சின்னத்தம்பி யானை: சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவிப்பு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டையும் தாண்டி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் சின்னத்தம்பி யானை, இப்போது பல்வேறு தரப்பிலும் பேசப்படுவதுடன், பல ஆச்சரியங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டை அருகே தங்கியிருக்கும் சின்னத்தம்பியை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள்.
சின்னத்தம்பி, கோவை மாவட்டத்தின் ஆனைக்கட்டி வனப்பகுதிகளில் தொடர்ந்து சுற்றி வந்தது.
அந்தப்பகுதிகளில் பன்நெடுங்காலமாய் யானைகள் வலசை சென்று கொண்டிருந்த பாதைகளில் பல கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், செங்கல் சூளைகள் எல்லாம் தோன்றி விட்டன. காடுகள் துண்டாக்கப்பட்டதால், ஊரினைக் கடந்துதான் மற்றொரு காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன யானைகள்.

பட மூலாதாரம், Getty Images
இப்படித்தான் காட்டினை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு யானைகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் சின்னத்தம்பி கூட்டத்தோடு வந்து கொண்டிருந்தது. ஆண் யானைகள் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் கூட்டத்தில் இருந்து விலகி தனியாக வாழும். அப்படி சின்னத்தம்பியும் தனியாக வலம் வர ஆரம்பித்தது. தொடக்கத்தில் கொஞ்சம் பயிர் மேய்ந்துவிட்டு சென்றுவிடும்.
ஆனால் நாளாக நாளாக விவசாய நிலத்தில் பெரும் சேதம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டதாக அந்தப் பகுதியில் வாழும் ஒரு சாரார் புகார் தெரிவித்ததால் சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்ட வனத்துறை முயற்சித்தனர். சின்னத்தம்பி ஊருக்குள் வரும் பொழுதெல்லாம் பெரும் சத்தம் எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் அதை துரத்தினர்.
ஆரம்பத்தில் பயந்த சின்னத்தம்பி நாளடைவில் அதற்கும் பழகி விட்டது. அதனால், சின்னத்தம்பியை பிடித்து வேறு இடத்தில் கொண்டுவிட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் சென்னையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் சென்று புகார் கொடுக்க சின்னத்தம்பியை இடமாற்றம் செய்தனர்.
கோவை தடாகம் பகுதியில், மயக்க மருந்து செலுத்தி நீண்ட போராட்டத்திற்கு பிறகு சின்னத்தம்பியை பிடித்து, டாப்ஸ்லிப் அருகில் வரகளியாறு பகுதிக்கு கொண்டு விட்டனர்.
இரண்டு நாட்கள் அந்தக் காட்டுப்பகுதியில் இருந்த சின்னத்தம்பி, அந்த வனத்தை விட்டு வெளியேறியது. சுமார் 100 கி.மீ நடந்து உடுமலைப் பேட்டை அருகே கிருஷ்ணாபுரம் என்னும் இடத்தில் உள்ள அமராவதி கரும்பு ஆலைக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தின் அருகே வந்துவிட்டது.
தற்சமயம் அந்தப்பகுதியில் தான் தங்கி உள்ளது. மீண்டும் வனத்தை விட்டு வெளியேறியதால் சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற முடிவெடுத்து விட்டோம் என கோவையில் நடந்த விழா ஒன்றில் வனத்துறை அமைச்சர் கூறியதால் , சின்னத்தம்பிக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பினர். சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற மாட்டோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.

இந்நிலையில் சின்னத்தம்பி தங்கியுள்ள பகுதிக்கு பிபிசி தமிழ் குழு கள ஆய்வுக்காக சென்றது.
சின்னத்தம்பியை வனத்திற்குள் விரட்டுவதற்காக , டாப்ஸ்லிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் என இரண்டு கும்கி யானைகளை அப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர் வனத்துறையினர். சின்னத்தம்பி கும்கி யானைகளை நண்பர்களாக்கி கொண்டது. கும்கி கலீம் யானையோடு, சின்னத்தம்பி விளையாடிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
பெருமளவிலான பொதுமக்கள், சின்னத்தம்பியை காண்பதற்காக அங்கு கூடி இருக்கின்றனர். யாருக்கும் எந்த இடையூறும் தராமல் - பாகன்கள் கும்கி யானைகளுக்கு தரும் உணவை பகிர்ந்து உண்பது, பக்கத்தில் உள்ள குட்டையில் உறங்குவது, கலீமோடு விளையாடுவது என நேரத்தைப் போக்குகின்றது சின்னத்தம்பி.

வழக்கமாக காட்டு யானைகள் வெளிச்சத்தை பார்த்தால் எதிர் திசையில் செல்லும். சின்னத்தம்பி வெளிச்சத்தைப் பார்த்தால் ஒளி வரும் திசையை நோக்கி செல்கிறது. ஒரு காட்டு யானைக்குரிய குணநலன்களை இழந்தும், குழப்பமான மனநிலையோடும் சுற்றி வருகிறது அந்த யானை.
வனத்துறையினர், யானை ஆய்வாளர்கள் அங்கு முகாமிட்டு தொடர்ந்து சின்னத்தம்பியை கண்காணித்து வருகின்றனர். காடுகளை தொடர்ந்து அழித்து வருவதால் உருவான மனித விலங்கு முரண்பாட்டில், யானையா, மனிதனா என்ற சிக்கலின் நடுவே சிக்கித்தவிக்கிறான் சின்னத்தம்பி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
யானைகள் ஆதார உயிரினம் -ஏன்?
மனித இனம் மண்ணில் தோன்றுவதற்கும் முன்னரே இப்புவியில் தோன்றிய பேரினம் யானை. தற்பொழுது ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்களில் மட்டுமே வாழ்கின்றன. ஆசிய யானைகள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற இடம் மேற்கு தொடர்ச்சி மலை. மற்ற இடங்களில் வெகுவாக குறைந்து விட்டன.
யானைகளே வளமான காட்டின் குறியீடு.யானையைக் காட்டின் ஆதார உயிரினம் (key stone species) என்பர். யானை நாளொன்றுக்கு பல கிலோ அளவுள்ள உணவை உண்கின்றது. தேவையான உணவு முழுக்க ஒரு இடத்திலேயே கிடைக்காது என்பதனால், உணவைத்தேடி நெடுந்தூரம் நடந்து செல்லும் இயல்புடையது யானை. சராசரியாக 25 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை ஒரு நாளைக்குள் நடந்து கடந்து விடும் யானை என்று ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
யானையின் தோல் தடிமனாக உள்ளதால் முட்புதர்களையும் பொருட்படுத்தாது உள்ளே புகுந்து சென்றுவிடும். யானை நடக்கும் இடமெல்லாம் சாலையைப் போல் மாறிவிடுகின்றது. இந்ததடத்தைத்தான் காட்டின் மற்ற உயிரினங்கள் பாதையாகப் பயன்படுத்துகின்றன.
யானை உயரமான மரக்கிளைகளை உடைத்து உண்ணும் பொழுது கீழே விழும் எஞ்சிய இலை,தழைகள் காட்டில் உள்ள மற்ற சிறிய தாவர உண்ணிகளுக்கு உணவாகும் .
வறண்ட கோடைக்காலங்களில், நீரின்றி காட்டுயிர்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது யானைகள் தனது தும்பிக்கையில் உள்ள தசைநார்களைக் கொண்டு நிலத்தடி நீர் இருக்கும் இடத்தினைக் கண்டறிந்து காலால் தட்டி, தும்பிக்கையால் தோண்டி சிறிய குட்டைகளை உருவாக்குகின்றன. யானைக்கு அந்த சிறிய குட்டைகளில் உள்ள நீர் போதுமானதாக இருக்காது. அவை சேற்றைக் குழைத்து தன உடம்பின் மீது பூசி சூட்டைத் தனித்துக் கொள்ளும். மற்ற உயிர்களின் குடிநீர் தேவையை இந்தக் நீர்க்குழிகள் பூர்த்தி செய்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
யானையின் சாணம் கூட மற்ற உயிரினங்களுக்கு உதவி செய்கின்றது. யானை சாணத்தில் பல வகை காளான்கள் வளர்கின்றன. மேலும் யானையின் சாணம் பூச்சிகள், வண்டுகளுக்கு உணவாகும். அந்தப்பூச்சிகளை உண்ண சில பறவைகளும், ஊர்வன இனங்களும் யானையின் சாணத்தை நோக்கி வரும். இப்படி யானையின் சாணத்தை ஆதாரமாகக் கொண்டு கூட ஓர் உயிர் சங்கிலி நிலவுகின்றது.
யானைகள் நடப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்?
யானைகள் சாப்பிட்ட உணவு செரித்து சாணமாக வெளியேற 46 முதல் 72 மணி நேரம் ஆகும்.ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவு சாணமாக வெளியேறுவதற்குள் சராசரியாக யானை 50கி.மீ தூரத்தைக் நடந்துவிடும். அந்த சாணத்தில் வெளியேறும் பல்வேறு தாவரத்தின் விதைகள்தான் காடு முழுக்க செழித்து வளர்கின்றன.
யானையின் செரிமான பாதையில் ஊறி வெளியே வரும் விதைகள் அதிக முளைப்புத்திறன் பெற்று வீரியமாக வளர்கின்றன. எனவே, யானைகள் தான் காடு முழுக்க விதைகளை விதைத்து காட்டினை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. யானைகள் இருந்தால் தான் காடு செழிக்கும், காடு செழித்தால் தான் மழை வளம் பெருகும். மழைவளம் பெருகினால்தான் விவசாயம் தழைக்கும், விவசாயம் தழைத்தால் தான் மனித இனம் வாழும்.
எனவே மனித வாழ்விற்கும், யானைகள் நடப்பதற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்கின்றார் சூழலியல் ஆய்வாளர் மோகன்.
ஊருக்குள் வந்து பழகிப்போன சின்னத்தம்பி

பட மூலாதாரம், Getty Images
யானை ஆய்வாளர் திரு. அஜய் தேசாய் அவர்களிடம் சின்னத்தம்பியின் நிலையினை பற்றி கேட்ட பொழுது, "சின்னத்தம்பி தனது சிறிய வயதில் இருந்தே வனத்தை விட்டு வெளியேறி பயிர்களை உண்டு பழகி விட்டது. ஊருக்குள் நடப்பதும், காட்டுக்குள் நடப்பதும் ஒன்று போலாகி விட்டது அதற்கு."
"வனத்துறை, யானைகள் ஊருக்குள் வந்தால் மீண்டும் வனத்துக்குள் விரட்டுவர் இதற்கு negative conditioning என்று பெயர். ஆனால் வழித்தடம் சரியாக இல்லாததால் இரவு நேரங்களில் சின்னத்தம்பியால் வனத்திற்குள் செல்ல இயலவில்லை. ஊருக்குள் வருவதற்கோ, மனிதர்களை பார்த்தாலோ சின்னத்தம்பி பயப்படுவதில்லை. எனவே இடமாற்றம் செய்யலாம் என முடிவெடுத்து நல்ல உணவும், தண்ணீரும் இருக்கும் ஆனைமலை வனப்பகுதிகளில் கொண்டுவிடப்பட்டது. ஆனால், யானை அந்தப்பகுதியில் இருந்தும் வெளியேறி கிட்டத்தட்ட கோவை தடாகம் பகுதிகளை போல அமைப்புடைய இந்தப்பகுதிக்கு வந்துவிட்டது."
"யானையை பிடித்து பழக்கப்படுத்துவதால் அதன் இனப்பெருக்கம் பாதிப்படையும் எனவே, அதனையும் தவிர்க்க வேண்டும், அதே சமயம் மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் சின்னத்தம்பியை வனத்திற்குள் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்கிறோம்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
காடுகள் பிளவு
"தமிழ் நாட்டில் கோயம்புத்தூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் பார்த்தால் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு அதிகமாக இருக்கிறது. ஏனெனில் இந்தப் பகுதிகளில் காடுகள் பிளவுபட்டு இருக்கின்றன, தொடர்ச்சியாக இல்லாமல் காடுகள் துண்டாக்கப் படுவதால் யானைகள் வழித்தடம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது." என்கிறார் உலக வன உயிர் அமைப்பை சேர்ந்த பூமிநாதன்.
"சின்னத்தம்பியை soft releaseஅதாவது முதலில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவு உள்ள வனப்பகுதிக்குள் விட்டு வேலியால் அடைத்து வைத்து, அது வனத்திற்குள் உள்ள உணவினை சாப்பிட்டு பழகியவுடன், பெரிய வனப்பரப்பிற்குள் விடலாமா என்றும் கலந்தாலோசித்து வருகின்றோம். காட்டில் ஆண்யானைகள் குறைந்து கொண்டே வருகின்றன, மீண்டும் ஒரு யானைக்கு சின்னத்தம்பியின் நிலை வந்து விடாமல் அனைவரும் இணைந்து நல்ல முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கிறார் உலக வன உயிர் அமைப்பை சேர்ந்த பூமிநாதன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












