சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி: ரகசியத்தை சொன்னால் என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் - தோனி

பட மூலாதாரம், AFP
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஷேன் வாட்சனின் 96 ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
சென்னை அணியின் வெற்றிக்கு 176 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது.
டாஸை வென்ற சென்னை அணி ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. இருபது ஓவர்களில் அந்த அணி 175 ரன்களை எடுத்தது. அதில் மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 83 ரன்களையும், டேவிட் வார்னர் 57 ரன்களையும் எடுத்திருந்தனர்
போட்டி முடிந்தபின் பேசிய ஐதாரபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார், ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தை தங்களால் தடுக்க முடியவில்லை என ஒப்புக் கொண்டார்
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி தனது எட்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்மூலம் 16 புள்ளிகளை பெற்றிருக்கிறது சென்னை அணி.
மேலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை சென்னை அணி இதன்மூலம் பெற்றுள்ளது.
இதுவரை நடைபெற்ற 11 போட்டிகளில் சென்னை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணியின் நேற்றைய வெற்றி அதன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
பல நாட்களுக்கு பிறகு ஷேன் வாட்சன் தனது பேட்டிங்கில் ஒரு மேஜிக் நிகழ்த்தினார் என்றே சொல்ல வேண்டும்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன், 53 பந்துகளில், 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 96 ரன்களை எடுத்திருந்தார்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஷேன் வாட்சன் பின் தனது பேட்டிங்கால் ஐதாராபாத் அணியின் பந்து வீச்சாளர்களுக்குப் பீதியை கிளப்பினார்.
கலீல் அகமது மற்றும் ரஷித் கானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் ஷேன் வாட்சன்.

பட மூலாதாரம், PTI
அதே சமயம் எதிர்முனையில் இருந்த சுரேஷ் ரெய்னாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
4 பவுண்டரிகள், மற்றும் ஒரு சிக்ஸருடன் 24 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார் சுரேஷ் ரெய்னா.
சந்தீப் ஷர்மாவின் ஒரு ஓவரில் நான்கு பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார் சுரேஷ் ரெய்னா.
6ஆவது ஓவரில் சென்னை அணி ஒரு விக்கெட்டு இழப்புக்கு 49 ரன்களை எடுத்திருந்த நிலையில் அந்த திருப்புமுனை நிகழ்ந்தது
சென்னை அணி வெற்றி பெற்றிருந்தாலும் அதன் தொடக்கம் ஒன்றும் சிறப்பாக இல்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டூ ப்ளஸிஸ் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்
இரண்டாம் விக்கெட்டுக்கு வாட்சனும் ரெய்னாவும் 77 ரன்களை எடுத்திருந்தனர்.

பட மூலாதாரம், AFP
அம்பத்தி ராயுடு 21 ரன்களையும், கேதர் ஜாதவ் 11 ரன்களையும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஐதராபாத் அணியின் சந்தீப் ஷர்மா 3,4 ஓவர்களில் 54 ரன்களை வழங்கினார்.
அதே போல் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 4 ஓவரில் 44 ரன்களை கொடுத்திருந்தார் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.
ஐதராபாத் அணியின் பேட்டிங்
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியில் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் சிங் வீசிய பந்தில் தோனியிடன் கேச் கொடுத்து அவுட் ஆனார் ஜானி பேர்ஸ்டோவ்.
முதல் விக்கெட்டுகளை இழந்தபின் அந்த அணியின் டேவிட் வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டாக 115 ரன்களை எடுத்திருந்தனர்
மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 45 பந்துகளில் டேவிட் வார்னர் 57 ரன்களை எடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் இது வார்னரின் 6ஆவது அரை சதம் ஆகும்.
மீண்டும் வாட்சன்
நீண்ட நாட்களாக நன்றாக விளையாடாத ஷேன் வாட்சன் நேற்று மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
போட்டி முடிந்தபின், "ஷேன் வாட்சன் அணிக்கு முக்கியமான ஒரு நபர்" என்று தெரிவித்தார் ஹர்பஜன் சிங்.
கடந்த சீசனில், இறுதி போட்டியில் சதம் எடுத்து அணிக்கு வெற்றியை சேர்த்தவர் வாட்சன்.
"வாட்சன் தங்களுது அணியின் வெற்றிக்கு உதவும் ஒரு ஆட்டக்காரர்" என்று தோனியும் தெரிவித்துள்ளார்.
எனவேதான் சில போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை என்றாலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
வெற்றி ரகசியம்
போட்டியின் முடியில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார் தோனி.
போட்டி முடிந்த பின் சென்னை அணியின் வெற்றி ரகசியம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
"அதை நான் அனைவரிடமும் சொன்னால் என்னை ஏலத்தில் எடுக்கமாட்டார்கள். அது ரகசியம்," என்றார் தோனி.
மேலும், "சென்னை அணியின் வெற்றிக்கு, அணியின் விளையாட்டு வீரர்களை தவிர்த்து அதன் ஊழியர்களும் உறுதுணையாக இருக்கின்றனர். அவர்கள் அணியினருக்கு நேர்மறையான சூழலை வழங்குகின்றனர். இதை தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்லமாட்டேன்," என்று தெரிவித்தார் தோனி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












