இந்தியா - நியூசிலாந்து டி20: தொடரை வெல்லுமா இந்தியா?

பட மூலாதாரம், MICHAEL BRADLEY
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 போட்டி தொடரில் வெற்றி பெறுவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி, ஹமில்டனில் இன்று பகல் 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்றுவரும் டி20 போட்டி தொடரில், வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில், 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஆனால் அதை சரி செய்யும் விதமாக இரண்டாவது போட்டியில் ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என்று சமன் செய்தது.
எனவே இன்று ஹமில்டனில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல் போட்டியில் தடுமாற்றம்

பட மூலாதாரம், PHIL WALTER
ஒருநாள் போட்டியை இந்திய அணி கைப்பற்றியதால் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது டி20 தொடர். ஆனால் முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது இந்திய அணி.
முதல் போட்டியில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. நியூசிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்ஸ்மேன்களும் ஒன்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி மிக சிறப்பாக பந்துவீசினார். தான் வீசிய 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் தந்து 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
எனவே 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
மீண்டு எழுந்த இந்தியா
தோல்விக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆக்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஏழு, விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து போட்டியில் வென்றது.
சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களை கட்டுக்குள் வைத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குருநால் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணியை பொருத்தவரையில் நடப்பு டி20 போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனிக்கும் மீண்டும் இடம் கிடைத்தது.
டி20 தொடருக்கு முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












