டிக் டாக் செயலிக்கு எதிராக தமிழக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு: நடப்பது என்ன? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு மூலம் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் மீண்டும் தெரிவித்து இருக்கிறார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், "டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த பிப்ரவரி மாதம் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்பிறகு, அந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சென்று முடிந்தது. நீதிமன்றமும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. அதன்பிறகு, நமது கலாச்சாரத்துக்கு எதிரான விஷயங்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்த பிறகே செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஒரு செயலியை அனுமதிக்க வேண்டும் என்றாலும், தடை செய்ய வேண்டுமென்றாலும், அதற்கான அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து மத்திய அரசுக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டது. எனினும், மீண்டும் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்." என்று கூறி உள்ளார்.
அமைச்சரே கூறி இருப்பது போல டிக் டாக் செயலி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.
சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்கிறார். முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும் என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன்.
''சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் அப்போது உறுதியளித்திருக்கிறார்.
பின் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான விஷயங்களை அனுமதிக்க மாட்டோம் என்று டிக்டாக் உறுதியளித்தது.
சரி உண்மையில் டிக் டாக்கை தடை செய்ய முடியுமா?
சாத்தியமா?
"இணையம் மூலமாக செயல்படும் செயலிகளை அரசாங்கம் நினைத்தால் சுலபமாக முடக்க முடியும். ட்ராய் அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணைய சேவை அமைப்பிற்கு சில கட்டளைகளை பிறப்பித்தால்போதும். ஆனால், இணையம் தேவைப்படாத செயலிகளுக்கு பைரடெட் வெர்ஷன் கிடைக்கும். அதனால் அதை முடக்குவது சாத்தியமில்லாதது," என்று பொறியியல் வல்லுநர் வெங்கட் பிபிசி தமிழிடம் கூறியிருந்தார்.
மீண்டும் மீண்டும் வேறு செயலிகள் வந்தால் என்ன செய்வது? என்ற நம் கேள்விக்கு. அதனை ட்ராய்தான் கண்காணிக்க வேண்டும். ட்ராயினால் இது முடியும். ஆனால், அதே நேரம் ட்ராய் கண்காணிக்க முடியாதபடி வி.பி.என் (Virtual Private Network) பயன்படுத்தி செயலிகளை இயக்கினால் எதுவும் செய்ய முடியாது," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
அப்போது பிபிசிக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் தந்த டிக்டாக் நிறுவனம், "டிக் டாக் விதிகளை மீறுவது போல் யாரேனும் பயன்படுத்தினால், அதுதொடர்பாக சுலபமாக புகார் செய்வதற்கு ஏதுவாக நாங்கள் செயலியை வடிவமைத்துள்ளோம். உள்ளூர் சட்ட திட்டங்களையும் நாங்கள் மதிக்கிறோம். இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க உள்ளோம்," என்று அந்த மின்னஞ்சல் விவரிக்கிறது.
மேலும் பூமிகா, "இணையத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பிரசாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். இணைய பாதுகாப்பு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி #SafeHumSafeInternet என்ற தலைப்பில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். 'சைபர் பீஸ் ஃபவுண்டேஷன்' என்ற அரசுசாரா அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்று விளக்கி இருந்தது.
ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு
டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோதிக்கு புகார் அனுப்பி உள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
அதன்பேரில், டிக் டாக், ஹலோ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 21 விதமான கேள்விகள் அடங்கிய பட்டியலையும் அனுப்பி உள்ளது. அந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காவிட்டால், இரண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்றும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி
புதிய சர்ச்சை
டிக் டாக் செயலியை பயன்படுத்தி சிலர் பணம் தொடர்பான மோசடியில் ஈடுப்பட்டதாகவும் பிபிசி புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து விரிவாக காண,
போட்டியில் ஃபேஸ்புக்
இப்படியான சூழ்நிலையில், டிக் டாக் செயலிக்கு போட்டியாக லாசோ என்ற செயலி ஒன்றை ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது. அது தற்போது அமெரிக்காவில் மட்டும் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












