இந்து ஆதரவு குழுக்கள் சில ட்விட்டரில் ஹலால் உணவுகளைப் புறக்கணிக்க சொல்லும் காரணங்கள் உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய முறைப்படி தயாரிக்கப்படும் ஹலால் உணவுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் பரவி வருகின்றன.
செவ்வாய்க்கிழமையன்று ஓர் இந்து சார்பு அமைப்பான இந்து ஜனஜாக்ருதி சமிதியுடன் தொடர்புடைய நபர் ஒருவர் மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, டோமினோஸ், பீஸ்ஸா ஹட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுக்கும் காணொளி ஒன்று பரவத் தொடங்கியது.
"அவர்கள் இந்துக்களை ஹலால் இறைச்சியைச் சாப்பிடுமாறு வற்புறுத்துகிறார்கள்," என்பதே காணொளியில் பேசியவர் குறிப்பிடும் காரணங்கள்.
இந்த இணைய பதிவுகள் "#Halal_Free_Diwali", "BoycottHalalProducts" போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் ஹலால் பொருட்களைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பும் உள்ளடக்கத்துடன் பகிரப்பட்டுள்ளன.
டிராக் மை ஹேஷ்டேக் இணைய கண்காணிப்பு கருவியின்படி, இந்த ட்வீட்களில் பெரும்பாலானவை இந்தி அல்லது ஆங்கிலத்தில் உள்ளன. சில பதிவுகள், மராத்தி மற்றும் கன்னட மொழியில் காணப்படுகின்றன.

கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள உணவு விற்பனை நிலையங்களுக்கு வெளியே இந்து ஆதரவு அமைப்புகள் ஹலால் இறைச்சியை வழங்குவதை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடத்தினர். ஹலால் இறைச்சியைத் தடை செய்யக் கோரி கர்நாடக முதல்வருக்கும் அந்தக் குழு கடிதம் எழுதியுள்ளது.
பெங்களூரு நகரின் இறைச்சி வியாபாரிகள் பகுதியான ரஸ்ஸல் சந்தையின் பொதுச் செயலாளர் முகமது இட்ரீஸ் சௌத்ரி, ஹலால் இறைச்சியைத் தடை செய்தால் வியாபாரிகளுக்கு ஒரு நாளைக்கு 2-3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்.
"என்னுடைய சந்தையில் மட்டும், ஹலால் இறைச்சி தடை செய்யப்பட்டால் சுமார் 500 தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் இப்போதுதான் பெருந்தொற்றுப் பேரிடரின் இழப்பிலிருந்து மீண்டு வருகிறார்கள். ஹலால் சான்றிதழின் உண்மையான பொருள் நீக்கப்பட்டு தவறான தகவல்களைப் பரப்ப பயன்படுத்தப்படுகிறது," என்று சௌத்ரி பிபிசியிடம் கூறினார்.
பகிரப்படும் தகவல்: ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களில் மாட்டிறைச்சிஉள்ளது
ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் சில இந்துக்கள் உண்ண விரும்பாத மாட்டிறைச்சியின் தடயங்கள் உள்ளன என்ற ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

இஸ்லாமிய மதச் சட்டங்களின்படி மாட்டிறைச்சி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஹலால் சான்றிதழுடன் கூடிய உணவுப் பொருட்களில் மாட்டிறைச்சி இருக்கும் என்று அவசியமில்லை.
ஹலால் என்ற சொல் இறைச்சி பொருட்களுக்கு மட்டுமில்லை. சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட எந்த உணவுப் பொருளுக்கும் பொருந்தும். அழகுசார் பொருட்கள், மருந்துகள், பிற சுகாதாரம் தொடர்பான பொருட்கள் போன்றவற்றுக்கு ஹலால் சான்றளிக்கப்படுவதன் மூலம், இஸ்லாமியர்கள் தங்கள் மதச் சட்டப்படி உட்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ள மது, பன்றி இறைச்சி ஆகியவை இல்லாதவை என்று அர்த்தம்.
பகிரப்படும் தகவல்: ஹலால் சான்றிதழ் 'முஸ்லிம் அல்லாதவர்களை வணிகத்திலிருந்து வெளியேற்றுகிறது'
ஹலால் இறைச்சியைத் தவிர்க்க பல சமூக ஊடக கணக்குகள் தவறான காரணங்களைக் கூறும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றன.
ஹலால் சான்றிதழ், முஸ்லிம் அல்லாதவர்கள் வேலை, வாழ்வாதாரங்களை இழக்க வைக்கிறது. ஏனெனில் இது "முஸ்லிம்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது," என்பது அவற்றில் பகிரப்படும் ஒரு கூற்று.

சமீபத்தில் ஓர் இந்திய நிறுவனம் (ஹிமாலயா), முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதால் அது தனது தயாரிப்புகளுக்கு ஹலால் சான்றிதழை பெற்றதாக ஒரு தவறான பிரசாரத்திற்கு நடுவே சிக்கியது.
ஹலால் சான்றளிக்கும் நிறுவனமான ஜமியத் உலமா ஹலால் அறக்கட்டளையின் கூற்றுப்படி, முஸ்லிம்களுக்கு சொந்தமில்லாத பல நிறுவனங்கள் ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களைக் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன.
ஹிமாலயா ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா, அதானி வில்மர் லிமிடெட் ஆகியவை சமையல் எண்ணெய்கள், உணவுகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு ஹலால் சான்றிதழைப் பெறுகின்றன.
இந்த அமைப்பு இந்துக்களுக்குச் சொந்தமானது. இந்த ஒவ்வொரு நிறுவனத்திலும் எத்தனை இந்துக்கள், முஸ்லிம்கள் பணியாற்றுகிறார்கள் என்பது பற்றிய தரவு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், இந்தியாவின் தனியார் துறையில் முஸ்லிம்கள் குறைவாகவே உள்ளனர் என்று அறிக்கைகள் காட்டுகின்றன.
பகிரப்படும் தகவல்: 'ஹலால் சான்றிதழ் என்பது இந்திய பொருளாதாரத்தைக் கைப்பற்றுவதற்கான முஸ்லிம்களின் சதி'
ஹலால் சான்றிதழால் முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிகங்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் இந்திய பொருளாதாரத்தைக் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் இந்து ஆதரவு குழுக்களும் அவர்களைப் பின்பற்றுவர்களும் கூறி வருகின்றனர்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே ஹலால் சான்றிதழை பெறுகின்றன என்பது உண்மையில்லை.
உலகளவில் தங்கள் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் நாடுகளின் விதிகளுக்கு இணங்குகின்றன. தங்கள் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கட்டாயமாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இறக்குமதியை விரிவுபடுத்த ஹலால் சான்றிதழ் பெறப்படுகிறது.
ஹலால் பொருட்களுக்கான சந்தை உலகளவில் வளர்ந்து வருகிறது. டெக்னாவியோ எனப்படும் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் 2021-25 ஆண்டுகளில் ஹலால் அழகுசார் மற்றும் தனிநபர் பராமரிப்பு சந்தை கிட்டத்தட்ட 8% வளரும் என்று மதிப்பிட்டுள்ளது.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









