இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு: 35 பேர் போட்டி

பட மூலாதாரம், Getty Images
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை இன்று நிறைவு பெற்றது.
இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதன்போது 35 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருந்தனர்.
நேற்றைய தினத்துடன் நிறைவு பெற்ற கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையின் போது, தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில், அவர்களில் 6 பேர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு வேட்பு மனுத் தாக்கல் செய்யாதவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குகின்றனர்.
இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேட்பு மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த எதிர்ப்பு தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.
வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள் பட்டியலில் பிரகாரம், வரலாற்றில் முதற்தடவையாக ஆட்சியிலுள்ள ஜனாதிபதியொருவரும், பிரதமர் ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரும் போட்டியிடாத முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஆட்சியிலுள்ள ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், அமைச்சர் சஜித் பிரேமதாஸ புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு - புதுக்கடை பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியும், தந்தையுமாகிய ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, சஜித் பிரேமாஸ வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

பட மூலாதாரம், GOTABAYA RAJAPAKSA/FACEBOOK
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி அமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
8-வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
01.சமரவீர வீரவன்ன
02.ஜயந்த கெடகொட
03.சிறிதுங்க ஜயசூரிய
04.பத்தரமுல்லே சீலரதன தேரர்
05.கலாநிதி அஜந்தா பெரேரா
06.சமன்சிறி ஹேரத்
07.ஏ.எஸ்.பீ.லியனகே
08.எம்.கே.சிவாஜிலிங்கம்
09.சமன் பிரசன்ன பெரேரா
10.சிறிபால அமரசிங்க
11.பத்தேகமகே நந்தமித்ர
12.சரத் கீர்த்திரத்ன
13.அசோக வடிகமங்காவ
14.துமிந்த நாகமுவ
15.அஜந்த டி சொய்சா
16.சமிந்த அநுருத்த
17.மில்ரோய் பெர்ணான்டோ
18.மொஹமட் ஹசன் அலவி
19.ரொஹான் பல்லேவத்த
20..நாமல் ராஜபக்ஷ
21.அபருக்கே புண்ணியநந்த தேரர்
22.வஜிரபானி விஜேசிறிவர்தன
23.அநுர குமார திஸாநாயக்க
24.அருண டி சொயிசா
25.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
26.இல்லியாஸ் மொஹமட்
27.பியசிறி விஜேநாயக்க
28.கலாநிதி ரஜீவ விஜேசிங்க
29.சரத் மனமேந்திர
30.சுப்ரமணியம் குணரத்னம்
31.சஜித் பிரேமதாஸ
32.மஹேஷ் சேனாநாக்க
33.கோட்டாபய ராஜபக்ஷ
34.பிரியந்த எதிரிசிங்க
35.ஆரியவங்ச திஸாநாயக்க
வேட்பாளர்கள் தொடர்பிலான இறுதி அறிவிப்பின் பின்னர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உரை நிகழ்த்தினார்.

இந்த முறை தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமையினால், தேர்தலுக்காக 400 முதல் 500 கோடி ரூபா வரை செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மஹிந்த தேசபிரிய கூறினார்.
தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு
ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டதன் பின்னர் அதனை ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளை தாம் பிரதானமாக ஆராய்வதாக கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்கும் பட்சத்தில் தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என தான் நம்புவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் அறிவித்திருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குகின்றது.
இதேவேளை, இந்திய முறையிலான தீர்வுத்திட்டம் வழங்கப்படும் வேட்பாளருக்கு, தான் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவிக்கிறார்.
இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஜஸவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
எனினும், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான 32 பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்கும் வேட்பாளருக்கு தமது ஆதரவு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












