டெல்லி காற்று மாசுபாடு உச்சம் தொட்டதால் கார்களைப் பயன்படுத்த கட்டுப்பாடு

air pollution

பட மூலாதாரம், AFP

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அளவு ஞாயிற்றுக்கிழமை கட்டுக்கடங்காமல் சென்று புதிய உச்சத்தைத் தொட்டது. இதையடுத்து மாசுபாடு அளவைக் குறைக்கும் நோக்கத்துடன் கார் பயன்பாட்டில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்களை கொண்ட தனியார் கார்கள் நவம்பர் 4 முதல் 15 வரை சுழற்சி முறையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாட்டு விதிமுறை 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளிலும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறதா என தெளிவாகத் தெரியவில்லை.

PM 2.5 என்று அழைக்கப்படுகின்ற காற்றில் உள்ள ஆபத்தான நுண் துகள்களின் அளவு, எதிர்பார்த்ததை விட தற்போது அதிகமாக உள்ளது.

''ஒற்றை - இரட்டை இலக்கத் திட்டம்'' என்று அழைக்கப்படும் கார் பயன்பாட்டு கட்டுப்பாடு விதிமுறைகள் சாலைகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான கார்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகிறார். இந்த ஆணையை மீறுகிறவர்களுக்கு ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும். இது முந்தைய ஆண்டுகளை விட இரு மடங்கு அதிகம்.

பொதுப் போக்குவரத்து, அவசர வண்டிகள், டாக்சிகள் மற்றும் இரு சக்கர வண்டிகள் செயல்பட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியாக வண்டி ஓட்டும் பெண்களுக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது.

ஆனால் இந்த திட்டம் தூசியைக் குறைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் டெல்லியில் போக்குவரத்து நெரிசலைக் கடுமையாகக் குறைத்தன, ஆனால் காற்றுமாசு அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

air pollution

பட மூலாதாரம், Getty Images

டெல்லியின் இந்த திட்டம் மூன்றாவது முறையாக சில மாற்றங்களுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் போக்குவரத்து துறையினர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் இந்த விதியை சரியாக நடைமுறைப்படுத்த குழுக்களாக செயல்படுகின்றனர். இது போக்குவரத்தில் கூடுதல் நெருக்கடி ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் இத்தகைய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்கத் தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தூசிப் படலத்துக்கு என்ன காரணம்?

இந்த சமயத்தில் காற்று மாசு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் அருகில் உள்ள மாநிலங்களில் விவசாய நிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதே. இதனால், கரியமில வாயு, நைட்ரஜன் டை-ஆக்சைடு, கந்தக டை-ஆக்சைடு ஆகியவை காற்றில் கலக்கும். மேலும், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டதும் ஒரு முக்கிய காரணம்.

air pollution

பட மூலாதாரம், Getty Images

அதோடு, வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கட்டுமான வேலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை என அத்தனையும் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கி இருக்கிறது.

அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகியவை பயிர்க் கழிவுகள் எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேஜ்ரிவால் இந்த பிரச்சினையை அரசியலாக்குவதாகவும் அவரது அண்டை மாநிலங்களை "வில்லன்களாக" சித்தரிப்பதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார்.

ஆனால், மழை பெய்தால் காற்று மாசு குறையும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் வரும் வியாழக்கிழமை வரை அது சாத்தியமில்லை என்று தெரிகிறது.

புகை மாசு எவ்வளவு மோசமானது?

நகரத்தில் நிலவும் புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது. காலநிலை ஆராய்ச்சியாளரும், தி கிரேட் ஸ்மோக் ஆஃப் இந்தியாவின் ஆசிரியருமான சித்தார்த் சிங் கருத்துப்படி, டெல்லியில் உள்ள காற்றில் "இலைகளை எரிப்பது போன்ற வாசனை வீசுகிறது".

தற்போது புகை மண்டலமாக உள்ளதால், கண்கள் எரிச்சல் அடைகிறது, தொண்டை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதை எல்லோரும் உணருகின்றனர்.

air pollution

பட மூலாதாரம், Getty Images

அதிகாரபூர்வ அளவுகோளின்படி PM2.5 என அழைக்கப்படும் காற்றில் உள்ள ஆபத்தான துகள்களின் அளவு கணிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இதே போன்ற காற்று மாசு பிரச்சனையை எதிர்கொண்ட சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்த PM 2.5 அளவை விட ஏழு மடங்கு அதிகமாக உள்ளது.

நகரத்தின் மாசு கண்காணிப்பாளர்களுக்கு மாசு அளவை துல்லியமாக பதிவு செய்ய போதுமான இலக்கங்கள் இல்லை, இது ஒரு "பேரழிவு" என்று இந்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், மற்றும் இதய நோய்களால் இறப்பவர்கள் மூன்றில் ஒரு பங்கினர் காற்றுமாசினால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த மாசு புகை பிடிப்பதற்கு நிகரான விளைவைக் கொண்டிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது..

டெல்லியில் கார் ஓட்டுகிறவர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள்

ஒற்றை மற்றும் இரட்டைப்படை எண்கள் கொண்ட தனியார் கார்கள் நவம்பர் 4 முதல் 15 வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது நம்பர் பிளேட் எண் 1, 3,5,7,9ல் முடிவடைந்தால், ஒற்றைப்படை தேதிகளில் (5,7,9,11,13, 15) மட்டுமே ஓட்ட முடியும். 0, 2,4,6,8 ஆகிய எண்களில் முடிந்தால் இரட்டைப்படை தேதிகளில் (4,6,8,12 மற்றும் 14) மட்டுமே கார்களை இயக்க முடியும்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் உள்ளன, மேலும் நகரத்திற்கு வெளியில் இருந்து வரும் கார்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஞாயிற்றுக்கிழமை விதிகள் இன்றி அனைத்து கார்களும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

air pollution

பட மூலாதாரம், Getty Images

டெல்லி முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படவில்லை, இருப்பினும் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் நீண்ட பட்டியல் உள்ளது..

  • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பல மூத்த அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் உட்பட அனைத்து வி.ஐ.பிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தனியாக பெண்கள் வாகனம் ஓட்டினாலும் , பெண் பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்லும் வாகனங்கள், 12 வயது வரை சிறுவர்கள் இருந்தாலும் வாகனங்கள் எண் கட்டுப்பாடு இன்றி அனுமதிக்கப்படும்.
  • ஆண் ஓட்டுனர்களை கொண்டு இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள், மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் "அவசரநிலையை நிரூபித்தால்'' அனுமதிக்கப்படும்.
  • பொது போக்குவரத்து
  • அனைத்து இரு சக்கரவாகனங்கள்.
  • டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள்
  • அவசரநிலையில் தேவைப்படும் வாகனங்கள்.
  • மாற்றுத்திறனாளிகளால் இயக்கப்படும் வாகனங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :