சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது

CSK vs KXIP

பட மூலாதாரம், Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று சனிக்கிழமை நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இரண்டாவதாகக் களமிறங்கிய கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றிபெற்றுள்ள சென்னை அணி, எட்டுப் புள்ளிகளுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இறுதி வரை ஆட்டமிழக்காத சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி, 23 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்தார்.

சென்னை மண்ணின் மைந்தனான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே கொடுத்து, சென்னை அணி இழந்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின்

பட மூலாதாரம், NurPhoto

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த பாஃப் டூ பிளெஸ்ஸி 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அவற்றில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடக்கம்.

இரண்டாவது இன்னிங்ஸில் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 47 பந்துகளில் 55 ரன்னும், சர்பராஸ் கான் 59 பந்துகளில் 67 ரன்களும் எடுத்தனர்.

களமிறங்கிய பிற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடிக்குப் பெயர்போன கிறிஸ் கெயில் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழக்க, மயாங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.

டேவிட் மில்லர் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கடைசியாகக் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த மன்தீப் சிங், ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்திருந்தார். அவரைப்போலவே ஒரே ஒரு பந்தை எதிர்கொண்ட சாம் கர்ரன் ரன் எதுவும் எடுக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :