விராட் கோலிக்கு பிறந்தநாள் இன்று - 'சேஸிங் கிங்' குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள்

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

டெல்லியில் பிறந்த விராட் கோலி, அண்டர்-19 பிரிவில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய அணியின் கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதன்பின், இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றார்.

2008ல் ஐபிஎல் தொடங்கியபோது, டி-20 போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய விராட் கோலி 2012ல் பெங்களூர் அணியின் கேப்டன் ஆனார். இன்றுவரை, ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து, பல சாதனைகளை முறியடித்த விராட் கோலி இந்திய அணியின் ரன் மெஷின் என்றே அழைக்கப்படுவார்.

உடல்தகுதி

உடல்தகுதி என்ற அம்சத்தில் மிகவும் அக்கறை உள்ளவர் விராட் கோலி. தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுக்கும் அவர், எந்தளவு தன்னுடைய உடலை தயார் செய்துள்ளார் என்பது அவரது ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் நன்றாகவே எதிரொலிக்கும்.

விராட் கோலி

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA

தனது அசாத்திய உடல் தகுதியால் நீண்ட நேரம் பேட்டிங் செய்வது மற்றும் களைப்பின்றி, தொய்வின்றி ஃபீல்டிங் செய்வது என்று கோலியால் ஜொலிக்க முடிந்தது.

கிரிக்கெட்டா ? குடும்பமா? கோலியின் தேர்வு எது?

ஒருமுறை டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியொன்றில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருந்தபோது அவரது தந்தை திடீரென இறந்துபோனார். தனது பயிற்சியாளரை மொபைலில் தொடர்பு கொண்ட கோலி, ``என் தந்தை இறந்து விட்டார் . நான் 40 ரன்களுடன் நாட்அவுட்டாக இருக்கிறேன். நாளை என்ன செய்ய வேண்டும் ?'' எனக் கேட்டார்.

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

``உனக்கு விருப்பமானதைச் செய்'' என்று பயிற்சியாளர் கூற, ``நான் நாளை விளையாட போகிறேன்'' என்றார் 18 வயது கோலி. கோலியை பரிசோதிக்கும் ஆட்டமாக அமைந்த அந்த போட்டியில் பொறுமையாக விளையாடி 90 ரன்களை விராட் சேர்த்ததால் டெல்லி அணி தோல்வியில் இருந்து தப்பியது.

விளையாடியே தீருவேன் என்று அவர் எடுத்த முடிவும், நேர்த்தியான ஆட்டமும் கோலியின் மனதிடத்தை எடுத்து கூறுவதாக அமைந்தது.

சச்சினுக்கு பதிலாக களமிறங்கிய கோலி

விராட் கோலி

பட மூலாதாரம், jewel samad

2008ஆம் ஆண்டில் நடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் சச்சின் காயமடைந்த பிறகு, 12வது ஆட்டக்காரராக இருந்த கோலி அணியில் முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். அந்த போட்டியில் அவர் 12 ரன்கள்தான் எடுத்தார்.

ஆனால், அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தது தனிக்கதை.

ஆனால், இன்றும் சச்சின் டெண்டுல்கருடன் இவரை ஒப்பிட்டே சமூக வலைதளங்களில் சிலாகிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

கோலியின் மறுபக்கம்

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

2013இல் சாம்பியடன்ஸ் ட்ராஃபியை இந்தியா வென்றபோது, கங்ணம் பாணியில் நடனமாடி கோலி கொண்டாடினார். இந்தியா வென்றால் கோலி கங்ணம் பாணி நடனம் ஆட வேண்டும் என்று மேற்கிந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் விடுத்த சவாலுக்கு பதில்கூறும் வகையில் கோலியின் நடனம் அமைந்தது.

இந்த நிகழ்வு மைதானத்தில் ஆக்ரோஷமான மற்றும் இலக்கே குறியான வீரராக கோலி இருந்தபோதிலும், நகைச்சுவை மற்றும் வேடிக்கைகளில் ஆர்வம் உள்ளவர் என்பதை காட்டுகிறது.

காதலியை இங்கிலாந்து அழைத்து சென்ற கோலி

விராட் கோலி

பட மூலாதாரம், AFP

இரண்டு வருடத்திற்கு முன்பு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கரம் பிடித்தார் கோலி.

ஐந்து ஆண்டுகளாக அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வந்தார். அவர்களின் காதல் விவகாரம் கிசுகிசுப்புகளின் தலைப்பாக மாறி விவாதிக்கப்பட்டு வந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியின்போது, அனுஷ்காவை தன்னோடு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென பிசிசிஐயிடம் விராட் கோலி கோரியிருந்தார்.

விளையாட்டு வீரர்கள் தங்களின் காதலியை வெளிநாட்டு பயணங்களின்போது அழைத்து செல்லக்கூடாது என்ற நியதி இருந்தபோதும், பிசிசிஐ விதிகளை தளர்த்தி, இங்கிலாந்து போட்டியின்போது விராட் கோலியுடன் அனுஷ்கா செல்ல அனுமதி அளித்திருந்தது.

சேஸிங் கிங் கோலி

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக முதலில் பேட்டிங் செய்யும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால், இரண்டாவது பேட் செய்யும்போது சிறப்பாக சோபிப்பதில்லை என்ற கருத்தை தகர்த்தவர் கோலி. குறிப்பாக 2012இல், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு போட்டி தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா 40 ஓவரில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை, விராட் கோலி அன்று ஆடிய ஆட்டம் ருத்ர தாண்டவம் என்றே கூறவேண்டும்.

86 பந்தில் 133 ரன்களை அவர் குவித்தார். அந்த போட்டியில் இந்தியா வெல்ல அதுதான் தொடக்கமாக இருந்தது. அண்மையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடர் வரை சேஸிங்கில் தனது பங்களிப்பு மூலம் பல போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறவைத்தவர் கோலி. அதனால் அவர் 'சேஸிங் கிங்' என்றழைக்கப்படுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :