கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்ஸர் - பரபரப்பான இறுதியாட்டத்தில் இந்தியா வெற்றி
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நிதாகஸ் கோப்பையை கைப்பற்றியது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச முத்தரப்பு டி20 தொடர் கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நிதாகஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் இந்தியாவும், வங்கதேசமும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் மோதின.
டாஸ் வென்ற இந்தியா, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த வங்கதேசம் 166 ரன்களை பெற்றது.
அந்த அணியின் ஷபீர் ரஹ்மான் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தனது ரன்குவிப்பை தொடங்கிய இந்தியா, தொடக்க வீரர் தவான் மற்றும் ரெய்னா ஆகியோரை விரைவில் இழந்தது.
அணித்தலைவர் ரோகித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார்.
ராகுல் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் போக்கை தனது அதிரடி ஆட்டத்தால் மாற்றினார்.
19-ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் எடுத்த 22 ரன்களும் , சிகரம் வைத்தாற்போல ஆட்டத்தின் இறுதி பந்தில் இவர் விளாசிய சிக்ஸரும் இந்தியாவுக்கு ஆட்டத்தில் வெற்றியையும், கோப்பையையும் பெற்றுத் தந்தது.
இறுதியில் 168 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












