இலங்கை ஆறுதல் வெற்றி: அதிக கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா - வங்கதேசம் போட்டி

அதிக கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா - வங்கதேசம் போட்டி

பட மூலாதாரம், Nathan Stirk/Getty Images

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற முடியாது என்ற நிலையிலும் திங்கள்கிழமை நடந்த போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட இலங்கையின் தொடக்க வீரர்கள் 15 ஓவர்களில் 90 ரன்கள் குவித்தனர்.

இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்ன 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்த நிலையில் பெரேரா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ இணை சிறப்பாக விளையாடினர்.

103 பந்துகளில், 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் உதவியுடன் 104 ரன்களை அவிஷ்கா பெர்னாண்டோ எடுத்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழப்புக்கு 338 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை இலங்கை குவித்தது.

அதிக கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா - வங்கதேசம் போட்டி

பட மூலாதாரம், Reuters

இதனையடுத்து 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சுனில் அம்பிரிஸ் மற்றும் ஹோப் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி தடுமாறியது.

ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங்கில் தீர்ப்புமுனையாக அமைந்தது பூரானின் அதிரடி பேட்டிங்தான். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்களை மேற்கிந்திய தீவுகள் குவித்தது.

அரையிறுதிக்கு தகுதிபெறுவது ஏறக்குறைய இரு அணிகளுக்கும் இனி இயலாது என்ற நிலையிலும், இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடியது போட்டியை சுவாரஸ்யமாக்கியது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 11 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ள இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்ற இந்தியா, இப்போட்டியில் வெல்ல கடுமையாக போராடும். அதேவேளையில் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடுமையான போட்டி நிலவிவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :