வாழ்க்கையில் வறுமை: இலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர் - கச்சிதமாக நிறைவேறிய திட்டம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "இலவச உணவுக்காக சிறை செல்ல முடிவெடுத்தவர்"
சிறையில் இலவசமாக உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்கும் என்பதால், சிறைக்கு செல்லும் நோக்கில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் செய்தி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு இரண்டு முறை திருமணம் ஆகியும், இரண்டுமே தோல்வியில் முடிந்தன. மன அழுத்தத்தால் வேலையில் இருந்தும் விலகி விட்டதால் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கே சிரமப்பட வேண்டிய சூழல் உருவானது.
இதனால் சிறைக்கு செல்ல திட்டமிட்டார் சந்தோஷ். ஞாயிறன்று சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அவர், தம்மை 'இப்ராஹிம்' என்று அடையாளப்படுத்திக்கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
சிறிது நேரம் கழித்து அழைத்து ஈரோடு பேருந்து நிலையத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அழைப்பு வந்த எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தியதில், அது சிவகுமார் என்பவரது பெயரில் இருந்தது தெரியவந்தது.
சிவகுமாரை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த எண்ணை சிவகுமாரின் மைத்துனர் லிங்கராஜ் பயன்படுத்துவது தெரியவந்தது.
லிங்கராஜையும் ஒரு வழியாகக் கண்டுபிடித்தால், அவரது செல்பேசி தொலைந்துபோனது தெரியவந்தது.
எண் பயன்படுத்தும் செல்பேசி சிக்னலை வைத்து நடந்த, தீவிர தேடுதலுக்குப் பிறகு, திங்கள் மதியம் இரண்டு மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்தில் படுத்திருந்த சந்தோஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவை அனைத்தும் சந்தோஷ்குமார் திட்டமிட்டு செய்ததாகவும், அவரது திட்டம் நிறைவேறி இப்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

தினமணி: "வேலைவாய்ப்பக பதிவுதாரர்கள் எண்ணிக்கை 69 லட்சம்"

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 69 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவல்களை தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி பதிவு செய்தோரின் எண்ணிக்கை 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 ஆக உள்ளது. அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 19 லட்சத்து 19 ஆயிரத்து 827 ஆகவும், 19 முதல் 23 வயதுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 12 லட்சத்து 34 ஆயிரத்து 513 ஆகவும் உள்ளனர்.
24 முதல் 35 வயதுள்ளவர்களில் அரசுப் பணிக்காக 25 லட்சத்து 88 ஆயிரத்து 180 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரா்களாக 11 லட்சத்து 51 ஆயிரத்து 877 பேரும் உள்ளனர். 58 வயதுக்கு மேற்பட்டோர் 7 ஆயிரத்து 681 போ் என மொத்தம் 69 லட்சத்து 2 ஆயிரத்து 78 போ் மொத்த பதிவுதாரா்களாக உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் அதிகளவு உள்ளனர். குறிப்பாக, இளநிலை பட்டதாரிகளில் கலைப் படிப்புகள் படித்தோர் 4.17 லட்சமும், அறிவியல் படிப்பு படித்தோர் 5.5 லட்சமும், வணிகவியல் படித்தோர் 2.86 லட்சமும், பொறியியல் படித்தோர் 2.23 லட்சமும் உள்ளனர்.
பத்தாம் வகுப்பு படித்தோர் 51.46 லட்சமும், பிளஸ் 2 படித்தோர் 31.33 லட்சம் பேரும் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி: "ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது"
ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றிய கணக்கெடுக்கும் பணியை தொடங்க அனைத்து தாசில்தார்களுக்கும், அந்தந்த கலெக்டர்கள் அலுவலகம் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை வசூலிக்கும் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டதின் பேரில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விடுதலை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சமயத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், அவர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மறுசீராய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், 'ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை யாரிடம் வசூலிப்பது?', என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சொத்துகள் என்ன ஆகும்? என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்பும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் கலெக்டர் கள் அலுவலகத்தில் இருந்து அனைத்து தாசில்தார்களுக்கும் இதுதொடர்பாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் ஏதும் இருந்தால் அதன் விவரத்தையும், இல்லை என்றால் 'இனம் இல்லை' என்று குறிப்பிட்டு பதில் அனுப்பிட வேண்டும்', என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்கவே, அவருக்கு சொந்தமான சொத்துகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்து தமிழ்: "தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது"

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்குச் சாதகமான தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி) இந்தியா இணையாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஆசியான்-இந்தியா மற்றும் ஆசியான் உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயண மாக கடந்த 2-ம் தேதி தாய் லாந்து சென்றார். தென்கிழக்கு ஆசியாவின் 10 நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப் பின் 35-வது உச்சி மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று 14-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (ஆர்.சி.இ.பி.) நடைபெற்றது. ஆர்.சி.இ.பி. அமைப்பில் ஆசியான் அமைப் பின் 10 நாடுகளும், சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 16 நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற் படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் சீனாவுக்குச் சாதகமாக உள்ளது. அந்த நாட்டிலிருந்து இதர உறுப்பு நாடுகளுக்கு அதிக அளவில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரி விக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் கருத்தை ஆமோதித்தன.
இந்நிலையில் பாங்காக்கில் நேற்று நடந்த ஆர்.சி.இ.பி. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, "ஒட்டு மொத்த இந்தியர்களின் நலன் களை கருத்திற் கொண்டு ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தை ஆய்வு செய்தபோது சாதகமான பலன் கள் தென்படவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்கை, எனது மனசாட்சி, ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இணைய ஒப்புக் கொள்ள வில்லை" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து இந்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, "ஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் கையெழுத்தானால் சீனாவிலிருந்து குறைந்த விலையில் வேளாண் மற்றும் தொழில் துறை சார்ந்த பொருட்கள் இதர உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு மட்டுமே சாதகமாக அமையும்" என்று தெரிவித்தன.
இந்த மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை நேற்று சந்தித்துப் பேசினார். அப் போது, இந்தோ-பசிபிக் பகுதியின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்தனர். குறிப்பாக, இப் பகுதியில் ராணுவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைச் சீனா விரிவுபடுத்தி வருவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் இருதரப்பு உறவைப் பலப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












