காமன்வெல்த் போட்டி: கோல்டு கோஸ்டில் ஒரு லட்சம் ஆணுறைகள் தயார்!

பட மூலாதாரம், Ryan Pierse/Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கவுள்ளன. இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
20 ஆயிரம் பேர் சாப்பிடத் தோதான உணவுக் கூடம் முதல் ஒரு லட்சம் ஆணுறைகள் வரை எல்லாமும் தயார் நிலையில் உள்ளன.
78 மாடி கட்டடம்
'கோல்ட் கோஸ்ட் நகரத்தின் மிகப்பெரிய ஈர்ப்பு என்று அங்குள்ள 322 மீட்டர் உயர 'Q1 ஸ்கை பாயிண்ட் கட்டடத்தைக் குறிப்பிடலாம்.
உலகின் ஆறாவது உயரமான கட்டடமான இந்த கட்டடத்தில் லிஃப்ட்டில் ஏறி 77வது மாடிக்குச் செல்ல வெறும் 43 நொடிகளே ஆகின்றன.
அங்கு சென்ற பிறகு காதுகள் அடைத்து, ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் அவ்வளவு உயரத்தில் இருந்து தரையில் இருக்கும் காட்சியை பார்க்கும்போது, கண்கள் வியப்பில் விரிந்துவிடுகிறது.
இங்கிருந்து முழு நகரத்தையும் 360 டிகிரியில் ஒரு பறவையின் கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது. பார்க்க அச்சமாக இருந்தாலும் அதுவொரு பரவச அனுபவம்.
ஒருபுறம், நீல பட்டாடை விரித்தது போல பசிபிக் பெருங்கடல் மறுபுறத்தில் கோல்ட் கோஸ்டின் வானளாவிய கண்கவர் கட்ட்டங்கள். எதை பார்ப்பது, எதை விடுவது என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.
துபாயின் 'புர்ஜ் கலீஃபா', அமெரிக்காவின் 'உலக வர்த்தக மையம்' மலேசியாவின் 'பெட்ரோனாஸ் டவர்', அமெரிக்காவின் 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்' என உலகின் மிக உயரமான கட்டடங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது ஸ்கை பாயிண்ட்.
கட்டடத்தின் மேல் இருந்து கீழ்நோக்கிப் பார்க்கும்போது, நாற்புறமும் கண்ணாடிகள் சூழ்ந்திருந்தாலும், கால்கள் நடுங்குகின்றன, கைகள் வெலவெலக்கின்றன. உணவு மற்றும் தங்கும் ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
78 மாடிகள் இருந்தாலும், 78வது மாடிக்கு செல்வதற்கு அனைவருக்கும் அனுமதி கிடையாது. இங்கு தனியார் நிகழ்ச்சிகளும், பெரிய அளவிலான கொண்டாட்டங்களும் நடைபெறும்.
இந்த கட்டடத்தின் அஸ்திவாரம் 1998ஆம் ஆண்டில் போடப்பட்டு, ஏழாண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. 2005இல் திறக்கப்பட்ட இந்த கட்டடத்தின் 77ஆவது மாடிக்கு வருவதற்கு 25 ஆஸ்திரேலிய டாலர்கள் அதாவது 1,200 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.
இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை
இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய அணியினர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே சில சிரிஞ்சுகள் கிடைத்த பிறகு குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்டது. இந்த சிரிஞ்சுகளுக்கும் இந்திய வீரர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என இந்திய அணி கூறுகிறது.
ஆனால் காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர் டேவிட் க்ரேவென்பெர்க் முழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்திய குத்துச்சண்டை வீரர்கள் நால்வரின் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் குடியிருப்புக்கு மிக அருகில்தான் சிரிஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள குத்துச்சண்டை வீரர்களின் சிறுநீர் 'மாதிரிகள்' எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சிரிஞ்சுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதுதொடர்பான அறிக்கை விரைவில் வெளிவரும்.
ஆனால் இந்தியத் தரப்போ இது ஒரு 'வழக்கமான நடைமுறை' என்றும், சிரிஞ்சுகளுக்கும், இந்திய வீரர்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் கூறுகிறது.

பட மூலாதாரம், Chris Hyde/Getty Images for Sudirman Cup
இதற்கிடையில், இந்திய அணியின் விக்ரம் சிசோடியா இந்திய வீரர்கள் அனைவரையும் அழைத்து, நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோல்ட் கோஸ்ட் கிராமம் எப்படி இருக்கிறது?
டெல்லி காமன்வெல்த் போட்டி விளையாட்டு கிராமத்தைப் போன்று கோல்ட் கோஸ்ட் கிராமம் பிரம்மாண்டமானது இல்லை. 6,500க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு ஏற்ப ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட 1,257 குடியிருப்புகள் உள்ளன.
29 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த விளையாட்டு கிராமத்தில் வீரர்களின் வசதிக்காக 24 மணி நேர சேவை வழங்கும் மருத்துவமனை, பல 'பிசியோதெரபிஸ்ட்'கள் கொண்ட உடற்பயிற்சிக்கூடம் என தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முடி திருத்தகம் மற்றும் அழகு நிலையம் போன்ற வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன. நான் அங்கு சென்றபோது, நீளம் தாண்டுதல் பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய தடகள வீராங்கனை நைனா ஜேம்ஸ் தனது முகத்திற்கு ஃபேஷியல் செய்துக் கொண்டிருந்தார்.
அழகு நிலையத்திற்கு அடுத்ததாக பழச்சாறு நிலையம் இருந்த்து. அங்கு இந்திய மற்றும் கனடா நாட்டு விளையாட்டு வீரர்கள் அதிகமான அளவில் இருந்தார்கள். தினமும் இருபதாயிரம் பேர் உணவு உண்ணும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் மாபெரும் உணவுக்கூடத்தில் உலகின் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்.
ஆரம்பத்தில் இந்திய உணவுகள், பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் இந்திய தரப்பினர் ஆதங்கத்தை வெளிகாட்டிய பிறகு இந்திய உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால் இந்திய அணி தங்களது சமையல்காரரை அழைத்து வர அனுமதிக்கப்படவில்லை.
1 லட்சம் ஆணுறைகள்
உலகம் முழுவதும் இருந்து போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக வந்திருக்கும் விளையாட்டு வீரர்களுக்காக சுமார் ஒரு லட்சம் ஆணுறைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, அதாவது ஒவ்வொரு வீரருக்கும் சராசரியாக 16 ஆணுறைகள்.
தினமும் 3,400 தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் மாற்ற வேண்டும்
துப்புரவு ஊழியர்களுக்கு நாள்தோறும் 3,400 தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை மாற்ற வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு குயின்ஸ்லாந்தில் இரண்டு பில்லியன் டாலர்கள் மற்றும் கோல்ட் கோஸ்டில் ஒரு கோடியே 1.7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுகளால் இதுவரை 16,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. போட்டிகள் முடிவடைந்து விளையாட்டு கிராமம் காலியானவுடன் இந்த குடியிருப்புக்கள் மக்களுக்கு விற்கப்படும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், சுமார் 3,500 பத்திரிகையாளர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான செய்திகள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












