காமன்வெல்த் உச்சிமாநாடு: தலைவராக இளவரசர் சார்லஸை நியமிக்க ராணி கோரிக்கை
தனக்கு பிறகு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக தனது மகனான இளவரசர் சார்லஸை நியமிக்க வேண்டுமென காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களை இங்கிலாந்து ராணி கேட்டுக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
லண்டனில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் நாடுகளின் அரசுத்தலைமை கூட்டத்தை (CHOGM) தொடக்கிவைத்த ராணி, எதிர்காலத்தில் காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவியில் இளவரசர் சார்லஸ் அமர்வது தனது உண்மையான விருப்பம் என்று கூறினார்.
காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பதவி பாரம்பரியம் சார்ந்தது இல்லையென்பதால், ராணியின் மரணத்துக்கு பிறகு இயல்பாக வேல்ஸ் இளவரசருக்கு இந்த பதவி கிடைக்காது
பக்கிங்ஹம் அரண்மனையில் குழுமியுள்ள 53 நாடுகளின் தலைவர்களும் தாங்கள் வெள்ளிக்கிழமையன்று சந்திக்கும்போது இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கு இந்த அமைப்பின் தலைவர் சுழற்சி முறையில் தரப்பட வேண்டும் என சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக பிபிசியின் ஜேம்ஸ் லேண்டேல் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Image copyrightREUTERS
முக்கிய பிரமுகர்கள், ராஜ குடும்பத்தினர் மற்றும் பிரதமர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றிய ராணி, ''எனது இல்லத்துக்கு இந்த கூட்டத்துக்காக வருகை புரிந்துள்ள அனைவரையும் நான் வரவேற்கிறேன்'' என்று வரவேற்றார்.
''உங்களுக்காக பணியாற்றுவது மற்றும் சேவைபுரிவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் கெளரவம்'' என்று அவர் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், ''எதிர்காலத்திலும் காமன்வெல்த் அமைப்பு ஸ்திரதன்மையோடு செயல்படவேண்டும் என்பதும், தொடர்ந்து இந்த அமைப்பு சிறப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்ற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்'' என்று குறிப்பிட்டார்.
''காமன்வெல்த் அமைப்பு தொடர்பாக எனது தந்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கிவைத்த முக்கிய பணியை வேல்ஸ் இளவரசர் தொடர வேண்டும் என்பதை எதிர்க்களத்தில் முடிவுசெய்யவேண்டும்'' என்று இங்கிலாந்து ராணி மேலும் குறிப்பிட்டார்.
"காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இளவரசர் சார்லஸ் நியமிக்கப்பட்டால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று காமன்வெல்த் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மால்ட்டாவின் பிரதமர் ஜோசஃப் மஸ்கட் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் நாடுகள் இடையே கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த இரண்டுநாள் காமன்வெல்த் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்:
- இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா?
- நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்?
- காமன்வெல்த் உச்சிமாநாட்டில் மோதி : இந்தியாவுக்கு என்ன கொண்டு வருவார்?
- தனக்குப் புனிதர் தோற்றம் ஏற்படுத்த காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்துகிறாரா மோதி?
- #தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












