அலைக்கற்றை வழக்கில் சிபிஐ புதிய மனு

பட மூலாதாரம், BBC World Service
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், புதிய திருப்பமாக, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி புகார் கூறி, புதிய மனு ஒன்றை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
ஆ.ராசா, அவரது அப்போதைய தனிச் செயலர் சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் பெஹுரியா உள்ளிட்டோர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 409 இன் கீழ் புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் மதிப்புமிக்க 2ஜி அலைக்கற்றைகளை, தங்களுக்கு வேண்டிய நபர்கள் பயனடையும் வகையில், சட்ட விதிகளுக்கு முரணாக, விதிமுறைகளை மீறி வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேபோல், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஷரத்குமார் உள்ளிட்டோருக்கு எதிராகவும் பிரிவு 409 இல், 120-வது துணைப் பிரிவின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது, அவர்களும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் லலித், இன்று அந்த மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர்கள் அனைவருக்கு எதிராகவும் ஐபிசி பிரிவு 409 இன் கீழ் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்ய போதிய ஆதாரம் இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய பிரிவின்கீழ், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
சிபிஐ யின் இந்த முயற்சி, குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வதற்கான விசாரணைகளை தாமதப்படுத்தும் முயற்சி என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








