ஈலோன் மஸ்க்: மனித மூளையுடன் இணையும் தொழில்நுட்பம் ஆபத்தா? வளர்ச்சியா?

பட மூலாதாரம், Getty Images
நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூளைகளில் கம்யூட்டர் சிப்பை வைத்துக்கொண்ட சூப்பர் மனிதர்களை உருவாக்க ஈலோன் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.
அவரது நிறுவனமான நியூரோலிங்க், தனது மூளையால் மட்டுமே இயக்கி கம்ப்யூட்டர் கேமை விளையாடும் ஒரு குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு பன்றியின் மூளைக்குள் இருக்கும் சிப்பிலிருந்து வரும் நரம்பியல் செயல்பாடு குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இயந்திரங்களுடன் பேச நமக்கு சிப் தேவையில்லை. ஒரு ஹெட்செட்டைப் போட்டுக்கொண்டால் நாம் மனதில் நினைப்பதை இயந்திரங்களுக்குக் கொண்டு சேர்த்து அவற்றை இயக்க முடியும். இதை செய்ய மூளையின் ஆற்றலை பயன்படுத்தவேண்டும், கவனத்தைக் குவிக்க வேண்டும்.
இதன் அடிப்படை மிகவும் எளிதானது. ஹெட்செட்டில் உள்ள ஈ.ஈ.ஜி சென்சார்கள், மூளையில் உள்ள மின்சார சிக்னல்களை அளவிடுகின்றன. நீங்கள் கவனிக்கிறீர்களா அமைதியாக இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த குறிப்பிட்ட அளவை எட்டியபிறகு அவை செயலில் இறங்குகின்றன.

பட மூலாதாரம், Getty Images
`` முந்தைய எந்த தலைமுறையையும் விட நாம் அதிகமான ஒரு தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருக்கிறோம். மனதின் குவியத்தை இது அதிகப்படுத்துகிறது என்பதுதான் இதன் பெரிய பயன் - இது சமூகத்திற்கும் இளைய சமுதாயத்தினருக்கும் உதவியாக இருக்கும்`` என்கிறார் மைண்ட்ப்ளேவின் இயக்குநர் ட்ரே அஸாம்.
கம்ப்யூட்டர் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பெரும்பாலான ஆராய்ச்சிகள், அதிகமாக நகர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதாக இருக்கின்றன. அவர்களுக்கு இதுபோன்ற இடைமுகங்கள் பெரிய ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தலாம்.
தலையில் மாட்டிக்கொள்ளும் கருவிகளை அடிப்படையாகக் கொண்ட பல நியூரோ டெக் நிறுவனங்கள் சந்தையில் வந்திருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
அவற்றில் ஒன்றுதான் பிரெஞ்சு ஸ்டார்ட் அப்பான நெக்ஸ்ட்மைட். நமது எண்ணங்களாலேயே கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும் ஒரு ஹெட்செட்டை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
இது மனிதர்களின் தலையின் பின்பகுதியில் வைக்கப்படும் ஒரு ஈ.ஈ.ஜி.சென்சார். நமது கண்பார்வைக்கான மூளைப்பகுதியில் உள்ள மின் அதிர்வுகளை இது கணக்கிடும். பின்னர் நாம் எதைப் பார்க்கிறோம் என்று கண்டுபிடிக்கும்
எடுத்துக்காட்டாக, கம்யூட்டர் திரையில் சில இடங்களை நாம் பார்த்தால், பார்வை எங்கு குவிகிறது என்பதை சென்சார் கவனிக்கும். எந்த பட்டனை அழுத்தவிரும்புகிறோம் என்பதை கம்ப்யூட்டருக்கு அது சொல்லிவிடும்.
ஆனால் இதில் மிக எளிமையான செயல்பாடு மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பின் நம்பரை அழுத்த வேண்டியிருந்தால், பட்டன்களைப் பார்ப்பதன் மூலமே நாம் அந்த எண்ணை உள்ளிடலாம்.

பட மூலாதாரம், Getty Images
"இதை மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தினால் எண்ணற்ற பயன்கள் வரும். இன்னும் சில ஆண்டுகளில் ஏ.ஆர் கண்ணாடிகள் வரும். அதனோடு இந்தத் தொழில்நுட்பத்தை இணைத்தால், மெய்நிகர் உலகில் நீங்கள் முழுவதுமாக மூழ்கி அதை அனுபவிக்க முடியும். மூளையை மெய்நிகர் உலகோடு இணைக்க முடியும். மெய்நிகர் உலகில் இருக்கும் எதையும் நீங்கள் உங்கள் எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்." ட்ரே அஸாம்.
சில அற்புதமான பயன்கள் இருந்தாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கம் ஒன்றும் இருக்கிறது. மூளையின் செயல்பாடுகளை அளப்பதற்குப் பதிலாக மூளையை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் அது பிரச்சனையாகும். ஒருவரின் எண்ணங்களைப் படித்து, நிஜம் எது என்ற அவரது புரிதலை மாற்றி அவரை நாம் கட்டுப்படுத்தலாம் என்பது ஆபத்தானது.
``மூளை சார்ந்த தனியுரிமை என்பது என் மிகப்பெரிய கவலை. இதை விசாரணையின்போது பயன்படுத்தலாம். ஒரு கேள்வி கேட்கும்போது மூளைக்குள் விரியும் காட்சியை வைத்தே அவர் சிந்திப்பதை நாம் கண்டுபிடிக்கலாம். தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்துக்குள் ஆர்வமாக வருகின்றன. ஆனால் நமது மனம் சார்ந்த தரவுகளும் அவர்களுக்குள் போய்விடும். அதை நாம் பாதுகாக்க வேண்டும்." என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் , நியூரோடெக்னாலஜி மைய இயக்குநர் ரஃபேல் யூஸ்டே.
மேலும் அவர்,`` இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அதீத சக்தி வாய்ந்தவை. நம்மை மனிதர்களாக எது வைத்திருக்கிறதோ அதை, அந்த மூளையை இவை குறிவைக்கின்றன. மனித இனத்தில் முதல்முறையாக மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு தொழில்நுட்பம் வந்திருக்கிறது`` என்கிறார்.
இது கொஞ்சம் அதீதமாகத் தெரியலாம். ஆனால் நமது மூளைத்திறனை, அறிவை அதிகரிக்கும் ஒரு தொழில்நுட்பத்தின் உருவாக்கத்தில் ஏற்கனவே ஈலோன் மஸ்க் ஈடுபட்டிருக்கிறார்.
எதிர்காலத்தில் நம் மூளைகள் கட்டுப்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருந்தாலும் இப்போதைக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிறார்கள் நிபுணர்கள்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது?
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
- இலங்கையில் முன்னெப்போதும் இல்லாமல் உயரும் நெல் விலை - என்ன காரணம்?
- சூயஸ் குடிநீர் திட்டம்: திமுகவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாறியதா?
- ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












