IND Vs SA: தென்னாப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

IND Vs SA: தென்னாப்பிரிக்காவை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

பட மூலாதாரம், Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் சர்மா 176 ரன்களும் விளாசினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியை விட தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, அதிகபட்சமாக அஷ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ரோகித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோகித் சர்மா

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, முதல் இன்னிங்சில் சதமடித்த ரோகித் சர்மா (127 ரன்கள்) இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்து அசத்தினார். அடுத்ததாக சிறப்பாக ஆடிய புஜாரா 81 ரன்களை அடித்தார். இந்நிலையில், நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. முன்பு இருந்த 71 ரன்களையும் சேர்த்து 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

நேற்று ஆட்டநேர முடிவில், 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா, இந்த போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தது.

செனூரன் முத்துசாமி

பட மூலாதாரம், TWITTER/DOLPHINSCRICKET

படக்குறிப்பு, செனூரன் முத்துசாமி

இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சை ரன்களாக மாற்ற முடியாமல் திணறிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் சீரான இடைவேளையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதாவது, இரண்டாவது இன்னிங்சில் 63.5 ஓவர்களை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, அதிகபட்சமாக டேன் பீட் 56 ரன்களையும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட செனூரன் முத்துசாமி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, அதிகபட்சமாக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இவ்விரு அணிகளுக்குக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 10ஆம் தேதியன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொடங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :