பிக்பாஸ் மேடையில் கமல்: தம் அரசியலுக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்?

பிக்பாஸ் 3: 'பொதுத் தேர்வு, பேனர் மரணம், வறட்சி' - கமல் சொன்ன அரசியல் ஆலோசனைகள்

பட மூலாதாரம், Getty Images

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக இருக்கும் கமல், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் மாதம்தான் தமது அரசியல் வருகையை பிக்பாஸ் சீசன் ஒன்று நிகழ்வில் அறிவித்தார்.

'முடிவல்ல தொடக்கம்'

2017 செப்டம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல். "இது முடிவல்ல தொடக்கம். இங்கே தொடங்கி இருக்கிறேன் இந்த மேடையில்... தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கு வருவேன், வந்தே தீருவேன்" என்றார்.

பிக்பாஸ் 3: 'பொதுத் தேர்வு, பேனர் மரணம், வறட்சி' - கமல் சொன்ன அரசியல் ஆலோசனைகள்

பட மூலாதாரம், Vijay TV

என்ன வருவேன் வருவேன்னு சொல்லுறீங்களே? என்னவா வருவேன்னு கேட்காதீங்க. தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதல்ல... அன்பில் வருகிறேன். வெறும் ஆர்வத்தில் வருவதல்ல... கடமையுடன் வருகிறேன்.இங்கு கிடைக்கும் இந்த அன்பு, அங்கும் கிடைக்குமென்பதற்கான ஒரு அச்சாரம் எனக்கு கிடைத்துவிட்டது. இனி என்ன வேலை எனக் கேட்கமாட்டேன். உங்கள் வேலைதான் என் கடமை. என் வாழ்வு." என்றார்.

மேலும் அவர், "நீங்கள் என்னை சினிமாவில் நடிக்கச் சொன்னால் நடிக்கிறேன். வேண்டாம், 'எங்களுக்காகச் சேவை ஆற்றுங்கள்' என்றால் அதனைச் செய்கிறேன். "இல்லை அதற்கு நீ தகுதியானவன் அல்ல" என்று நீங்கள் நினைத்தால் பிரச்சனை இல்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபருக்குத் தேவைப்பட்டால் அவருக்கு உதவுவேன். இதனை நான் உங்கள் கைத்தட்டல்களுக்காக சொல்லவில்லை. என் மனதின் அடி ஆழத்திலிருந்து வரும் வார்த்தை. எனக்குத் தேவையான பணத்தை, சுகத்தை, வளத்தை எல்லாம் கொடுத்துவிட்டீர்கள். அதற்கான நன்றியைச் சொல்வதற்கு இந்த வாழ்க்கை போதாது. அதற்கு கைமாறாக எது செய்தாலும் போதாது. உங்கள் சேவையில் சாவதுதான் இந்த நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு" என்றார்.

'திரையிலிருந்து நிஜத்திற்கு'

பிக்பாஸ் நிகழ்வில் சொன்னது போல மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.

கட்சி தொடங்கி ஓராண்டே ஆகி இருந்தபோதிலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

அந்தத் தேர்தலில் சென்னையிலுள்ள வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளையும் பெற்றது அந்தக் கட்சி.

பிக்பாஸ்

பட மூலாதாரம், Vijay Tv

வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தவிர கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது கமல்.

'பிக்பாஸ் மேடையே அரசியல் மேடையாக'

பிக்பாஸ் வீட்டிற்குள் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள பலர் அரசியல் செய்தார்கள். ஆம் நாங்கள் திட்டமிட்டுத்தான் செயல்பட்டோமென்று கமல் முன்னிலையில் வாக்குமூலமும் அளித்தார்கள்.

ஆனால், பிக்பாஸ் மேடையை தனக்கான அரசியல் களமாகக் கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார் கமல்.

சமூகத்தில் பேசு பொருளாக இருந்த பிரச்சனைகளை பிக்பாஸ் மேடையில் எதிரொலித்தார்.

தண்ணீர் பிரச்சனை, பொதுத் தேர்வு, பேனர் மரணம் என அனைத்தையும் பிக்பாஸ் வீட்டு மேடையில் பேசினார்.

வாட்டர் மீட்டரை பிக்பாஸ் வீட்டுக்குள் பொருத்தி, நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பாமல் தண்ணீர் சிக்கனம் குறித்துப் பேசினார்.

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அறிவித்துள்ளது தமிழக கல்வித் துறை. இதனை நேரடியாகக் குறிப்பிடாமல் மய்யமாக மாணவர்கள் இடைநிற்றலுக்கு பொதுத் தேர்வு வழிவகுக்கும் என பிக்பாஸ் மேடையில் பேசினார் கமல்.

பிக்பாஸ் 3: 'பொதுத் தேர்வு, பேனர் மரணம், வறட்சி' - கமல் சொன்ன அரசியல் ஆலோசனைகள்

பட மூலாதாரம், Vijay TV

இந்த பொதுத் தேர்வால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள் என்று குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ குறித்தும் கமல் பேசினார்.

சாலையோர பேனரால் கோயம்புத்தூரில் 2017ஆம் ஆண்டு ரகு பலியானதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட் அவுட்டால் தம் ரசிகர் ஒருவர் பலியானதை நினைவு கூர்ந்தார்.

"என்னுடைய ரசிகர் ஒருவர் என்னுடைய பெரிய கட் அவுட்டில் ஏறி, கீழே விழுந்ததில், வேலிகளில் இருந்த கம்பிகள் கழுத்தில் குத்தி பலியானார். துக்கம் விசாரிக்க அவர்கள் வீட்டுக்குச் சென்ற போது, அந்த குடும்பம் எட்டுக்கு எட்டு வீட்டில் ஏழ்மையான சூழலில் வசித்ததைக் கண்டேன். அப்போது இனி என் படங்களுக்கு இது போன்ற கட்அவுட்டுகள் இருக்கக் கூடாது என முடிவு செய்தேன்." என்றார் கமல்.

பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக மக்கள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.

அது மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளச் சொல்லி வலியுறுத்திய கமல், பிக்பாஸ் வீட்டிலிருந்தே அது தொடங்க வேண்டும் என்றார்.

பிக்பாஸ் வாய்ப்பை பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்கள் எந்தளவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், மிகச் சரியாகக் கமல் பயன்படுத்திக் கொண்டார் என்று சமூக ஊடகத்தில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

Presentational grey line

பரமக்குடி அருகே பழமையான உறைகிணறு - அகழ்வாராய்ச்சி நடக்குமா? | Keezhadi Excavation

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :