வறுமை ஒழிப்பு தினம்: உண்மையில் உலகில் ஏழ்மை குறைந்து வருகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பாப்லோ உச்சோயா
- பதவி, பிபிசி உலகச் சேவை
ஒரு தலைமுறைக்கும் குறைந்த காலத்திற்குள் 1.1 பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் ``ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்'' என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல், இந்த நூற்றாண்டில் உலகத்தின் வளமை பற்றிய மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாக இது உள்ளது.
1990க்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்,சர்வதேச வறுமைக்கோட்டுக்கு கீழே (தினசரி வருமானம் சுமார் 1.90 டாலர்) வாழும் மக்களின் எண்ணிக்கை 1.9 பில்லியனில் இருந்து 735 மில்லியனாகக் குறைந்துள்ளது.
அதாவது வரையறையின்படி, ஏழ்மையில் உள்ள மக்கள் தொகையின் பங்கு அதே காலக்கட்டத்தில் 36 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆனால் ஏழ்மைக்கு எதிரான நடவடிக்கை அதற்கு இணையாக இல்லை. வறுமைக் கோடு வரையறையை உருவாக்கிய பொருளாதார நிபுணர், ``பரம ஏழைகளைப் போதிய அளவுக்கு சென்றடையும் வகையில்'' இப்போதைய வளர்ச்சிக் கொள்கைகள் இல்லை என்று பிபிசியிடம் கூறினார்.
``வறுமைக்கு எதிரான முன்னேற்றம் மற்றும் பரந்த சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, சமத்துவமற்ற நிலை அதிகரித்து வருவது பெரிய சவாலாக உள்ளது'' என்று ஆராய்ச்சிப் பிரிவின் முன்னாள் இயக்குநர் மற்றும் உலக வங்கி மூத்த துணைத் தலைவரான மார்ட்டின் ரவல்லியன் கூறியுள்ளார்.
'இரண்டு வேகங்கள்'
பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி இல்லாதது, பொருளாதார மந்த நிலை மற்றும் மிக சமீப காலமாக போர் ஆகியவை சில நாடுகளில் முன்னேறத்துக்குத் தடைகளாக இருந்துள்ளன என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவிலும், இந்தியாவிலும் சேர்த்து ஒரு பில்லியன் பேர் ஏழ்மை என்ற பட்டியலில் இருந்து மேலே வந்துள்ளனர். சஹாரா பாலைவனத்துக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க பகுதியில் இந்த எண்ணிக்கை 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
``கடந்த பத்து ஆண்டுகளில் உலக நாடுகள் இரண்டு மாறுபட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது'' என்று உலக வங்கியில் ஏழ்மை மற்றும் சமத்துவ உலக செயல்பாட்டுப் பிரிவின் உலகளாவிய இயக்குநராக உள்ள கரோலினா சாஞ்செஸ்-பரமோ கூறியுள்ளார்.
இதற்கு கீழ்க்கண்ட நான்கு காரணிகள் இருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
1. பொருளாதார வளர்ச்சியின் மாறுபட்ட வேகங்கள்
`மிகவும் அடிப்படையான நிலையில் பார்த்தால், கிழக்கு ஆசியா அல்லது தெற்கு ஆசியாவில் இந்த கால கட்டத்தில் இருந்த வளர்ச்சியைவிட சஹாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சி வேகம் குறைவாக உள்ளது. பல நாடுகளில், மிக வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துடன் சேர்த்து இதைப் பார்த்தால், தனிநபர் வளர்ச்சி விகிதம் குறைவாகத்தான் இருக்கும்'' என்று அந்தப் பெண் இயக்குநர் தெரிவித்தார்.
``நாடுகள் வளர்ச்சி அடையாவிட்டால், ஏழ்மையைக் குறைப்பதில் முன்னேற்றம் காண்பது கடினம். ஏனெனில் பெருமளவில் ஏழ்மை குறைப்பால் கிடைக்கும் முன்னேற்றம், மறு பகிர்வாக சென்றுவிடுவதால், ஒட்டுமொத்த வளர்ச்சி காண்பது மிகவும் கடினம்'' என்கிறார் அவர்.
2. பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி
ஏழ்மையைக் குறைப்பதற்கு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி ``அவசியமான நிபந்தனையாக'' உள்ள நிலையில், ``அது மட்டுமே காரணியாக இருக்காது'' என்று உலக வங்கி இயக்குநர் கூறியுள்ளார்.
பல நாடுகளில் ``போதிய அளவுக்கு பங்கேற்புடன் கூடிய'' வளர்ச்சி உள்ளது. குறைந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளில் அதிக மூலதனம் வரும் சூழ்நிலைகளில் இந்த வாய்ப்பு உள்ளது - உதாரணமாக தென் சஹாரா ஆப்பிரிக்காவைக் கூறலாம்.
``ஏழைகளுக்கு உழைப்பு தான் வருமானத்துக்கான பிரதான வாய்ப்பு. எனவே தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்பு இல்லாமல் போனால், ஏழ்மை குறைவதற்கான வாய்ப்பு குறைவு'' என்று சாஞ்செஸ் பரமோ கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
3. கட்டமைப்புகளை அணுகும் வசதி
மக்களுக்கு ரொக்க வருமானம் கிடைப்பது மட்டுமின்றி, கல்வி, நிதி மற்றும் நல்ல இயற்கை கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கும் போதுதான் பொருளாதாரம் வளம் பெறும்.
அந்த நிபந்தனைகள் பூர்த்தியாகாவிட்டால், வளர்ச்சியில் பங்கேற்பை அது பாதிக்கும் என்று சாஞ்செஸ் பிரமோ குறிப்பிடுகிறார்.
உதாரணமாக, மலேசியாவில் மற்றும் ஒட்டுமொத்த தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில், "கல்வி, நிதி போன்ற இந்த வசதிகள் பல ஒரே காலக்கட்டத்தில் முன்னேறியுள்ளன'' என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச தர நிலைகளின்படி, மலேசியாவில் ஏழ்மை நிலை 2013ல் இருந்து பூஜ்யமாக உள்ளது - அந்த நாட்டின் தர நிலையில் அப்படி இல்லை.
இதற்கு மாறாக, பணம் பட்டுவாடா செய்யும் வெற்றிகரமான திட்டம் இருந்தபோதிலும், பிரேசிலில் ஏழ்மை நிலை 1990ல் 21.6 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2014ல் 2.8 சதவீதம் என குறைந்தது - ஆனால் மீண்டும் அது அதிகரித்து 2017ல் 4.8 சதவீதத்தைத் தொட்டுள்ளது (இதனால் 10 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.)
4. மோதல்
இறுதியாக, சில நாடுகளில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் சமீப ஆண்டுகளாக, அரசியல் மற்றும் வன்முறை மோதல்களால் அழிக்கப்பட்டுள்ளன.
"அதே சமயத்தில், பதற்றமாக உள்ள மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஏழ்மை தீவிரமடைந்து வருகிறது. ஏனெனில் வேறு சில நாடுகள் சமாளித்து முன்னேறி வருகின்றன'' என்கிறார் சாஞ்செஸ் பரமோ.
2015ல் உலகின் ஏழைகளில் பாதி பேர் ஐந்து நாடுகளில் - இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, வங்கதேசத்தில் - இருந்தனர்.
சமீபத்திய கணிப்புகளின்படி அதிக மக்கள் ஏழ்மையில் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை விட நைஜீரியா முந்திவிட்டது அல்லது முந்தும் நிலையில் உள்ளது என தெரிய வந்துள்ளது - இரு நாடுகளிலும் ஏழ்மையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் சற்று குறைவாக உள்ளது.
ஏழ்மைக்கு எதிரான போரில் பல ஆப்பிரிக்க நாடுகள் நல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், 2030 ஆம் ஆண்டுக்குள் தினம் 1.90 டாலர் அல்லது அதற்கு குறைவன வருவாய் உள்ள 10 பேரில் 9 பேர் சஹாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பரம ஏழைகளுக்கு பயன்கள் கிடைக்கச் செய்தல்
2030 ஆம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொலைநோக்கு வளர்ச்சி இலக்கு. ஆனால் ஜூலையில் வெளியான அதனுடைய அறிக்கை, அந்த கெடு ஆண்டு வரும்போது உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் சர்வதேச ஏழ்மை நிலைக்குக் கீழே வசிப்பார்கள் என்று தெரிவிக்கிறது.
மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே ஏழ்மை நிலைக்கு கீழே இருக்கும் வகையில் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று உலக வங்கி, சற்று தாராளமாகவே இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இப்போதைய நிலவரத்தின்படி பார்த்தால் அதை எட்ட முடியாது என்று தெரிகிறது.
வளர்ச்சிக்கான இப்போதைய கொள்கைகள், ``ஏழைகளுக்கு சரிப்பட்டு வரும், ஆனால் பரம ஏழைகளுக்கு உதவாது'' என்று ரவல்லியன் கூறுகிறார்.
``மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு பயன்கள் கிடைப்பதில்லை'' என்று அவர் நம்புகிறார்.
``இன்றைய உலகில் பணக்கார நாடுகள் பற்றி நீங்கள் திரும்பிப் பார்த்தால், 200 ஆண்டுகளுக்கு முன்பு அவை இன்றைய ஆப்பிரிக்காவின் நிலைமையில் இருந்தன.''
``மிகவும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு திட்டங்களின் பயன்கள் மெல்ல ஆனால், சிறப்பாகக் கிடைப்பதை உறுதி செய்ததால் அந்த நாடுகள் ஏழ்மையில் இருந்து மீண்டன. இப்போது அதற்கு எதிரான வளர்ச்சி காணப்படுகிறது.''
பணக்கார நாடுகள் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி, திறனை வளர்த்துக் கொண்டன.
``அந்த விஷயத்தில்தான் வளரும் நாடுகள் இப்போது பின்தங்கியுள்ளன. ஏழ்மையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை வேகமாகக் குறைப்பதில் அவை நன்கு செயல்படுகின்றன. ஆனால் பரம ஏழைகளுக்கு அவை சென்றடைவதில் சிறப்பாகச் செயல்படவில்லை'' என்று ரவல்லியன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஏற்றத்தாழ்வு என்னும் சவால்
ஒரு நாளுக்கு 1.90 டாலர் என்பது சமூகங்களில் மிகுந்த ஏழ்மையில் உள்ளவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ``மிகவும் குறைந்த ஏழ்மை நிலை'' என்று ரவல்லியன் தெரிவித்தார்.
ஆனால் குறைந்த வருவாய் நாடுகள் முன்னேறி, நடுத்தர வருவாய் நாடுகளின் நிலைக்கு உயரும்போது, சமத்துவமின்மை அதிகரிப்பதால் புதிய வருவாய் நிலைகளின் அடிமட்டத்தில் இருந்து மிகுந்த ஏழைகள் முன்னேறுவது கடினமாக இருக்கிறது.
``உண்மையான நிலையின்படி ஏழ்மையில் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நாம் காணும்போது, அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள கணக்கீட்டு நிலைகளின்படி பரம ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது'' என்று அவர் கூறுகிறார். ``எனவே சமத்துவமற்ற நிலை அதிகரிப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. ஏழ்மை மற்றும் பரந்த சமூக முன்னேற்றம் என்ற வகையில் இது பெரிய சவாலாக இருக்கும்.''
சமத்துவம் என்பது வருவாயை மட்டும் குறிப்பிடுவதாக இல்லை என்று சாஞ்செஸ் பரமோ குறிப்பிடுகிறார். ``மிக முக்கியமாக, வாய்ப்புகளில் சமத்துவம் கிடைக்கவேண்டும். இப்படி ஆடுகளம் சமச்சீராக இருந்தால், நீங்கள் ஏழையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், புதிய முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் மூலம் பலன் பெறமுடியும்.
நீங்கள் ஏழையாக இருந்தாலோ அல்லது புதிய வாய்ப்புகளையும் முதலீடுகளையும் பெறும் நிலையில் இருந்தாலும் சம அளவில் வாய்ப்பு கிடைப்பதைப் பொருத்தும் அமையும்'' என்கிறார்.
``ஏழ்மைக் குறைப்பு என்று வரும்போது, வாய்ப்புகள் கிடைப்பதில் சமத்துவமின்மை ஏற்பட்டால் அதுதான் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்'' என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












