விழுப்புரம் ஆசிரமத்தில் ஒருவர் மாயம், பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு நடந்ததாக சர்ச்சை

விழுப்புரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உரிய உரிமம் பெறாமல் இயங்கி வந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த நபர் காணாமல் போனது மற்றும் அங்கிருந்த பெண் ஒருவர் சுமத்தும் பாலியல் வல்லுறவு புகார்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதிக்கு உட்பட்ட குண்டலப்புலியூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆதரவற்றோர் மற்றும் மனநல குறைபாடு உடையவர்கள் தங்கியிருந்த அந்த ஆசிரமத்தை ஜுபின் பேபி என்பவர் இயக்கி வந்துள்ளார்.
குறிப்பாக திருப்பூரைச் சேர்ந்த ஜபருல்லாவை அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் அவரது மருமகன் சலீம்கான், நண்பர் உதவியுடன் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குண்டலப்புலியூரில் இயங்கி வரும் தனியார் ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சலீம்கான் தனது மாமா ஜபருல்லாவை பார்க்க ஆசிரமத்துக்கு சென்றபோது அங்கு அவர் இல்லை என தெரிய வந்தது. இது குறித்து ஆசிரம நிர்வாகத்திடம் கேட்டபோது, அங்கு சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் போன ஜபருல்லா குறித்து காவல் துறையில் சலீம்கான் புகார் அளித்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து உரிய விசாரணை நடத்த விழுப்புரம் கெடார் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார், விழுப்புரம் கோட்டாட்சியர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் தனியார் ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில் ஆசிரமம் உரிய உரிமம் இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆசிரமத்தில் இருந்த 142 பேரும் மீட்கப்பட்டனர்.
உரிமையாளர் உட்பட 8 பேர் கைது

விதிகளை மீறியும் உரிய அனுமதியின்றியும் ஆசிரமத்தை நடத்தியதாக அதன் உரிமையாளர் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, விழுப்புரம் நீதிமன்றத்தில் கைது செய்தவர்களை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர்களை மார்ச் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை நீதிபதி அகிலா உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் சதீஷ், பூபாலன் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அனுமதியின்றி ஆசிரமம் நடத்தி வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வல்லுறவு செய்தது, ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்குக் கடத்தியது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆதரவற்றோரைத் துன்புறுத்தியது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் கெடார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பிபிசி இந்திய அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் ஆய்வு
- ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் 'பாசிட்டிவ்' திருநங்கை
- பாலுறுப்பு முறிவு- விறைத்திருக்கும்போது நிகழும் இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் என்ன?
- மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீசை ‘சுருட்டிய’ இந்தியாவின் தீப்தி சர்மா
காவல் கண்காணிப்பாளர் கூறுவது என்ன?
இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் பிபிசி தொடர்பு கொண்டு பேசியது.

"இந்த ஆசிரமத்தில் வசித்த ஜபருல்லாவை காணவில்லை என்று அவரது உறவினர் புகார் அளித்திருந்தார்.விசாரணை நடத்தியதில் ஜபருல்லா விழுப்புரத்திலிருந்து பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் மாற்றப்பட்டது தெரிய வந்தது. ஆனால் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்திலிருந்து கடந்த ஆண்டு அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவரை தேட முயன்றும் கண்டறிய முடியவில்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்," என்றார் எஸ்பி ஸ்ரீநாதா.
மேலும் விசாரணையில் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகப் புகார் அளித்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
"இந்த வழக்கு தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளோம். ஆசிரமத்தில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆசிரமத்திலிருந்து மீட்கப்பட்ட 142 பேரில் சிலரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலரை உறவினர்கள் வந்து அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி, "ஜபருல்லா நீங்கலாக இந்த ஆசிரமத்தில் மீதமுள்ள 142 பேர் இருக்கிறார்கள்," என்று பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
- பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
- சிரியா நிலநடுக்கம்: தலை சாய்க்கவும் இடமில்லாமல் தவிக்கும் 4 ஆயிரம் குடும்பங்கள்
- தென்காசி இளம்பெண் கடத்தப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தில் திருப்பத்திற்கு மேல் திருப்பம்
- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக தற்காப்புக் கலை சொல்லித் தந்த விஜயலட்சுமி
சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரியுள்ளார்.
"இந்த ஆசிரமத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து 143 பேர் அடைத்து வைக்கப்பட்டு சித்தராவதைச் செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்களைப் போதைப்பொருட்கள் கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். இவை பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போயுள்ளவர்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு விசாரணை குழு அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













