இலங்கை தமிழரசுக் கட்சி: ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு - எம்.ஏ.சுமந்திரன்

இலங்கையின் பிரதான தமிழ் கட்சியாக திகழும் இலங்கை தமிழரசு கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் கட்சியின் மத்திய செயற்குழு கூடி இன்று (03.11.2019) இந்த தீர்மானத்தை எட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி வேட்பாளர்களினால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை (தேர்தல் அறிக்கை) கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளின் படி, சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்ட அறிக்கையே ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசு கட்சி என்ற விதத்தில் தாம் மாத்திரமே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி தமது நிலைப்பாட்டை எதிர்வரும் ஓரிரு தினங்களில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுமந்திரன் கூறினார்.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் கூட்டமைப்பின் தீர்மானத்தை அறிவிப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பிலேயே தமது தீர்மானம் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள், தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள், தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்தே இந்த தீர்மானத்தை எட்டியதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டத்திற்கு எதிர்ப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டத்திற்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தார்கள்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, வடகிழக்கு ஒன்றிணைந்த சமஷ்டிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்திருந்ததாக சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், இன்று ஒருமித்த பிளவுப்படாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வு என கூறி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் நடவடிக்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க சம்பந்தன் தமிழர்களை கேட்கவில்லை என்றால், தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றவர் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், பௌத்தத்திற்கு முதலிடத்தை யாரை கேட்டு கொடுத்தார்கள் எனவும் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த வாகன தொடரணி மீது பாதணியை கழற்றி தாக்குதல் நடத்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முயற்சித்துள்ளனர்.
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எம்.ஏ.சுமந்திரனிடம் இதன்போது கேள்வி எழுப்பினர்.
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தாம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி பின்னர் தெளிவூட்டுவதாக எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












