இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்

- எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வம்சாவளித் தமிழரின் பிரவேசம் அமைந்துள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரண்டு தமிழர்கள் களமிறங்கியுள்ள போதிலும், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக களமிறங்கியுள்ளார் சுப்ரமணியம் குணரத்னம்.
யார் இந்த சுப்ரமணியம் குணரத்னம்?
கொழும்பில் 1973அம் ஆண்டு பிறந்த சுப்ரமணியம் குணரத்னம், பம்பலபிட்டி இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை தொடர்ந்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை அடுத்து, குணரத்னம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகம் நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மதுரை சேதுபதி உயர்நிலை கல்லூரியில் உயர்நிலை கல்வியை தொடர்ந்த குணரத்னம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த குணரத்னம், 1995ஆம் ஆண்டு தாய்நாடு நோக்கி திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் தனது வாழ்க்கை ஊடகத்துறைக்காக 15 வருடங்கள் அர்ப்பணித்ததுடன், கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூக திட்டங்களையும் குணரத்னம் முன்னெடுத்து வந்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இலங்கை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிப்பிற்காக எண்ணத்தை ஊக்குவிக்கும் நோக்குடனேயே தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாக கூறிய குணரத்னம், வெற்றி பெறும் எண்ணத்துடன் தான் களமிறங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் இனபரம்பல் ரீதியில் தமிழ் பேசும் சமூகம், பெரும்பான்மை சிங்கள சமூகத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலொன்றில் வெற்றி பெறுவது பாரிய சவால் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், மக்கள் மத்தியில் செயலிழந்து காணப்படுகின்ற வாக்களிப்பிற்கான உரிமையை ஊக்குவிக்கும் நோக்கத்தை வலுப்படுத்தும் எண்ணத்துடனேயே தான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 6 சிறுபான்மையினர் போட்டியிடுகின்ற நிலையில், அவர்களை விடவும் முன்னிலை வகிக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றீர்கள்?
பெரும்பான்மை சிங்கள வேட்பாளர்களுக்கும், தமிழ் பேசும் வேட்பாளர்களுக்கும் சவால் விடுக்கும் நோக்குடன் தான் இந்த தேர்தல் களத்தில் இறங்கவில்லை என சுப்ரமணியம் குணரத்னம் கூறுகின்றார்.
தன்னை தவிர்ந்து ஏனைய தமிழ் பேசும் ஐவரையும் முன்னிலைப்படுத்திக் கொண்டு வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணம் தமக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
ஜனாதிபதித் தேர்தல் என்பதை முன்னிலைப்படுத்தி, மக்களுக்கு தேர்தல் தொடர்பில் எவ்வாறான விழிப்புணர்வை வழங்க முடியும் என்பதனை முன்னிலைப்படுத்தியே இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''கண்டிப்பாக வாக்களியுங்கள்" என்ற தொனிப்பொருளின் கீழ் தமது பிரசாரம் தொடரும் என கூறிய அவர், அது எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை எனவும் கூறுகின்றார்.
இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக தமது உரிமைக்கான போராட்டத்தை நடத்தி வருகின்ற நிலையில், அவர்களின் உரிமைகளை வென்று கொடுப்பதற்கான நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்?
வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் அதனையும் தாண்டி வாழ்கின்ற இலங்கை வாழ் தமிழர்களுக்கு போதியளவு உரிமைகள் உள்ளதாக இந்திய வம்சாவளித் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சுப்ரமணியம் குணரத்னம் தெரிவிக்கின்றார்.
அரசியல் உரிமை என்ற ஒரு விடயத்தை முன்னிலைப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஒரு பதற்ற நிலையிலேயே வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அரசியல் உரிமை என்ற பதற்ற நிலைமையிலிருந்து தமிழ் மக்களை வெளியில் கொண்டு வர தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை என கூறுகின்றார் குணரத்னம்.
அரசியல் உரிமைகளை தவிர, தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு பல விடயங்கள் இருந்தாலும், அரசியல் செய்வதற்கு அரசியல் உரிமை என்ற ஒரு வசனத்தை பயன்படுத்தி, மக்களை பதற்றத்திற்குள் வைத்திருக்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
தமிழ் மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை இல்லாதமையினால், இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்களே பார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிடுகின்றார்.
மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொள்ளாது, தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்தை மாத்திரமே கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் நீங்கள் முதலில் முன்னெடுக்க எதிர்பார்க்கின்ற பணி என்ன?
நாட்டின் கல்வி மற்றும் பாதுகாப்பு தொடர்பிலேயே கவனம் செலுத்துவதே தனது முதலாவதும், முக்கியமானதுமான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆசிரியர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரை சரியான முறையில் நடத்தும் பட்சத்தில் ஒரு நாடு சிறந்ததொரு நிலைக்கு செல்லும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

தனது வாழ்க்கையின் கசப்பான தருணத்தையும் தெளிவூட்டினார் குணரத்னம்.
இலங்கையில் வாழ்ந்த ஒரு தொகுதி தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட கசப்பான தருணங்களும் பதிவாகிய நாடு என்ற போதிலும், தமிழர்கள் இன்று ஓரளவிற்கு சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக சூழ்நிலை உருவாகியுள்ளதாக சுப்ரமணியம் குணரத்னம் குறிப்பிடுகின்றார்.
30 வருட யுத்தக் காலத்தில் தமிழ் மக்களை இந்த நாடு பார்த்த விதம் வேறு, தற்போது பார்க்கின்ற விதம் வேறு என கூறுகின்ற குணரத்னம், அந்த நிலைமையை ஒரே தடவையில் மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த நிலையில், இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்துடன் தமது குடும்பத்தினர் எந்தவிதத்திலும் தொடர்புப்படாத நிலையில், இறுதியில் தமது குடும்பமும் அதனால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொழும்பில் வைத்து தனது தந்தை காணாமல் போனதாகவும், இதுவரை அவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்நிலையில், தானும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவன் என்ற வகையில், தமிழ் மக்களின் வலிகளை உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமிழர்களுக்கு இவ்வாறு ஏற்பட்ட வலிகளை மறந்து, எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டிய காலம் எட்டியுள்ளதாக இந்திய வம்சாவளித் தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சுப்ரமணியம் குணரத்னம் பிபிசி தமிழுக்கு கூறுகின்றார்.
பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












