கெளதம் கம்பீர் : தோனி, ரோகித் அளவுக்கு கோலி விவேகமான அணித்தலைவர் கிடையாது

கோலி - கம்பீர்

பட மூலாதாரம், MANAN VATSYAYANA

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் விராட் கோலியின் அணித் தலைமை பண்பு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது விரிவாக பேசியிருக்கிறார்.

ஐபிஎல்லில் கம்பீர் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கியபோது இரு முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. கம்பீரை தவிர அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்றவர்கள் ரோஹித்தும் தோனியும்தான்.

மகேந்திர சிங் தோனி அல்லது ரோஹித் ஷர்மாவை ஒப்பிடும்போது விராட் கோலி விவேகமான அணித்தலைவர் இல்லை என அந்த நிகழ்ச்சியில் பேசியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

''நான் கோலியை விவேகமான அணித்தலைவராக பார்க்கவில்லை. ஆட்டதந்திரம் மிக்க அணித்தலைவராகவும் அவரை கருதவில்லை. அவர் இதுவரை ஐபிஎல்லில் கோப்பையை வெல்லவில்லை. ஒரு அணித்தலைவரை அவரது சாதனைகளை வைத்தே மதிப்பிட முடியும்''

விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் கோப்பையை வென்றுள்ள நிலையில் கம்பீர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர்

பட மூலாதாரம், Stu Forster

''ரோகித் ஷர்மா மற்றும் தோனி ஆகியோர் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். அதனால் கோலி செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. கோலியை இப்போதைக்கு நீங்கள் தோனி, ரோகித்தோடெல்லாம் ஒப்பிடவே கூடாது'' என கம்பீர் தெரிவித்துள்ளார்.

''கோலி ஆர்சிபி அணியுடன் நீண்டகாலமாக பயணித்திருக்கிறார். கடந்த 7-8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு அவர் தலைமையேற்றிருக்கிறார். அவர் மிகவும் அதிர்ஷ்டமானவர் அவரது அணி நிர்வாகத்துக்கு அவர் நன்றியுடன் இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற அணி நிர்வாகங்களில் கோப்பை வெல்லவில்லையெனில் அணித்தலைவர்களுக்கு கோலி அளவுக்கு தொடர் வாய்ப்புகள் இல்லை'' என்கிறார் ஏழு முறை கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இரு முறை ஐபிஎல் வென்ற கெளதம் கம்பீர்.

கடந்த ஐபிஎல் சீசனில் கம்பீர் அணித்தலைவராக இருந்தார். அதன்பின்னர் தொடர் தோல்விகள் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக பதவி விலகினார் கம்பீர்.

கவுதம் கம்பீர்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE

ஆனால் கோலியின் தலைமை பண்பு குறித்து கேள்வியும் கிடையாது என்கிறார் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி.

''விராட் கோலியின் அணித்தலைமை பண்பு குறித்து பேசவேண்டுமெனில் அவர் இதுவரை எப்படி பங்காற்றியுள்ளார் என்பதை பாருங்கள். ஒவ்வொரு பார்மேட்டிலும் அவரது பேட்டிங் எப்படி இருந்திருக்கிறது என்பதை பாருங்கள். உண்மையில் அவர் ஒரு சாம்பியன். ஆர்சிபிக்கு அணித்தலைவராக பொறுப்பேற்க அவர் தகுதியானவர்.ஒருநாள் வெல்வார்'' என கங்குலி கூறியிருக்கிறார் என்கிறது பிடிஐ செய்தி முகமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :