குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொங்கு பாலம் விபத்துக்குள்ளான மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை

பட மூலாதாரம், Getty Images
குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வரலாற்று வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சியால் இதுவரை 20 இடங்களில் மட்டுமே முன்னிலையை எட்ட முடிந்துள்ளது.
இந்தப் போக்கு குறித்துப் பேசியுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்தியில் பிரதமர் மோதி மீது குஜராத் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
ராஜ்நாத் சிங் அதுகுறித்துப் பேசியபோது, "குஜராத்தில் அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்கள் இன்னும் பிரதமர் மோதி மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதால் குஜராத்தில் புதிய சாதனையைப் படைக்கவுள்ளோம்," என்றார்.
குஜராத்தில், பாஜக 152 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆம் ஆத்மி 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இதைத் தொடர்ந்து பாஜகவின் பெண் தொண்டர்கள் காந்திநகரில் நடனத்துடன் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
குஜராத்தில் நிலைமை இப்படியிருக்க, இன்னொருபுறம் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் 35 இடங்கள், பாஜக 30 இடங்கள் என்ற நிலையில் முன்னிலை வகித்து வருகின்றன.

பட மூலாதாரம், ANI
ஆம் ஆத்மி கட்சி வாக்கு எண்ணிக்கையில் பின்னிலை வகித்தபோதும் மகிழ்ச்சியடைவது ஏன்?
குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறப்போவதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியிலும் பஞ்சாபிலும் அபார பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு, இப்போது குஜராத்தில் சுமார் 6 முதல் 7 இடங்களைப் பிடிக்கும் வகையிலேயே அக்கட்சி முன்னிலையில் உள்ளது. இருப்பினும், முடிவுகள் தெளிவாகத் தெரிவதற்கு இன்னும் நேரம் ஆகும்.
டெல்லியிலும் பஞ்சாபிலும் பெற்ற வாக்கு சதவீதம், ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை அளிக்கும். கோவாவிலும் அக்கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில், "குஜராத் மக்களின் வாக்குகளால் ஆம் ஆத்மி இன்று தேசிய கட்சியாக மாறுகிறது. முதன்முறையாக கல்வி, சுகாதாரத்திற்கான அரசியல் தேசிய அரசியலில் முத்திரை பதிக்கிறது. இதற்காக நாடு முழுவதுக்கும் வாழ்த்துகள்," எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தற்போது நாட்டில் 8 தேசிய கட்சிகள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை அடக்கம்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலான வாக்கு எண்ணிக்கையில் குஜராத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. அந்தக் கட்சி சுமார் 154 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் 35 இடங்களிலும் பாஜக 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தொங்கு பாலம் விபத்துக்குள்ளான மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் முன்னிலை
குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொங்கு பாலம் விபத்து நிகழ்ந்த மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தி அம்ருத்தியா முன்னிலை வகிக்கிறார்.

பட மூலாதாரம், AFP
அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் ஜெயந்தி பட்டேல் பின்தங்கியுள்ளார்.
சமீபத்தில் மோர்பியின் தொங்கு பாலம் இடிந்து விழுந்து 35 பேர் உயிரிழந்தனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குழந்தைகள்.
மறுசீரமைப்பு செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த சோகம் நிகழ்ந்தது. அதுகுறித்து மக்கள் மத்தியில் பெரும் கோபம் ஏற்பட்டது. மக்கள் பாஜக அரசையும் இது தொடர்பாக விமரித்தனர்.
"பாஜக 130 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும்"
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 130 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று பாஜக வேட்பாளர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று ஹர்திக் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் கூறினார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஹர்திக் பட்டேல், "குஜராத் மாநிலத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் கட்சி(காங்கிரஸ்) இங்கு வெற்றி பெற முடியாது. நாங்கள்(பாஜக) 135 முதல் 145 இடங்களைப் பெறப் போகிறோம். நாங்கள் உறுதியான அரசாங்கத்தை அமைப்போம்," என்றார்.
மேலும், மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கட்சியாகவே பாஜகவை பொதுமக்கள் கருதுகின்றனர், கட்சி அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று ஹர்திக் பட்டேல் கூறினார்.

பட மூலாதாரம், ANI
"என்ன வேலை செய்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே அரசு அமைகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு கலவரம்/பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. பாஜக அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். பாஜக சிறப்பாகச் செயல்பட்டு மக்களுடைய நம்பிக்கையை வலுவாக்கியுள்ளது," எனத் தெரிவித்தார்.
"குஜராத்தின் பெருமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டுள்ளது. அதனால்தான் மக்கள் காங்கிரஸை விட்டுவிலகிவிட்டனர்" என்று காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசியவர், மறைமுகமாக ராகுல் காந்தியைக் குறி வைத்து, தொலைநோக்குப் பார்வையில்லாத தலைவர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் கூறினார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வீரம்கம் தொகுதியில் போட்டியிட்ட ஹர்திக் பட்டேல், இந்த ஆண்டு ஜூன் மாதத்தின்போது பாஜகவில் இணைந்தார்.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பட மூலாதாரம், ANI
இதையொட்டி இரு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அவற்றில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றன.
பாஜகவின் ஏழாவது வெற்றி
குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவுக்கான எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதுவரையிலான நிலவரப்படி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் ஆளும் பாஜக, சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெறும் ஏழாவது தொடர் வெற்றியாகும் இது. அங்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும், குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கணித்திருந்தன.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதி பாஜக தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தி சுமார் 30 பேரணிகள் மற்றும் சாலை வழியாக பயணம் செய்து வாக்கு சேகரித்தார். பாஜகவை சேர்ந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அம்மாநிலத்தில் முகாமிட்டு பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இவர் மட்டுமின்றி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் செளஹான், ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் குஜராத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர்.
பாஜகவைச் சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
182 தொகுதிகளில் 37 வாக்கு எண்ணும் மையங்கள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தபோது, குஜராத்தில் இரண்டு தேர்தல் பேரணிகளில் உரையாற்றுவதற்காக வந்து சென்றார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை வழிநடத்தினார். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5 மாதங்களாகவே ஆம் ஆத்மி கட்சிக்காக குஜராத்தில் அவ்வப்போது முகாமிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஆமதாபாதில் மூன்று மையங்களும், சூரத் மற்றும் ஆனந்தில் இரண்டு மையங்களும், மீதமுள்ள 30 மாவட்டங்களில் தலா ஒன்றும் இருக்கும். இதையொட்டி மொத்தம் 182 வாக்கு எண்ணும் பார்வையாளர்கள் மற்றும் 494 உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஏராளமான தேர்தல் அலுவலர்கள் முழு வாக்கு எண்ணும் பணியிலும் அவற்றை ஒருங்கிணைக்கவும் தயார்நிலையில் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் உள்ளூர் போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படை (எஸ்ஆர்பிஎஃப்), மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) காவலர்களின் மூன்றடுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான 71.28 சதவீதத்தை விட 66.31 சதவீத வாக்குகள் இம்முறை குறைவாக பதிவாகின.
முதல்வர் பூபேந்திர படேல், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, இளைய தலைவர்களாக கருதப்படும் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் உட்பட மொத்தம் 1,621 வேட்பாளர்களின் தலைவிதியை வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிவு செய்யும்.
மொத்தம் 70 அரசியல் கட்சிகளும், 624 சுயேச்சைகளும் இந்த மாநிலத்தில் தேர்தல் களத்தில் இருந்தனர்.
முக்கிய போட்டியாளர்களான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் 101 வேட்பாளர்களும், பாரதிய பழங்குடியினர் கட்சியிலிருந்து (பிடிபி) 26 பேரும் போட்டியிட்டனர்.
2017 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், பிடிபிக்கு இரண்டு இடங்களும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு மூன்று இடங்களும் கிடைத்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












