லாஸ்லியா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இலங்கை பெண்

லாஸ்லியா
    • எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

லாஸ்லியா என்று இவரை தமிழக ரசிகர்கள் அழைத்து வந்தாலும், இவரது பெயர் லொஸ்லியா மரியநேசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென ``லாஸ்லியா ஆர்மி" என்ற இணைய பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன.

யார் இந்த லாஸ்லியா?

பட மூலாதாரம், FACEBOOK

இவ்வாறு ஒரு சில நிமிடங்களில் பிரபலமடைந்த இந்த லொஸ்லியா யார் என பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி லொஸ்லியா மரியநேசன் பிறந்தார்.

கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு லாஸ்லியாவின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

யார் இந்த லாஸ்லியா? இலங்கையிலிருந்து பிக் பாஸ் வரை-

திருகோணமலையிலுள்ள அழகிய கிராமமான அன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், ஓலைகளினாலான வீடொன்றை கட்டி அந்த வீட்டில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், ஓட்டுநராக பணி செய்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் குடும்பம் எதிர்கொண்ட கஷ்ட சூழ்நிலைக்கு மத்தியில், லொஸ்லியாவின் தந்தை தொழில் வாய்ப்பை தேடி கனடா சென்றுள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

அதன் பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர்.

லொஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

யார் இந்த லாஸ்லியா?

பட மூலாதாரம், facebook

உயர்தர பரீட்சையை எழுதிய லொஸ்லியா, பெறுபேறு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஊடக பிரவேசத்திற்கான சந்தர்ப்பம் கிடைத்த தருணத்திலேயே, உயர்தரத்தில் சித்தியும் பெற்றுள்ளார் லொஸ்லியா அதனூடாக அவருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பல்கலைக்கழக பிரவேசமா? ஊடக பயணமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாது தடுமாறிய லொஸ்லியா, இறுதியில் ஊடக பயணத்தை தொடர்வது என்ற முடிவை எட்டியுள்ளார்.

லாஸ்லியா

இதன்படி, சக்தி தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் ஊடாக, சற்று பிரபலமடைந்த அவர், பின்னரான காலப் பகுதியில் அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னை உயர்த்தி வளர்த்துக் கொண்டுள்ளார்.

இலங்கை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மத்தியில் லொஸ்லியா மிகவும் பிரபலமடைந்தார்.

லொஸ்லியாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பில் சக்தி நியூஸ் பெஸ்ட் நிறுவனத்தின் செய்தி முகாமையாளர் ஜெப்ரி ஜெபதர்ஷனிடம் பிபிசி தமிழ் பேசியது.

''இந்த நிகழ்ச்சிக்கு போவது குறித்து அவங்க கடைசி வரைக்கும் யாருக்கும் சொல்லவேயில்லை. சில வேளைகளில் அது விதிமுறையாகவும் இருக்கலாம். எங்களோட மிக நெருக்கமாக பழகியும் கூட இந்த விஷயத்தை சொல்லவில்லை. அது நல்ல விஷயம். அந்த நிறுவத்தினால் வழங்கப்பட்ட விதிமுறைகள அவங்க மதித்து இருக்காங்க. போனதுக்கு பிறகு தான் தெரியும் இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவும் இருக்கானு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். வியப்படைந்தோம்." என்றார்

''எந்த சந்தர்ப்பத்திலயும் லொஸ்லியா அவங்கட அப்பா, அம்மா கூட மட்டும் தான் கதைச்சுக்கிட்டு இருப்பா. வேறு யாரு கூடவும் பெருசா பேச மாட்டா. இப்படியான ஆட்களை தேடுறது ரொம்ப அரிது. அம்மா, அப்பாவோட இந்த 100 நாட்கள் எப்படி தான் கதைக்காம இருப்பாவோ என நினைக்கிறேன். எங்கள் நிறுவனம் உருவாக்கிய திறமைசாலி என நாங்கள் பெருமை அடைகிறோம். லொஸ்லியா தொடர்பான தொகுப்புக்களையும் நாங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறோம்."

விஜய் டிவில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் பணியாற்றிய இலங்கை பெண் ஒருவரின் உதவியுடனேயே, லொஸ்லியா தமிழக ஊடகத்துறைக்குள் சென்றுள்ளார்.

யார் இந்த லாஸ்லியா? இலங்கை கிளிநொச்சி முதல் பிக்பாஸ் வரை

பட மூலாதாரம், BIGBOSS VIJAY TV

விஜய் டிவிக்கு சென்ற அவரிடம் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் ஊடாக, அவர் நேரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்;.

இந்த நிலையில், லொஸ்லியா தொடர்பில் அவரது நெருங்கிய தோழியான தர்ஷியிடமும் பிபிசி தமிழ் பேசியது.

"நண்பர்கள் மாத்திரம் ரசித்துக் கொண்டிருந்த லொஸ்லியாவை, இன்று உலகமே ரசித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என அவரது நெருங்கிய தோழி தர்ஷி தெரிவிக்கின்றார்.

''மிகவும் சந்தோஷமா இருக்கு. ப்ரண்ட்ஸ் மட்டும் ரசிச்சிட்டு இருந்த லொஸ்லியா அப்படின்ற கேரேக்டர, இப்போ உலகம் ரசிக்க ஆரம்பிச்சு இருக்கு. அத பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களோட இருந்த லொஸ்லியாவையே நாங்க இப்போ டி.வியில் பார்க்கிறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. லாஸ்லியா இப்போ இருக்க இடத்த நினைச்சு அவங்க அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. ஆனா அதே அளவு அவள மிஸ் பண்ணுறாங்க." என்று தெரிவித்தார் லாஸ்லியாவின் தோழி தர்ஷி.

லாஸ்லியா

சண்டைகள் அதிகம் நிறைந்த அந்த நிகழ்ச்சியில், எந்த வித வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும் லொஸ்லியா ரசிகர்களை ஈர்த்துள்ளதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

அவருக்கு அதிக ரசிகர்கள் இருப்பதை தெரிந்த கொண்ட சேனல் அவரை அதிகம் பேச வைத்தும் அழகு பார்த்து வருகிறது. கடந்த வார நிகழ்ச்சியில் அவர் சொன்ன `மைனம்மா` கதைக்கு பிறகு அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இதற்கு முன்பு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இம்மாதிரியான புகழை பெற்றவர் நடிகை ஓவியா. அவருக்கென்று அப்போது பல சமூக வலைதளப்பக்கங்களும், `ஆர்மி` களும் தொடங்கப்பட்டன.

எத்தனை முறை நாமினேட் செய்யப்பட்டாலும், ரசிகர்களின் வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்தவர் ஓவியா.

இதுவரை லொஸ்லியா நாமினேட் செய்யப்படவில்லை என்றாலும், ஏதோ ஒரு தருணத்தில் அவர் நாமினேட் செய்யப்பட்டாலும் அவருக்கு விழும் வாக்குகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கும் என்பதை நாம் சமூக ஊடகத்தின் வழியாக பார்க்க முடியும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் லொஸ்லியா இந்த சீஸனின் இறுதிவரை போகக் கூடியவர் என்பதும் பலரின் கருத்தாகவே உள்ளது.

சந்திரயான் - 2 : இறுதி நேரத்தில் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது ஏன்?

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :