ரிஷி சூனக் பிரிட்டன் பிரதமரானதில் பாஜக பெருமைப்பட என்ன இருக்கிறது?

ரிஷி சூனக்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ரிஷி சூனக் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இந்தியாவில் அரசியல் கட்சிகளோடு கூடவே பொது மக்களும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் சிறுபான்மை இந்து ஒருவருக்கு பிரதமராகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இது பெருமைக்க, மகிழ்ச்சியான தருணம் என்றும் பலர் வர்ணித்துள்ளனர்.

சூனக் பிரதமராகியுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்தியுள்ள மகிழ்ச்சியை இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களால் மறைக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் ரிஷி சூனக்கை இந்து என்று குறிப்பிடுவதில் பாஜக தலைவர்கள் பெருமை கொள்கின்றனர்.

ரிஷி சூனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், உங்கள் இந்து வேர்களைப்பற்றி நாங்கள் பெருமிதம் அடைகிறோம். உங்கள் சாதனைக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ரிஷி சூனக்கை வாழ்த்திய பாரதிய ஜனதா கட்சித்தலைவர் கபில் மிஷ்ரா, ஒரு பக்தியுள்ள இந்து, தீபாவளியன்று, பிரிட்டனின் பிரதமராகியுள்ளார் என்று எழுதியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரிஷி சூனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

42 வயதான ரிஷி சூனக், போரிஸ் ஜான்சன் அரசில் நிதியமைச்சராக இருந்தார். மேலும் தீபாவளி தினத்தன்று நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இல்லமான 11 டவுனிங் தெருவில் அவர் விளக்கேற்றிக்கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது.

"நான் ஒரு முழுமையான பிரிட்டிஷ் குடிமகன். இது என் வீடு மற்றும் நாடு. ஆனால் எனது மத மற்றும் கலாச்சார பாரம்பரியம் இந்திய மண்ணைச் சேர்ந்தது. என் மனைவி இந்தியர். நான் இந்து. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை," என்று 2015-இல் பிசினஸ் ஸ்டாண்டர்டுக்கு அளித்த பேட்டியில் சூனக் கூறியதாக அமெரிக்க செய்தி இணைய தளமான சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

ரிஷி சூனக்

பட மூலாதாரம், @RishiSunak

ரிஷி சூனக் பிரதமராக பதவியேற்றதில் பாஜக மட்டுமின்றி சாமானிய இந்துக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரிஷி சூனக் இந்த ஆண்டு பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா பிரிட்டிஷ் காலனியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்று சில இந்தியர்கள் எழுதியுள்ளனர்.

சோனியாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் மக்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அல்லது இந்தியாவுடன் தொடர்புடையவர்களின் சாதனையை எண்ணி பெருமை கொள்கின்றனர். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக வந்தாலும் சரி, சத்யா நாதெள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானாலும் சரி அல்லது சுந்தர் பிச்சை ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானாலும் சரி, இந்தப்பட்டியல் நீள்கிறது.

ஆனால் சிலர் இந்தியர்களின் இந்த மகிழ்ச்சி குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி பிரதமராவார் என்ற பேச்சு எழுந்தது. சோனியா காந்தி பிரதமராவதற்கு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சோனியா காந்தி பிரதமரானால் தலையை மழித்துக்கொண்டு வெள்ளை உடை அணியப்போவதாக பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அப்போது மிரட்டல் விடுத்திருந்தார்.

சோனியா

பட மூலாதாரம், Getty Images

இந்து மதத்தில் இது துக்ககரமான சூழ்நிலையில் செய்யப்படுகிறது. சோனியா காந்தி 1999 மக்களவைத்தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரியில் சுஷ்மா சுவராஜை தோற்கடித்தார். பெல்லாரியில் வெளிநாட்டு மருமகளுக்கு எதிராக நாட்டின் மகளை நிறுத்துவதாக பாஜக கூறியது. ஆனால் இந்த உத்தி வெற்றியடையவில்லை. சோனியா காந்திக்கும் சுஷ்மா ஸ்வராஜூக்கும் இடையிலான மோதல் அந்த ஆண்டுதான் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சுஷ்மா சுவராஜ் உயிருடன் இருக்கும் வரை, சோனியா காந்தி பிரதமராவது தொடர்பான தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் சுஷ்மா ஸ்வராஜ் 2013 இல் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், "சோனியா காந்திக்கு எதிராக எனக்கு ஒரே பிரச்சனைதான் உள்ளது. அவரை பிரதமராக ஏற்க முடியாது என்பதுதான் அது. பல கஷ்டங்கள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகு எனது நாடு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளது. இன்று இந்த சுதந்திர இந்தியாவில், இந்தியஅன்னையின் குழந்தைகளிடையே ஏராளமான திறமை உள்ளது. அப்படிப்பட்டவர்கள் காங்கிரஸிலும் இருக்கிறார்கள். ஆனால் சோனியா காந்தியை பிரதமராக காங்கிரஸ் முன்னிறுத்தும்போது, ​​அதை நான் எதிர்க்கிறேன், அது எப்போதும் இருக்கும்,"என்று குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சோனியா காந்தியை பிரதமராக்க அனுமதிக்கும் போது சுஷ்மா ஸ்வராஜ் இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்டனரா?

இப்போது ரிஷி சூனக் பிரதமரானதில் பாஜகவினர் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சோனியா காந்தி மீதான கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் நினைவுகூர்கிறார்கள். இதனுடன் கிறிஸ்தவர்கள் மற்றும் வெள்ளையர் பெரும்பான்மை மக்கள் உள்ள பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி, வெள்ளையர் அல்லாத மற்றும் மதச் சிறுபான்மை இந்துவை, பிரதமராக்கியது என்றும் மக்கள் கூறுகிறார்கள். ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்கிறது ஆனால் அதன் அரசில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை சுமார் 20 சதவிகிதமாக இருக்கும் நிலையில், பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி கூட இல்லை. "பிரிட்டன் பிரதமர் பதவியை ரிஷி சூனக் அடைந்திருப்பது, பல நிலைகளில் அசாதாரணமானது. பிரிட்டன் செய்திருப்பது, எந்த விதிவிலக்கிற்கும் குறைந்தது அல்ல. பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.க்கள், பிரிட்டனின் மக்கள்தொகையில் 7.5 சதவிகிதத்தைக் கொண்ட மதரீதியாக இந்து மற்றும் ஆசிய சிறுபான்மையினரான மாநிறம் கொண்ட ஒரு மனிதருக்கு தலைமைப் பதவியை அளித்துள்ளது," என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.

சசி தரூர்

பட மூலாதாரம், Getty Images

ரிஷி சூனக் பகவத் கீதையின் மீது கை வைத்து நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த ஆண்டு அவர் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டபோது, ​​​​கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பூஜை செய்யும் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

ரிஷி சூனக் பிரதமரானார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வந்தபோது, ​​"இந்தியாவில் இது சாத்தியமா? 2004 தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சோனியா காந்தியை பிரதமராக்க முன்மொழிந்தபோது எழுந்த சலசலப்பை நாம் மறந்துவிடக் கூடாது. சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்றும், ஒரு முக்கிய தலைவர் மொட்டை அடித்துக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்," என்று சஷி தரூர் குறிப்பிட்டார்.

"பிரதமராக்கும் முன்மொழிவை சோனியா காந்தி நிராகரித்தார். மன்மோகன் சிங் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலான இந்துக்கள் சீக்கியர்களை தங்களில் இருந்து பிரித்துப் பார்ப்பதில்லை. பெரும்பான்மைவாதத்தின் அரசியல் எழுச்சியில், இந்து, சீக்கியர், சமணர் மற்றும் பௌத்தர் அல்லாத ஒருவர் நாட்டின் பிரதமராக வருவார் என்று கற்பனை செய்ய முடியுமா? இது நடக்கும் நாளில் இந்தியா முதிர்ந்த ஜனநாயக நாடாக உருவெடுக்கும்," என்றும் சஷி தரூர் எழுதியுள்ளார்.

இஸ்லாமியர்களைப்போல் சீக்கியர்களை இந்து மதத்தில் இருந்து ஏன் பிரித்துப்பார்ப்பதில்லை?

இந்தக் கேள்வியை சசி தரூர் மட்டுமின்றி மற்ற கட்சித் தலைவர்களும் எழுப்பி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி ," ஒருபுறம் பிரிட்டன், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்குகிறது. மறுபுறம் இந்தியா, என்ஆர்சி மற்றும் சிஏஏ போன்ற பிளவுபடுத்தும் மற்றும் பாரபட்சமான சட்டங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது,"என்று குறிப்பிட்டுளார்.

மோதி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த விமர்சனங்களை பாஜக நிராகரித்து வருகிறது. "இந்தியாவில் மூன்று முஸ்லிம்களும் ஒரு சீக்கியரும் குடியரசுத் தலைவராக இருந்துள்ளனர். ஒரு சீக்கியர் 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தார். சிறுபான்மையினர் இந்தியாவின் நீதித்துறையில் உயர்மட்டத்தில் இருந்தனர் மற்றும் ராணுவ தலைமை பொறுப்பும் அவர்களிடம் இருந்துள்ளது. பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய அரசியலை வேறு எந்த நாட்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை," என்று பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி ஒரு சம்பிரதாய பதவியாக கருதப்படுகிறது. குடியரசுத்தலைவருக்கு அதிகாரங்கள் குறைவு. அதனால்தான் சில நேரங்களில் இந்திய குடியரசுத்தலைவர் ரப்பர் ஸ்டாம்ப் என்று அழைப்பார்கள்.

மத்தியில் யாருடைய ஆட்சி உள்ளதோ, அதன் பக்கம் குடியரசுத் தலைவர் முடிவுகளை எடுப்பார் என்பதற்கு இந்திய அரசியலில் பல உதாரணங்கள் உள்ளன. பாஜக தான், அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியது. இது தவிர ஜாகிர் உசேன் மற்றும் ஃபக்ருதீன் அலி அகமது ஆகியோரும் இந்திய குடியரசுத் தலைவர்களாக இருந்துள்ளனர். சீக்கியரான கியானி ஜைல் சிங் குடியரசுத்தலைவராக இருந்தார். ராணுவ தளபதியாக சீக்கியர் பதவி வகித்துள்ளார். ஆனால் இந்தப்பதவியை ஒரு முஸ்லிம் வகித்ததில்லை. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முஸ்லிகள் இருந்துள்ளனர்.

தாஜ் மஹால்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் வலதுசாரி இந்துகள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்களை இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறார்கள். பாஜக பேசும் சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தமும், இஸ்லாம் போல் சீக்கியம், பௌத்தம் மற்றும் சமணத்தை தனித்தனி மதங்களாகப் பார்க்கவில்லை.

சாவர்க்கர் புண்ணியபூமி மற்றும் பித்ரு பூமி பற்றி குறிப்பிடுகிறார். அதாவது இந்தியாவில் தோன்றிய மதத்தை நம்புபவர்களின் பித்ரு பூமியும், புண்ணிய பூமியும் இந்தியாதான். இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியே உருவானது. ஆகவே அதை நம்புபவர்களின் பித்ரு பூமி இந்தியா, ஆனால் புண்ணிய பூமி வெளிநாடு என்று சாவர்க்கர் வாதிட்டார். அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் அன்பு புன்னிய பூமிக்கும் பித்ரு பூமிக்கும் இடையில் பிரிக்கப்படும் என்று சாவர்க்கர் கூறினார். இந்த தர்க்கத்தின் அடிப்படையில் இந்துத்துவ அரசியல், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்களை, முஸ்லிம்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.

பாஜக ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது?

ரிஷி சூனக் பிரதமரானதில் பாஜக மகிழ்ச்சியடைவது எவ்வளவு நியாயமானது? ​​"இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். ஆனால் முக்கியப் பதவிகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி கிறிஸ்துவ மதத்துக்கு மாறியவர்கள். ஆனால் இந்த விஷயத்தில் ரிஷி சூனக் வித்தியாசமானவர். அவர் இந்து என்பதை மறைக்கவில்லை ஆனால் அதை வெளியே சொல்கிறார். அவர் பொது இடங்களில் இந்து சடங்குகளையும் செய்கிறார். அதனால் மகிழ்ச்சியாக இருப்பதில் எந்தப்பிரச்சனையும் இல்லை," என்று இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக ஆதரவு பத்திரிகையாளர் பிரதீப் சிங் கூறுகிறார்.

ரிஷி சூனக்

பட மூலாதாரம், Getty Images

சோனியா காந்தியை எதிர்ப்பதும், ரிஷி சூனக்கை உற்சாகப்படுத்துவதும் பாஜகவின் முரண்பாட்டை காட்டுகிறதா?

​​"ரிஷி சூனக் பிரிட்டனில் பிறந்தவர். அவர் பிறந்தது முதல் அந்த நாட்டின் குடிமகன். சோனியா காந்தி திருமணத்திற்குப் பிறகு இங்கு வந்தார். மேலும் அவர் இந்தியாவின் குடியுரிமையை மிகவும் தாமதமாகவே பெற்றார். சோனியா காந்தி நினைத்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார். பாஜகவால்தான் அது நடக்கவில்லை என்று கூறுவது சரியல்ல. மேலும் ரிஷி சூனக்கை அங்குள்ள மக்கள் பிரதமராக்கவில்லை, மாறாக கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.க்கள் தான் பிரதமராக்கியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தேர்வு செய்வார்களா இல்லையா என்பது இன்னும் சோதிக்கப்படவில்லை. ஆகவே இவரை சோனியா காந்தியுடன் ஒப்பிடுவது சரியல்ல,"என்று பிரதீப் சிங் குறிப்பிட்டார்.

​​" இதில் பாஜக மகிழ்ச்சியடைய ஒன்றுமே இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத பிரிட்டனின் பிரதமராக ஒரு இந்து ஆகியிருப்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுலேலாவை உள்துறை அமைச்சராக்குவதன் மூலம் ரிஷி சூனக் ஒரு செய்தியை வழங்கியுள்ளார். இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், இந்தியர்களின் குடியேற்றத்தை அதிகரிக்கும் என்று சுலேலா கூறியிருந்தார். அவரது கருத்துக்கு இந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சியிடம் இருந்து அது கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அலகாபாத் பல்கலைகழகத்தின் வரலாற்று துறை பேராசிரியர் ஹேரம்ப் சதுர்வேதி கூறினார்.

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் அரசர் சார்லஸை விட பிரதமர் ரிஷி சூனக் பணக்காரரா ?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: