அரபு சிறைச்சாலைகள், மறுக்கப்படும் எச்.ஐ.வி சிகிச்சை - என்ன நடக்கிறது? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
அரபு சிறைச்சாலைகள், மறுக்கப்படும் ஹச்.ஐ.வி சிகிச்சை
ஐக்கிய அமீரக சிறைச் சாலைகளில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு உயிர்காக்கும் எச்.ஐ.வி சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
துபாய் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தங்களுக்கு சிகிச்சை தாமதிக்கப்படுகிறது, இடையூறு கொடுக்கிறார்கள் அல்லது முற்றாக மறுக்கிறார்கள் என மனித உரிமை அமைப்புகளிடம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்குச் சிகிச்சை உரிமை இருக்கிறதெனச் சர்வதேச சட்டங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவை மீறப்படுவதாகக் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: பெண்களுக்கு நாப்கின் இலவசம் என்று வாக்குறுதி தந்த சஜித் பிரேமதாஸ

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார்.
திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார்.
உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான நாப்கின்கள் வாங்க முடியாத பெண்களுக்கு, அவற்றினை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
விரிவாகப் படிக்க:பெண்களுக்கு நாப்கின் இலவசம்: சஜித் பிரேமதாஸ தேர்தல் வாக்குறுதி

தெலங்கானா பெண் தாசில்தார் விஜயா ரெட்டியை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே ஒரு விவசாயி தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் விஜயா ரெட்டி என்ற அந்த பெண் வட்டாட்சியர் உயிரிழந்தார்.
ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபுர் மெட் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவரே விஜயா ரெட்டியை தீயிட்டுக் கொளுத்தியவர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
விரிவாகப் படிக்க:பெண் தாசில்தாரை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி

டெல்லி காற்று மாசுபாடு உச்சம் தொட்டதால் கார்களைப் பயன்படுத்த கட்டுப்பாடு

பட மூலாதாரம், AFP
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அளவு ஞாயிற்றுக்கிழமை கட்டுக்கடங்காமல் சென்று புதிய உச்சத்தைத் தொட்டது. இதையடுத்து மாசுபாடு அளவைக் குறைக்கும் நோக்கத்துடன் கார் பயன்பாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்களை கொண்ட தனியார் கார்கள் நவம்பர் 4 முதல் 15 வரை சுழற்சி முறையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாட்டு விதிமுறை 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளிலும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறதா என தெளிவாகத் தெரியவில்லை.

"நான் காட்டிக் கொடுத்ததாக பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை": கருணா அம்மான்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை அடுத்து, இந்திய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பகைத்துக்கொண்டதாக கூறிய கருணா அம்மான், அதனூடாகவே தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
விரிவாகப் படிக்க:"நான் காட்டிக் கொடுத்ததாக பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை": கருணா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












