தெலங்கானா பெண் தாசில்தார் விஜயா ரெட்டியை அலுவலக அறையிலேயே எரித்துக் கொன்றவர் பலி

பட மூலாதாரம், unknown
தெலங்கானாவில் பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை அவரது அலுவலக அறையிலேயே எரித்துக் கொன்ற விவகாரத்தில், வட்டாட்சியர் மீது தீ வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் என்பவரும் தீக்காயத்தால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் அவர் வியாழக்கிழமை அவரது உயிர் பிரிந்தது.
வட்டாட்சியர் மீது தீவைத்துவிட்டு தப்பி ஓடியபோதே அவர் மீதும் தீப்பற்றி, அவருக்கு கடுமையான தீக்காயத்தை ஏற்படுத்தியதாகவும், அவர் போலீசில் பிடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபுர் மெட் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை இந்த தீ வைப்பு சம்பவம் நடந்தது.
அலுவலக அறையில் இருந்த விஜயா ரெட்டியை சந்திக்கச் சென்ற கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் உடலில் தீயுடன் தப்பி வெளியில் ஓடிவந்தார். வட்டாட்சியர் விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு ஊழியர்கள் ஓடிச் சென்றபோது அவர் உடல் முழுதும் தீப்பற்றி கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார் என சம்பவம் நடந்தபோது அலுவலக அறைக்கு வெளியே இருந்தவர்கள் கூறினர்.
இந்த விபத்தில் வட்டாட்சியரின் ஓட்டுநர் குரு நாதம் உட்பட இரண்டு பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்தவர்கள் ஹயத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் குருநாதம் செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டார்.
ரங்கா ரெட்டி மாவட்ட ஆட்சியர், ராய்ச்சகொண்டா காவல்துறை ஆணையர் மகேஷ் பகவத், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சன்பிரீத் சிங் ஆகியோர் சம்பவ இடத்தை அடைந்தனர்.


நிலம் தொடர்பான பிரச்சனைக்காக வட்டாட்சியரை சுரேஷ் சந்திக்க வந்ததாக பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினியிடம் பேசிய மகேஷ் பகவத் கூறினார். இந்த விவகாரம் குறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், முழு விவரங்கள் விரைவில் தெரியும் என்றும் மகேஷ் பகவத் தெரிவித்தார்.
மேலும் சுரேஷின் நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நடைபெற்றுவருவதாகவும், வருவாய் பதிவுகளில் நில விவரங்களை திருத்தி எழுத வேண்டும் என சுரேஷ் கோரிவந்ததாக ஒரு தகவல் உள்ளது என காவல் துறை தரப்பில் கூறுகின்றனர்.
"அதிகாரிகளின் உயிரைப் பறிப்பது மோசமான விஷயம்" - அமைச்சர்
விஜயா ரெட்டியை எரித்துக்கொன்றது குறித்து பேசிய மாநில அமைச்சர் சபிதா இந்திர ரெட்டி, வருவாய் அதிகாரிகளிடம் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதிகாரிகளின் உயிரைப் பறிப்பது மோசமான விஷயம் என்று கூறினார்.
துணை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் சங்கம் கண்டனம்
அப்துல்லாபுர்மெட் வட்டாட்சியர் விஜயா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கானா துணை மாவட்ட ஆட்சியர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் வி.லச்சி ரெட்டி மற்றும் தெலுங்கானா வட்டாட்சியர் சங்க செய்தித் தொடர்பாளர் எஸ்.ராமு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பணியிடத்தில் வட்டாட்சியர் உயிருடன் எரிக்கப்பட்டது மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது, மேலும் சக ஊழியர் பணியின்போது இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வட்டாட்சியர்கள் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












