இரான், சிலி, கொலம்பியா - உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள், கிளர்ந்தெழுந்த சாமானியர்கள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வீதிக்கு வந்து கடந்த இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர். இரானில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராடி வருகிறார்கள் மக்கள்.
மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 100 தலைவர்களை இரான் அரசாங்கம் கைது செய்துள்ளது. இது இரானின் நிலை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
கொலம்பியாவில் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தில், மூன்று பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் வியாழக்கிழமை வீதியில் இறங்கி போராடினர்.

பட மூலாதாரம், Getty Images
அது மட்டுமல்லாமல், ஊழலும் மலிந்துவிட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுபோல சிலியில் நடந்த போராட்டத்தில், அரசாங்கம் வேண்டுமென்றே மக்களை தாக்கியதாக அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் குற்றஞ்சாட்டி உள்ளது. அளவுக்கு அதிகமாக போலீஸ் பயன்படுத்தப்பட்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும், ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டனர் என்றும், பாலியல் துன்புறுத்தலும் இருந்தது என அந்த அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.

'உத்தவ் தாக்ரே தலைமையில் அரசு'

மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்பதற்கு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என்று தெரிகிறது,
"உத்தவ் தாக்ரே தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகத்துக்கு இடமில்லை. எனினும் இன்னும் சிலவற்றை விவாதிக்க வேண்டியுள்ளது. நாளை (சனிக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் விவரங்கள் தெரிவிக்கப்படும்," என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஈடன் கார்டனில் 'பிங்க்' நிற திருவிழா

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரிய மற்றும் சிறந்த வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகள், 130 ஆண்டுகளுக்கு மேல் விளையாடப்பட்டு வருகின்றன.
வெள்ளை உடையில் வலம் வரும் வீரர்கள், சிவப்பு நிற பந்துகள், 5 நாட்கள் (அதிகபட்சம்) நடக்கும் போட்டி என பல பிரத்யேக அடையாளங்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உண்டு.
ஒரு கிரிக்கெட் வீரரின் திறன் மற்றும் சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்தே மதிப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவதுண்டு. உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது அவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் பங்களிப்பை வைத்துத்தான்.
விரிவாக படிக்க:ஈடன் கார்டனில் 'பிங்க்' நிறத் திருவிழா: பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களை ஈர்க்குமா?

இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா?

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 29-ம் தேதி இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வருகிறார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, வழக்கத்துக்கு மாறான அவசரத்துடன் இந்தியா தனது வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் புதிய அதிபரை சந்தித்துப் பேசியதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்த்துச் செய்தியை கோட்டாபயவிடம் அவர் ஒப்படைத்தார்.
இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று கோட்டாபயவும் புது டெல்லி வர ஒப்புக்கொண்டார். கோட்டாபய பயணம் செய்யப்போகும் முதல் வெளிநாடு இந்தியாதான்.

ஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Twitter
விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் 2017ஆம் ஆண்டில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்.
ஏற்கனவே பாலாவால் வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்டு, படம் முடிவடைந்த நிலையில், அதில் திருப்தி இல்லாததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. பிறகு, அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்தீப் வாங்காவிடம் துணை இயக்குனராகப் பணியாற்றிய கிரீஷாயாவை இயக்குநராக வைத்து மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது ஆதித்ய வர்மா.
விரிவாக படிக்க:ஆதித்ய வர்மா - சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












