மகாராஷ்டிர அரசியல் திருப்பம்: பாஜகவின் துல்லிய தாக்குதலா? எதிர்க்கட்சிகளின் தவறா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அரசியல் என்றாலே நம்ப முடியாத நிகழ்வுகளும், தருணங்களும் நிறைந்தது.
சாதுரியம், சாணக்கியத்தனம், ஏன் சிலசமயம் நம்பிக்கை துரோகம் என எல்லாம் கலந்த திகைக்க வைக்கும் திருப்பங்களை அரசியலில் காணலாம். அவ்வாறான ஒரு நம்ப முடியாத திருப்பம் மகாராஷ்டிர மாநில அரசியலில் இன்று (சனிக்கிழமை) காலையில் அரங்கேறியது.
வெள்ளிக்கிழமை இரவு வரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் பாஜகவின் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று (சனிக்கிழமை) காலை பதவியேற்றார்.

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றதாகச் செய்திகள் தெரிவித்தன.
சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். பாஜக மற்றும் அஜித் பவார் மீது கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
இந்திய அரசியலிலும், மகாராஷ்டிர மாநில அரசியலிலும் மூத்த தலைவராகக் கருதப்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளார்.

பட மூலாதாரம், ANI
சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ஆகியோர் நண்பகலில் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய உத்தவ் தாக்ரே, ''மகாராஷ்டிரா மீது பாஜக தொடுத்த துல்லிய தாக்குதல் இது. நடப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. கட்சிகளை உடைப்பதைத் தொடர்ந்து பாஜக செய்கிறது'' என்று கூறினார்.
''முன்பு தேர்தல் இயந்திரங்களை வைத்து விளையாடிய பாஜக தற்போது புது மாதிரியான விளையாட்டை ஆரம்பித்துள்ளது. இனி தேர்தலே நடத்தத் தேவையில்லை'' என்று உத்தவ் தாக்ரே கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய சரத் பவார், "பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை அமைக்கும் போக்கைப் பின்பற்றி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள், பாஜகவுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள்," என்றார்.
மகாராஷ்டிர மாநில அரசியலில், கடந்த 1 மாதமாக ஏற்பட்ட குழப்பம் மற்றும் இன்றைய எதிர்பாரா அரசியல் திருப்பம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வைபவ் புரந்த்ரே கூறுகையில், ''மகாராஷ்டிர மாநில தேர்தல் முடிவுகள் தெளிவாகவே இருந்தது. பாஜக மற்றும் சிவசேனை கூட்டணி ஆட்சியமைக்க முடியாததற்கு இவ்விரு கட்சிகளின் ஒற்றுமையின்மையே காரணம். மக்கள் அளித்த வாக்கை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை'' என்று கூறினார்.
''இதேவேளையில் ஆட்சியமைக்க முடிவுசெய்த சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும், தங்களின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் இதர அம்சங்களைப் பேசி முடிவெடுக்க 10 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டனர். இந்த கால அளவில் அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுதான் தற்போது நடந்தது'' என்று கூறினார்.
''சிவசேனை கட்சிக்கு தற்போது சோதனையான காலம்தான். மீண்டும் பாஜகவுடன் இணைவதோ அல்லது இதுநாள் வரை கடைப்பிடிக்காத மதச்சார்பற்ற கொள்கையை இனி மேற்கொள்வதோ எளிதான விஷயம் அல்ல. மீண்டும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள அந்த கட்சி சற்று காலம் எடுத்துக்கொள்ளும்''
''பாஜக துல்லிய தாக்குதல் நடத்தியதாக உத்தவ்தாக்ரே கூறுகிறார். அதனை அந்த கட்சி தங்கள் அரசியல் சாதுரியத்துக்குப் கிடைத்த பெருமையாகத்தான் எடுத்துக்கொள்ளும். அரசியலில் எப்போது விழிப்பாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு திருப்பம் அல்லது புதிய முயற்சிகள் நடக்கக்கூடும். இந்த சூழலில் 10 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை மட்டும் குறைகூறுவது சரியல்ல'' என்று வைபவ் புரந்த்ரே மேலும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இருந்தது.
நடந்தது என்ன?
அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், இதர காட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 29 இடங்களையும் வென்று நிலையில், தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி தங்களுக்கு முதலில் முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரியது.
பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில், முதலில் ஆட்சியமைக்க பாஜகவும், பின்னர் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஆளுநரால் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் யாரும் உடனடியாக ஆட்சியமைக்க முடித்த நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கைகோர்த்தன. சிவசேனை தலைமையில் ஆட்சியமைக்கப் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இந்த வார இறுதியில் மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை ஆட்சியமைக்கும் என்றும், உத்தவ் தாக்ரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலையில் நடந்த திருப்பங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டன.
பிற செய்திகள்:
- இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு
- இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்
- உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள், கிளர்ந்தெழுந்த மக்கள் - என்ன காரணம்?
- 'உத்தவ் தாக்ரே தலைமையில் அரசு' - மகாராஷ்டிரா அரசியல் இழுபறி முடிவுக்கு வருகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












