#ஐபிஎல்2018 : இந்தியாவின் ஐந்து இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் யார்?

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பதினோராவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 25% போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சில மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியுள்ள நிலையில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், பென் ஸ்டோக்ஸ், ஆரோன் பின்ச், குயின்டன் டீ காக் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் இளம் வீரர்கள் அதகளம் செய்து வருகிறார்கள்.

1. சூர்யகுமார் யாதவ்

11வது ஐபிஎல் சீஸனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை இந்தியன்ஸ். அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனான எவின் லெவிஸ் என இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்கள் பவர்பிளே முடிவதற்குள்ளாகவே களத்தில் இருந்து பெவிலியன் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் 27 வயதைச் சேர்ந்த இளம் நாயகன் சூர்யகுமார் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை நொறுக்கி அதிரடியாக 29 பந்துகளில் 43 ரன்கள் குவித்த்தார். இதில் ஆறு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மும்பை அணியின் அடுத்த போட்டியிலும் சூர்யகுமார் 31 பந்துகளைச் சந்தித்து 28 ரன்கள் குவித்தார்.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், AFP

சூர்யகுமார் யாதவ் முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கொல்கத்தா அணியில் துணை கேப்டனாகவும் கீழ் நடுத்தர வரிசையிலும் களமிறங்கி வந்த சூர்யகுமார் யாதவை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 3.2 கோடிக்கு எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.

சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவது முதல்முறையல்ல. 2012 ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தை அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே ஆடினார். புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் நான்கு பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை துவங்கி பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான்கு ஆண்டுகள் விளையாடியபின் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ள சூர்யகுமார் யாதவ் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் பிறந்தவர்தான்.

இந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடிவருவதை அடுத்து மும்பை அணி நிர்வாகம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமாரை தொடக்க வீரராக களமிறக்கியது. அப்போட்டியில் 32 பந்துகளில் 7 பௌண்டரி 1 சிக்ஸர் ஆகியவற்றுடன் 53 ரன்களை குவித்து அசத்தினார் 27 வயது உள்ளூர் நாயகன். எனினும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

2. நிதிஷ் ராணா :-

ஏப்ரல் 8, 2018 அன்று ஐபிஎல் 11-வது சீஸனின் முதல் போட்டியில் விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்திருந்தது கொல்கத்தா அணி.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் விராட் கோலியும் ஏபி டிவில்லியர்ஸும் களத்தில் பௌண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசிக்கொண்டிருந்தனர். 14 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை தாண்டிவிட்ட பெங்களூரு 200 ரன்களைத் தாண்டி குவிக்கும் முனைப்பில் இருந்தது.

15வது ஓவரை வீச நிதிஷ் ராணாவை அழைத்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். கிரிக்கெட் உலகம் அதனை ஒரு சுவாரஸ்யமான விஷயமாக பார்த்தது. இரு பெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்க ஐபிஎல் வரலாற்றில் தனது இரண்டாவது ஓவரை வீச வந்தார் நிதிஷ் ராணா.

அந்த ஒரே ஓவரில் டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் அவுட் செய்தார். குறிப்பாக விராட் கோலியின் விக்கெட்டுகளைத் தகர்த்தபோது பெங்களூரு அணியின் ரசிகர்கள் அதிர்ந்தனர். மிச்செல் ஜான்சன், சுனில் நரேன் என மூத்த பந்துவீச்சாளர்கள் ரன்களை வழங்கிவந்த நிலையில் ஆறே பந்துகளில் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் ராணா. அப்போட்டியில் பேட்டிங்கிலும் நிதிஷ் அசத்தினார். 25 பந்துகளில் 2 பௌண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்கள் குவித்தார்.

நிதிஷ் ராணா டெல்லியைச் சேர்ந்த 24வயது இளைஞர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடியவந்த ராணாவை கடும் போட்டிக்கு பிறகு 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடும் வீரராக அறியப்பட்ட ராணா, 2016 மற்றும் 2017 ஐபிஎல் சீசனில் மொத்தம் 17 போட்டிகளில் நான்கு அரை சதமும் விளாசியுள்ளார்.

இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியொன்றில் 35 பந்துகளில் ஐந்து பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 59 ரன்கள் குவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான சமீபத்திய ஆட்டமொன்றில் தொடக்க வீரர்கள் அஜின்க்யா ரஹானே மற்றும் டி ஆர்சி ஷார்ட் என இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார் ராணா. அதே போட்டியில் பேட்டிங்கில் 27 பந்துகளைச் சந்தித்து 35 ரன்களை விளாசினார். இந்த இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

'' என்னுடைய வேலை ரன்களை கட்டுப்படுத்துவது என்பது எனக்குத் தெரியும். நான் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பந்து வீசியுள்ளேன். என் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற யோசனை எப்போதும் மூளையில் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும் என்னுடைய இப்போதைய இலக்கு என்னால் முடிந்தவற்றை சிறப்பாகச் செய்வதே'' என ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின்னர் கூறினார் இளம் இடது கை பேட்ஸ்மேனான நிதிஷ் ராணா.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Scott Barbour

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன்

3. சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கேரள இளைஞர் சஞ்சு சாம்சன். இதுவரை ஐபிஎல்லில் 71 போட்டிகளில் விளையாடி 8 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 1611 ரன்களை குவித்துள்ள சஞ்சு, இந்தியாவுக்காக இதுவரை ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2013 முதல் 2015 வரை விளையாடிய சஞ்சு, பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை தனது அணிக்கு விளையாட தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்தில் 37 ரன்கள், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 49 ரன்களும் குவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 45 பந்துகளில் 10 சிக்ஸர்கள் விளாசி 92 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார் சஞ்சு. அடிப்படையில் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் '' எனது அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறதோ அதைப் பூர்த்திச் செய்வேன். முடியுமளவுக்கு அதிக போட்டிகளை வென்று தர முயல்கிறேன். விக்கெட் கீப்பிங், ஃபீல்டிங் என எந்தப் பணியானாலும் எனது சிறப்பான பங்களிப்பை வழங்குவேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

படக்குறிப்பு, சஞ்சு சாம்சன்

23 வயது சஞ்சு சாம்சன் வலது கை பேட்ஸ்மேன் ஆவார். 17 வயதில் கேரளா அணிக்காக முதல் தர போட்டியில் விளையாடியவர் சஞ்சு. ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சி அளித்த காலகட்டத்தில் ''இந்திய அணிக்கு எதிர்காலத்தில் சிறந்த வீரராக சாம்சன் திகழ்வார்'' என சாம்சனை பற்றிப் புகழ்ந்துள்ளார்.

4. மயங்க் மார்கன்டே

ஐபிஎல் 11வது சீசனில் அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்நிலையில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மயங்க் மார்கன்டே.

பஞ்சாபில் பிறந்த மயங்க் இதுவரை ஆறு முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் இவரை எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் முதல் போட்டியிலேயே மார்கன்டேவுக்கு வாய்ப்பளித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார் மயங்க். தோனி, ராயுடு, தீபக் சஹர் ஆகிய மூவரின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். தனது இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய மயங்க் எதிரணியின் பேட்ஸ்மேன்களான விருதிமான் சாஹா, ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தான் விளையாடிய முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட்டுகள் என எந்தவொரு வீரரும் இதுவரை ஐபிஎல்லில் சாதிக்காததை செய்து காட்டியுள்ளார் மயங்க். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னிலை வகிக்கும் பௌலருக்கு ஊதா நிறத் தொப்பி அணிவிக்கப்படும்.

இந்த சீசனில் ஏப்ரல் 19 நிலவரப்படி முதல் இடத்தில் இருந்த பௌளரான மயங்க் மார்கன்டே தனக்கு பர்ப்பிள் நிற தொப்பி வழங்கப்பட்டபோது ''எனக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா அதிகம் அறிவுரைகளை வழங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அடிப்படை விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள் என கூறினார். க்ரூனால் பாண்டியா எனக்கு களத்திலும் வலைப்பயிற்சியிலும் குறிப்பிடத்தக்க உதவிகள் செய்துள்ளார். அது மிகவும் உதவியது'' எனத் தெரிவித்தார்.

ரிஷப் பன்ட்

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN

படக்குறிப்பு, ரிஷப் பன்ட்

ரிஷப் பன்ட் :-

இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் இருக்கும் பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த வீரர், ரிஷப் பன்ட்.

இதுவரை நான்கு போட்டிகளில் 34.50 என்ற சராசரியுடன் 138 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை ரிஷப் அடித்துள்ள பௌண்டரிகளின் எண்ணிக்கை 20.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த பன்ட் 2016 ஆண்டு முதல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2016 ஆம் ஆண்டு பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடிய ரிஷப் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை புரிந்தார்.

கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 43 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 2016-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஓர் போட்டியில் 48 பந்தில் சதமடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

அதிரடியாக சிக்ஸர்கள் விளாசுவதையும் பௌண்டரிகளுக்கு பந்தை விரட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் ரிஷப் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்தில் 28 ரன்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்தில் 20 ரன்கள், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் ஆறு பௌண்டரி இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 47 ரன்கள், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்தில் 7 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 43 ரன்கள் குவித்திருக்கிறார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் 20 வயது இடது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: