இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இலங்கைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Oleksii Liskonih / Getty

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து

நவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் அந்நாட்டிற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எந்த அளவுக்கு பாதிக்கும்?

இலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் தற்போது 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் பிரதானமான போட்டி என்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்(எஸ்.எல்.பி.பி) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் (யு.என்.பி) சஜித் பிரமதாஸவுக்கும் இடையில்தான்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலம் பல சர்சைகளுக்கு உள்ளானதாகவும் உற்சாகமற்றதாகவும் இருந்த நிலையில், அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அவர் சார்ந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாருமே போட்டியிடவில்லை. கட்சியே இரண்டாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் சஜித்தையும் ஆதரிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பால் குற்றம்சாட்டப்பட்டார். மஹிந்த தோற்கும் பட்சத்தில், சீனா தொடர்பாக இலங்கை அரசால் எடுக்கப்பட்ட முடிவுகள் மாறக்கூடுமா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

ஆனால், தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த நிலையிலும் சீனாவின் முதலீடுகளும் நெருக்கமும் இலங்கையில் தொடரவே செய்தது. தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் அவருடைய எதிர்பாராத தோல்விக்கு, இந்தியா முக்கியப் பங்காற்றியதாக குற்றம்சாட்டினர்.

இந்த பின்னணியில், இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் இலங்கையின் சீன, இந்திய உறவுகளை எந்த அளவுக்குப் பாதிக்கக்கூடும்?

"கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ராஜபக்ஷ தரப்பு, ரணில் தரப்பை அமெரிக்க மற்றும் மேலை நாட்டு சக்திகளின் ஆதரவாளர்களாகக் காண்பிக்க முயற்சித்துவந்தது. ஆனால், தற்போது அது குறைந்திருக்கிறது. பொதுவாகப் பார்த்தால், வெளியுறவு விவகாரம் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஒரு முக்கியப் பிரச்சனையாக இல்லை" என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கைத் துறையின் முன்னாள் பேராசிரியரான கலாநிதி ஜெயதேவா உயங்கொட.

Presentational grey line
Presentational grey line

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைக்குப் பெருமளவில் பொருளாதார உதவிகளைச் செய்துவரும் சீனா, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டையில் உள்ள மகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது கட்டப்பட்டது இந்தத் துறைமுகம்.

இந்தியப் பெருங்கடலில் வலம்வரும் சீன போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப வாகான இடத்தில் அமைந்திருக்கிறது இந்தத் துறைமுகம். கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதிலும் சீனா பெரும் பங்காற்றியிருக்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, கொழும்பு துறைமுகத்தில் ஈஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினல் என்ற சரக்குப் பெட்டக டெர்மினலை உருவாக்கும் ஒப்பந்தத்தில் ஜப்பான், இலங்கையுடன் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது போன்ற வெகு சில திட்டங்களிலேயே ஆர்வம் காட்டியிருக்கிறது. கொழும்பு கண்டெய்னர் திட்டமும் நீண்ட கால இழுபறிக்குப் பிறகே கையெழுத்தானது.

இலங்கை சீனா

பட மூலாதாரம், Oleksii Liskonih / Getty

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பமில்லாத நிலையில், கடந்த அக்டோபரில் நடந்த கேபினட் கூட்டத்திலேயே பிரதமர் ரணிலும் ஜனாதிபதியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும், ஜப்பான் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு இப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. பெருமளவு சரக்குகள், கொழும்பு துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்தத் திட்டத்தில் இந்தியா பெரும் ஆர்வம் காட்டுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை யார் வெற்றிபெற்றாலும் சேர்ந்து செயல்பட விரும்பக்கூடும். ஆனால், தமிழர் பிரச்சனை குறித்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிலைப்பாடு, சீனாவுடனான நெருக்கமான உறவு ஆகியவை இந்தியாவுக்குக் கவலையளிக்கின்றன.

"யார் வெற்றிபெற்றாலும் இலங்கை தன் அண்டை நாடுகளுடன் பேணும் உறவில் பெரிய மாற்றம் வந்துவிடாது. கோட்டபய வெற்றிபெற்றாலும் சஜித் வெற்றிபெற்றாலும் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவைப் பேணுவதையே விரும்புவார்கள். அதேபோல, யார் ஜனாதிபதியானாலும் இந்தியாவும் சீனாவும் அவர்களுடன் இணைந்து செயல்படத் தயங்கமாட்டார்கள்," என்கிறார் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் குறித்து எழுதிவரும் அகிலன் கதிர்காமர். பிரசாரத்திலும் அதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்காது என்கிறார் அவர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தவிர, உள்நாட்டு யுத்தம் முடிந்த பிறகு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்து வருகிறது என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். "யுத்தத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பலவீனமடைந்தது. இங்கிருந்த தமிழர்கள் பலர் இந்தியா துரோகம் செய்ததாகக் கருதினார்கள். சிங்களர்களும் இந்தியாவை நெருக்கமாகக் கருதவில்லை. அவர்களை அச்சுறுத்தலாகவே கருதினார்கள்," என்கிறார் ஜெயதேவா.

இந்தியாவோடு ஒப்பிட்டால், சீனா அமைதியாக ஆனால், தொடர்ந்து இலங்கையில் முதலீடு செய்துவந்திருக்கிறது; கடன்களை வாரி வழங்கியிருக்கிறது. இப்போது இலங்கையின் பல இடங்களில் சீனா கட்டிய கட்டடங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் இந்த உறவுக்குச் சாட்சியமாக எழுந்து நிற்கின்றன.

"கடந்த 30 ஆண்டுகளுக்குள் இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டது. இப்போது இந்திய உறவை ஒரு விஷயமாகப் பேச முடியுமெனத் தோன்றவில்லை," என்கிறார் ஜெயதேவா.

2015ஆம் ஆண்டின் தேர்தல் தோல்விக்குப் பிறகு மஹிந்த தரப்பு இந்தியாவைச் சாடினாலும், அதற்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார் அவர்.

இலங்கைத் தேர்தல்

பட மூலாதாரம், RAVEENDRAN / getty

"இனிமேல் இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதாரம் சார்ந்தே இலங்கையுடனான தனது உறவை வரையறுக்கும். முன்பைப் போல தமிழர் பிரச்சனை சார்ந்து நெருக்கடி அளிக்காது" என்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான வீரகத்தி தனபாலசிங்கம். சீனாவைப் புறம்தள்ளிவிட்டு தங்களுடனான உறவை மேம்படுத்தும்படி வலியுறுத்தும் நிலையில் இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை என்கிறார் அவர்.

அதேபோல, சீனாவுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மாறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அளிப்பதை முதலில் எதிர்த்ததே யுஎன்பிதான். பிறகு, ரணில் ஆட்சிக் காலத்தில்தான் 99 வருடக் குத்தகைக்கு அந்தத் துறைமுகம் சீனாவுக்கு அளிக்கப்பட்டது" என்கிறார் தனபாலசிங்கம்.

சீனாவைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன் இருப்பை உறுதியாக நிலைநிறுத்துவதை மனதில்வைத்து இலங்கையுடனான உறவை வலுப்படுத்திவருகிறது. முதலீடுகளைச் செய்துவருகிறது. ஆனால், சமீப காலம் வரை இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கையுடனான உறவைத் தொடர்ந்துவந்தது.

ஆகவே, யார் இலங்கையின் புதிய ஜனாதிபதியானாலும் இந்த வேறுபாடே சீனா மற்றும் இந்தியாவுடனான உறவைத் தீர்மானிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :