மகாராஷ்டிரா அரசியல்: “இனி தேர்தலே தேவையில்லை”- உத்தவ் தாக்ரே; "குதிரை பேரம் மூலமே பா.ஜ.க ஆட்சி"- சரத் பவார்

"குதிரை பேரத்தின் மூலமே பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது": சரத் பவார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

பாரதிய ஜனதா கட்சியுடன் உண்மையான தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் கரம் கோர்க்க மாட்டார்கள் என்று சரத் பவார் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை தலைவர்கள் கூட்டாகப் பத்திரிகையாளர்களை 12.45 மணிக்கு ஒய்.பி சவான் அரங்கில் சந்தித்தனர்.

அப்போது பேசிய சரத் பவார், "பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை அமைக்கும் போக்கைப் பின்பற்றி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள், பாஜகவுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள்," என்றார்.

சுமார் 10 முதல் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அஜித் பவாரின் பக்கம் உள்ளனர் என்றும் சரத் பவார் தெரிவித்தார்.

அஜித் பவாரின் முடிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று பவார் கூறினார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சிங்கனே, "அஜித் பவார் என்னை அழைத்து சில விஷயங்கள் பேச வேண்டும் என்று கூறினார். அவரை சந்திக்கச் சென்றேன். அங்கிருந்து என்னையும் பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜ் பவன் அழைத்து சென்றார். அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கு முன்பே அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. அங்கிருந்து நேராக சரத் பவாரை சந்தித்து, "நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினேன்" என்றார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பலம் பாஜகவிற்கு இல்லை. தேசியவாத காங்கிரஸும், சிவசேனாவும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் சரத் பவார் தெரிவித்தார்.

மேலும், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுள்ள அஜித் பவாரை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சரத் பவார் தெரிவித்தார்.

அப்படி எடுக்கப்படும் முடிவானது எனது முடிவாக மட்டும் இருக்காது. கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இருக்கும் என்றார் பவார்.

"தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக அஜித் பவார் உள்ளதால், அவரை நீக்கிவிட்டு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார்

'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்'

இது மகாராஷ்டிராவின் மீது பாஜக தொடுத்துள்ள சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"குதிரை பேரத்தின் மூலமே பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது": சரத் பவார்

பட மூலாதாரம், Getty Images

"பாஜக முன்னெடுத்து வரும் இந்த புது மாதிரியான அரசியல் செயல்பாட்டை மகாராஷ்டிரா மட்டுமல்ல இந்தியா முழுவதும் அந்த கட்சி செயல்படுத்தி வருகிறது. இது இந்திய அரசமைப்பிற்கும், மகாராஷ்டிரா மக்களுக்கும் செய்யப்பட்டுள்ள அவமரியாதையாகவே கருதுகிறோம். கடந்த காலம் முழுவதும் தங்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தவர்களுடன் சேர்ந்து பாஜக கூட்டணி வைக்கிறது. எனினும், நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைப்போம்," என்றார் உத்தவ் தாக்கரே. 

''முன்பு தேர்தல் இயந்திரங்களை வைத்து விளையாடிய பாஜக தற்போது புதுமாதிரியான விளையாட்டை ஆரம்பத்துள்ளது. இனி தேர்தலே நடத்த தேவையில்லை'' என்று உத்தவ் தாக்ரே கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: