காந்தியின் உருவ பொம்மையை சுட்ட இந்து அமைப்பின் தலைவர் கைது

மகாத்மா காந்தியின் நினைவு நாளானன்று, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அவரது கொலையை மீட்டுருவாக்கம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 30 அன்று உத்திரப்பிரதேச மாநிலம் அலிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய இந்து மகாசபை எனும் குறுங்குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள் காந்தியை சுட்டுக்கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் உருவப்படத்துக்கு மரியாதை செய்தனர்.
காந்தியின் உருவ பொம்மையை அந்த அமைப்பின் தலைவர் பூஜா பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்டதும் காந்தியின் உருவ பொம்மையில் இருந்து ரத்தம் வழியும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்தக் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. அதையொட்டி நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்தது.


இது தொடர்பாக இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை தேடி வருவதாகவும் காவல் அதிகாரி நீரஜ் ஜடான் பிபிசியிடம் கூறினார்.
அந்தக் காணொளியில் பூஜாவின் கணவர் அசோக் பாண்டேவும் அருகில் இருப்பது தெரிந்தது.

பட மூலாதாரம், Getty Images
தாம் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை என்றும் தம் அரசியல் சாசன உரிமையையே தாம் பயன்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள பூஜா பாண்டே கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
"நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். காவல்துறையினர் அவர்கள் வேலையைச் செய்கின்றனர். நாட்டை அவமதிப்பவர்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். எங்களைப் போன்றவர்கள் கைது செய்யப்படுகிறோம், " என்று கைதாகியுள்ள அசோக் பாண்டே கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தியில் கூறப்பட்டுள்ளது.


கோட்சே இந்து மகாசபை உள்ளிட்ட பல இந்து அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், தேசப்பிரிவினைக்கு காரணமாக இருந்ததாகவும் தீவிர இந்து வலதுசாரிகள் காந்தி மீது குற்றம்சாட்டினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












