தீபக் சாஹர் : முட்டாளாக்கும் பௌலிங், தோனியின் துருப்புச் சீட்டு - யார் இவர்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தீபக் சாஹர்: அது அவருக்கு ஏழாவது டி-20 போட்டி தான். இந்தியாவுக்கு அது மிகவும் சிக்கலான போட்டி. வங்கதேச அணிக்கோ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டி20 போட்டி.
நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் இல்லாத வங்கதேச அணி, இந்தியாவை அதன் தலைநகரான டெல்லியில், காற்று மாசு அதிகமாகி மக்கள் மூச்சு விடவே சிரமப்பட்ட ஒரு ஞாயிறு இரவில் நடந்த டி20 தொடரின் முதல் போட்டியை வென்றது.
அது இந்திய அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
இரண்டாவது போட்டியில் ரோகித்தின் தாண்டவத்தால் இந்திய வெல்ல, ரசிகர்களுக்கு ஆறுதல் கிடைத்தது.
மிகவும் முக்கியமான இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. வென்றால் சரித்திரம் படைக்கலாம் என உற்சாகத்தில் வங்கதேச அணியும், சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளுடன் நடந்த டி20 தொடரில் கோப்பையை கைப்பற்றமுடியாமல் சுணங்கிப்போயிருந்த இந்திய அணியும் மோதின. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ள நிலையில் இந்த போட்டியையும் தொடரையும் வென்றே ஆக வேண்டும் என்ற உந்துதலில் களமிறங்கியது இந்தியா.

பட மூலாதாரம், BCCI TWITTER
டாஸ் வென்ற இந்திய அணி, ஷ்ரேயாஸ் அய்யரின் அதிரடி சிக்ஸர்கள், கே.எல். ராகுலின் சாமர்த்தியமான பௌண்டரிகள், இறுதி ஓவர்களில் மணீஷ் பாண்டேவின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் வங்கதேசத்துக்கு 175 ரன்கள் இலக்கு வைத்தது.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை நிலை குலைய வைத்தார் தீபக் சாஹர். ஆனால் அதன் பின்னர் மெல்ல மெல்ல ரன்ரேட்டை உயர்த்திக்கொண்டு விக்கெட்டுகளை இழக்கமால் விளையாடி இலக்கை நெருங்கி வரத் துவங்கியது மகமதுல்லா தலைமையிலான வங்கதேச அணி.

பட மூலாதாரம், BCCI TWITTER
சாஹரை தவிர எந்த இந்திய பௌலரும் வங்கதேசத்துக்கு நெருக்கடி கொடுக்க வில்லை. ஃபீல்டிங்கிலும் கடும் சொதப்பல்.
எட்டு ஓவர்களில் 69 ரன்கள் எடுக்க வேண்டும். அதாவது 48 பந்தில் கைவசம் எட்டு விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 69 ரன்களை எடுத்துவிட்டால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைக்க முடியும் என்ற நிலையில் இருந்தது வங்கதேசம்.
அதுவரை ஒரு ஓவர் மட்டுமே வீசியிருத்த சாஹரை அழைத்தார் இந்திய அணித் தலைவர் ரோகித் ஷர்மா. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நைமுக்கு துணை நின்று கொண்டிருந்த மிதுனை அந்த ஓவரில் காலி செய்தார் சாஹர். 98 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி பிரிந்ததும், ரோகித் கூடாரத்தில் ஆசுவாசம் ஏற்பட்டது.
நைம் அவுட் ஆன அடுத்த பந்திலேயே வங்கதேசத்தின் முக்கிய துருப்புச்சீட்டான முஷ்பிகுர் ரஹீமை கிளீன் போலடாக்கி வெளியேற்றினார் ஷிவம் துபே.
இப்போது ஆட்டம் மீண்டும் சமநிலைக்கு வந்தது. இரு தரப்புக்கும் வெற்றி வாய்ப்பு சரி பாதியானது. இந்த போட்டியில் ஆறாவது பௌலரை சேர்த்துக்கொள்ளவே இல்லை இந்திய அணி நிர்வாகம். தவிர ஷிவம் துபேவுக்கு போதிய அனுபவமும் கிடையாது.
நான்கு பௌலர்கள் + ஷிவம் துபே எனும் ஆல்ரவுண்டர் என்ற திட்டத்தோடு விளையாடியது இந்தியா. யுவேந்திர சாஹல், சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது போன்ற பௌலர்கள் இறுதிப்போட்டியில் விக்கெட்டுகள் வீழ்த்த திணறிய நிலையில் ஷிவம் துபே ரோகித்துக்கு தோள் கொடுத்தார்.
ஆட்டத்தின் 16-வது ஓவரில், பௌண்டரிகளும் சிக்சரும் விளாசி வங்கதேச அணிக்கு புது ஹீரோவாக உருவெடுத்துக்கொண்டிருந்த 20 வயது இளம் வீரர் மொஹம்மது நைமின் ஸ்டம்புகளை சிதறடித்தார் ஷிவம் துபே.
48 பந்துகளில் 10 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 81 ரன்கள் எடுத்து வெளியேனார் நைம். அதற்கு அடுத்த பந்திலேயே அஃபிப் ஹூசைனையும் டக் அவுட்டாக்கினார் துபே.
16-வது ஓவரின் முடிவில் ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வரத் துவங்கியது. எனினும் வங்கதேச அணித்தலைவர் மஹமதுல்லா களத்தில் இருந்தார். அந்த அணியின் வெற்றிக்கு 4 ஓவரில் 49 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரில் யுவேந்திர சாஹல் மஹமதுல்லாவை வீழ்த்தினார். 18-வது ஓவரின் இறுதிப்பந்தில் வங்கதேச அணியின் எட்டாவது விக்கெட்டை பறித்தார் சாஹர்.
20-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து மீதமிருந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாஹர். இது ஹாட்ரிக் சாதனை.
டி20 போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பௌலர் எனும் சிறப்பை பெற்றார் சாஹர். மேலும் சர்வதேச டி20 போட்டியில் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார் சாஹர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை பௌலர் அஜந்த மெண்டிஸ் எட்டு ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை உடைத்தார் சாஹர்.

பட மூலாதாரம், RANDY BROOKS/getty images
ஆம். இந்த போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹர் நான்கு ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
விராட்கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்வர் குமார், ஜடேஜா, ஷமி இல்லாத இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை வென்றது.
ஆட்டத்தின் மேன் ஆஃப் தி மேட்ச் மற்றும் இந்த தொடரின் மேன் ஆஃப் தி சீரிஸ் விருது இரண்டுமே தீபக் சாஹர் வசமானது. இந்திய கிரிக்கெட் அணியில் ஒரே இரவில் நட்சத்திர வீரர் ஆனவர்கள் பட்டியலில் இப்போது தீபக் சாஹரும் இணைந்து விட்டார்.
சரி, யார் இந்த தீபக் சாஹர்?
தீபக் சாஹர் ஒரு உ.பி பையன். 27 வயதாகும் சாஹர் ஆக்ராவில் பிறந்தவர்.
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சாஹர் ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடினார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஜெய்ப்பூரில் நவம்பர் மாதத்தின் ஒரு மென் குளிர் வீசிய நாளில், 77-வது ரஞ்சி கோப்பையின் ஒரு காலை பொழுதில் ராஜஸ்தான் அணியும் ஐதராபாத் அணியும் மோதின.
18 வயது இளம் வீரராக அப்போதுதான் முதல் முறையாக ரஞ்சி கோப்பையில் நுழைந்திருந்தார் சாஹர். 78 நிமிடங்களில் ஐதராபாத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துவிட்டது. 16 ஓவர்களில் 21 ரன்களில் ஐதராபாத் ஆல் அவுட்.
நம்புவதற்கு கடினமாக அமைந்த இந்த போட்டியில் சாஹரின் ஸ்விங்கில்தான் மொத்த ஐதராபாத் அணியும் சரிந்தது. அந்த அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் - ஆறு.
தீபக் சாஹர் அந்த இன்னிங்சில் எடுத்த விக்கெட்டுகள் எண்ணிக்கை - எட்டு.
வெறும் பத்து ரன்கள் மட்டுமே அவர் விட்டுக்கொடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்சிலும் நான்கு பேட்ஸ்மேன்களை அவர் பெவிலியனுக்கு அனுப்பினார். போட்டி நடந்த மைதானம் ஒன்றும் வேகப்பந்தின் சொர்க்கபுரி கிடையாது. ஏனெனில் ராஜஸ்தான் அதே போட்டியில் 403 ரன்கள் எடுத்தது. அப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 256 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது.
சாஹரின் ஆட்டத்தை பார்க்கும்போது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
''நீங்கள் சாஹரை முதன் முறையாக எதிர்கொள்கிறீர்கள் எனில் அவரது இன்ஸ்விங்கில் நீங்கள் முட்டாளாகிப் போவீர்கள். ஒரு வாழைப்பழத்தை போல அவரது பந்து இன்ஸ்விங்காகி திரும்பும். அவர் இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் இரண்டும் செய்யக்கூடியவர்'' என அப்போது எழுதியிருந்தார் ஆகாஷ் சோப்ரா.

பட மூலாதாரம், Robert Cianflone/getty images
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் இருந்திருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குத் தான் அவர் மிகவும் பரிச்சயம்.
2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸில் முக்கிய வீரராக திகழ்ந்தார் சாஹர்.
ரன் ரேட்டை கட்டுப்படுத்துவதிலும் சரி, எதிரணியின் துருப்புச்சீட்டாக விளங்கும் பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பும் வேலையிலும் சரி சிறப்பான வீரராக விளங்கினார் சாஹர். சில சமயங்களில் பேட்டிங்கில் சிக்ஸர்களையும் விளாசியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல்லில் 17 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவருக்கு முன்றாவது இடம்.

பட மூலாதாரம், IAN KINGTON/getty images
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இவர் அறிமுகமானார். இங்கிலாந்து மண்ணில் டி20 போட்டியில் முதன்முறையாக களமிறங்கியவர் ஜேசன் ராய் விக்கெட்டை கைப்பற்றியிருந்தாலும் நான்கு ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
''கனவிலும் நினைத்து பார்க்க வில்லை''
நேற்றைய போட்டியில் உலக சாதனை படைத்த பிறகு பேசிய சாஹர், ''எனது கனவிலும் நான் இப்படி பந்து வீசுவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. ரோகித் எனக்கு முக்கியமான ஓவர்களை கொடுக்க திட்டமிட்டார், நிர்வாகமும் என்னிடம் அதைத்தான் எதிர்பார்த்தது. எனது சிறுவயதில் இருந்தே கடுமையாக உழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது'' என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












