அயோத்தி தீர்ப்பு: உச்சக்கட்ட பாதுகாப்பு, தலைவர்கள் அறிவுரை, வெற்றி ஊர்வலங்கள் கூடாது - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "அயோத்தி வழக்கில் 13ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு"
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் வரும் 13-ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக உத்தர பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழுவை அரசியல் சாசன அமர்வு நியமித்தது.
இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். இந்தக் குழுவின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. நாற்பது நாட்கள் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதன்படி சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி நிலத்தை அரசே கையகப்படுத்திக் கொள்ள சன்னி வக்பு வாரியம் சம்மதித்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதனை இதர முஸ்லிம் அமைப்புகள் மறுத்தன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இன்று முதல் வரும் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நாட்கள் முழுமையாக நடைபெற உள்ளது. அதன்பின் 9-ம் தேதி சனி, 10-ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்களாகும். குருநானக் பிறந்த நாளையொட்டி வரும் 11, 12-ம் தேதியும் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின் வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம். ஒருவேளை அன்றைய தினம் தவறினால் 14, 15-ம் தேதிகளில் கண்டிப்பாகத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்குவார்களா அல்லது மாறுபட்ட தீர்ப்பைக் கூறுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அயோத்தி வழக்குத் தீர்ப்பை யொட்டி உத்தர பிரதேசத்தின் அயோத்தி, வாரணாசி, மதுரா நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்திருப்பதால் அந்த நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல அசாதாரண சூழ்நிலை நிலவும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது.
பிரதமர் அறிவுரை
கடந்த 27-ம் தேதி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் அமைதி காத்தனர். அதுபோல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்போதும் அமைதியைப் பேண வேண்டும்" என்று அறிவுறுத்தினார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் கூறும்போது, "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உத்தர பிரதேச அரசு தீர்ப்பை முழுமையாக அமல் செய்யும்" என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்தது. அப்போது அயோத்தி வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும் வெற்றி ஊர்வலங்களை நடத்தக் கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது.
பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடந்த 2-ம் தேதி மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு உத்தரவு
தீர்ப்புத் தேதி நெருங்கி வருவதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுத் துறை சார்பில் அனைத்து மாநில காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தீர்ப்பினால் நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகலாம். இதை எதிர்கொள்ளப் போதுமான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலர்கள், போலீஸாரின் விடுமுறை வரும் 30-ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் வரும் 30-ம் தேதிவரை போலீஸாரின் விடுமுறையை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தி தீர்ப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த 1-ம் தேதி முதல் போலீஸார் விடுமுறை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு தடை வரும் 30-ம் தேதிவரை அமலில் இருக்கும்"என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அயோத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி, மாநிலங்களின் தலைநகர்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: “பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்”
இனி கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடை, முறுக்கு போன்ற பிரசாதங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அங்கீகாரம் வழங்கும், கடவுளுக்கு படைக்கப்படும் உணவுகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற (blissful hygiene offering to god) சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
இதன் முதல்கட்டமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 46 பெரிய கோயில்களில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கோயில்கள், குருவாத்வாராக்கள் மற்றும் மசுதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தளங்களின் வளாகங்களிலும், அங்கு உணவு தயாரிக்கப்படும் இடங்களும் சுத்தமாக இருக்கும்படியான கட்டமைப்பு இருத்தல் வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டின் துணை இயக்குநர் டி.ஆர்.செந்தில் தெரிவித்தாக விவரிக்கிறது அச்செய்தி.

தினத்தந்தி: "மாஞ்சாநூல் கழுத்தை அறுத்ததால் 3 வயது குழந்தை பலி"

பட மூலாதாரம், Getty Images/ Daily Thanthi
பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மாஞ்சாநூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுபித்ரா. இவர்களுக்கு 3 வயதில் அபினேஷ் சரவ் என்ற ஆண் குழந்தை இருந்தது.
நேற்று மாலை கோபால், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் மீனாம்பாள் நகர் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காற்றில் பறந்து வந்த காற்றாடி மாஞ்சாநூல், குழந்தை அபினேஷ்சரவின் கழுத்தில் சிக்கியது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததால் குழந்தையின் கழுத்து அறுத்தது. குழந்தையின் கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபால் மற்றும் அவருடைய மனைவி சுபித்ரா இருவரும் உடனடியாக தங்கள் குழந்தையை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை அபினேஷ் சரவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தங்கள் கண் எதிரேயே கழுத்து அறுபட்டு இறந்த குழந்தையின் உடலை பார்த்து கணவன்-மனைவி இருவரும் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சாநூல் காற்றாடியை பறக்க விட்டது யார்? என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சென்னை நகரில் காற்றாடி விடுவதற்கு மாஞ்சாநூலை பயன்படுத்தக்கூடாது என்று போலீசார் தடை விதித்து உள்ளனர்.
அதையும் மீறி சிலர் அதை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி: "வாட்ஸ் அப் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்: மத்திய அரசு அஞ்சுவது ஏன்?"

பட மூலாதாரம், Getty Images
வாட்ஸ் அப் மூலமாக இந்திய அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தை இரு நாடாளுமன்றக் குழுக்கள் ஆய்வு செய்யவுள்ளன. இதுகுறித்து, மத்திய உள்துறைச் செயலர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளிடம் அந்தக் குழுக்கள் விளக்கம் கேட்கவுள்ளன.
முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான 'வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுவதும் 150 கோடி போ் பயன்படுத்தி வருகின்றனா். இந்தியாவில் மட்டுமே அந்தச் செயலியை 40 கோடி போ் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வாட்ஸ் அப் செயலி மூலமாக, அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என 1,400-க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சா்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு ஆய்வு செய்யவுள்ளது. இதுகுறித்து ஆனந்த் சா்மா கூறுகையில், 'ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், வாட்ஸ் அப் மூலம் வேவு பாா்க்கப்பட்டது தொடர்பாக உள்துறைச் செயலர் விளக்கம் அளிப்பார்' என்றார்.
இதேபோல், காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரான சசி தரூா் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவும் இந்த விவகாரத்தை விசாரிக்கவுள்ளது. இதுகுறித்து சசி தரூா் கூறியதாவது:
வாட்ஸ் அப் செயலியைப் போன்று வேறு எந்த சமூக ஊடகத்தையும் வேவு பார்க்கப்படாமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற ஊடுருவல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும்.
தொழில்நுட்பம் காரணமாக நமது சுதந்திரம் பறிக்கப்படாமல் இருப்பதற்கு அரசு மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டும். எந்த விதத்திலும் சீனா போன்ற நாடுகளின் கண்காணிப்புக்குள் நாம் வந்துவிடக் கூடாது என்றார் சசி தரூா்.
முன்கூட்டியே தெரிவித்தது வாட்ஸ் அப்: 121 இந்தியர்கள் வேவு பார்க்கப்பட்டதாகக் கடந்த மாதமே மத்திய அரசுக்குத் தெரிவித்து விட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனம் அளித்த தகவல்கள் போதுமானதாக இருக்கவில்லை என்று கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அளித்த விளக்கத்தில் கூறப்பட்டதாவது:
வாட்ஸ் அப் செயலியில் ஊடுருவல் நடத்துவதற்கான முயற்சிகளை வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மே மாதத்தில் தடுத்து நிறுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என உலகம் முழுவதும் 1,400-க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டனர். இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பெயர் தெரியாத சில நிறுவனங்கள் வேவு பார்த்துள்ளன. ஆனால், அந்த நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப ரீதியில் உதவி செய்தாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 121 போ் வேவு பார்க்கப்பட்டனர். இதுகுறித்து மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று அந்த விளக்கத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்கெனவே அளித்த தகவல்கள் அறைகுறையாகவும், தொழில்நுட்ப வார்த்தைகள் நிரம்பியதாகவும் இருந்ததால், அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய விவரங்களை வெளியிடாத வாட்ஸ் அப்: உலகம் முழுவதும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்களின் செல்லிடப்பேசிகள், யாருடைய உத்தரவின் பேரில் உளவு பார்க்கப்பட்டன என்ற விவரத்தை வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதேபோல், இந்தியாவில் வேவு பார்க்கப்பட்ட பயனாளிகளின் விவரத்தையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
இஸ்ரேல் நிறுவனத்திடம் நேரடியாகக் கேட்கலாம்- ஒவைஸி: இந்தியர்களின் செல்லிடப்பேசி வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக, இஸ்ரேலிய நிறுவனத்திடம் மத்திய அரசு நேரடியாக விளக்கம் கேட்கலாம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வாட்ஸ் அப் செயலி மூலம் இந்தியர்களின் செல்லிடப்பேசியை இஸ்ரேலின் நிறுவனம்தான் வேவு பார்த்தது என்று தெரிந்துவிட்டது. அதன்பிறகு வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்காமல், இஸ்ரேலின் தூதருக்கு அழைப்பாணை அனுப்பி, அவர் மூலமாக அந்நாட்டு நிறுவனத்திடம் நேரடியாக மத்திய அரசு விளக்கம் கேட்கலாம். அதற்கு மத்திய அரசு அஞ்சுவது ஏன் என்று ஒவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












