்பட்டதால்தான் நான் இங்கு இருக்கிறேன். எனினும், நான் இந்த வழக்கில் எந்த தரப்புக்காக வாதிட வேண்டும் என்பது குறித்து எனக்கு எவ்வித வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை" என்று அவர் கூறினார்.
சட்டம் நிலைநிறுத்தப்படும்
சட்டம் நிலைநிறுத்தப்படும் என தாங்கள் நம்புவதாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்.

பட மூலாதாரம், Getty Images
பா.ஜ.கவுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் மனம் திருந்தி மீண்டும் வருவார் என தாங்கள் நம்புவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அப்படி வரும்பட்சத்தில், கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அவர் கூறி உள்ளார்.
சரத் பவாருடன் சந்திப்பு
இப்படியான சூழலில், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காக்கடே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பெரும்பான்மை

பட மூலாதாரம், Getty Images
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க அணிக்கு குறைந்தபட்சம் 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனாவுக்கு 56 எம்.எல்.ஏ.க்களும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். சிறிய கட்சிகளுக்கு 16 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் உள்ளனர்.
பாரதிய ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் இன்னும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவாருக்கு ஆதரவாக அக்கட்சியைச் சேர்ந்த எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதில் தெளிவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












