கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை - மீண்டும் வெடித்த சர்ச்சை

GOTABAYA RAJAPAKSA

பட மூலாதாரம், GOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை சர்ச்சை மீண்டும் இலங்கையில் வலுப் பெற்றுள்ளது.

அமெரிக்க குடியுரிமையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணமொன்று நேற்றைய தினம் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டது.

அந்த ஆவணத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பிடிக்காத பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரின் பெர்ணான்டோ சமூக வலைத்தளங்களில் இந்த விடயத்தை நேற்றிரவு வெளிப்படுத்தியிருந்தார்.

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட குடியுரிமை ரத்து செய்யப்பட்டோரின் பெயர் பட்டியலையும் ஹரின் பெர்ணான்டோ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு வெளியிட்டிருந்தார்.

ஹரின் பெர்ணான்டோவின் பதிவை அடுத்து, சில விநாடிகளில் நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ எதிர் பதிவொன்றை வெளியிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தமைக்கான ஆவணங்கள் மற்றும் அமெரிக்க கடவூச்சீட்டில் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான முத்திரை அடங்கிய ஆவணங்களை நாமல் ராஜபக்ஷ வெளியிட்டார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சர்ச்சை மீண்டும் பேசுப் பொருளாக மாறியது.

உணவு தவிர்ப்பு போராட்டம்

கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.

BUDDISH THERO PROTEST

இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று நாட்களுக்குள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரியே அவர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தான் எந்தவிதத்திலும் கோட்டாபய ராஜபக்ஷ மீது கோபம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எஞ்சிய 34 வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதனால், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் இந்த விடயத்திற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வலியுறுத்தி கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை ரத்து - சட்டத்தரணியின் பதில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமை சட்ட விதிகளுக்கு உட்பட்டே ரத்து செய்ததாக அவரது சட்டத்தரணியான அலி சப்ரீ தெரிவிக்கின்றார்.

அலி சப்ரீ
படக்குறிப்பு, அலி சப்ரீ

கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விடயங்களை தெளிவூட்டினார்.

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடிமகன் என வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தமைக்கான ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு கையளித்த அனைத்து ஆவணங்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரீ குறிப்பிட்டார்.

ஹரினின் பதிவை ஃபேஸ்புக் நீக்கியதா?

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படவில்லை என தான் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தகவலை அந்த நிறுவனம் நீக்கியதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

facebook

பட மூலாதாரம், facebook

இலங்கை தேர்தலில் அமெரிக்க நிறுவனமொன்று தலையிடக்கூடாது எனவும் அவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தனது அனைத்து கருத்துக்களும் ட்விட்டர் தளத்தில் தொடர்ந்தும் காணப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதரகத்தின் பதில்

அமெரிக்க சட்டத்திற்கு அமைய விசா மற்றும் குடியுரிமை தொடர்பான தனிநபர் ஒருவரின் தகவல்களை தம்மால் வெளியிட முடியாது என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி நியூஸ் பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :