இந்திய 'உளவாளிகள்': பாகிஸ்தானில் வேவு பார்த்தவர் இன்று ரிக்ஷா தொழிலாளி

இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார்.
படக்குறிப்பு, இந்திய உளவாளி என்று தன்னை கூறிக்கொள்ளும் டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார்.
    • எழுதியவர், நியாஸ் ஃபரூக்கி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தான் ஓர் இந்திய உளவாளி என்று டேனியல் மசிஹ் கூறுகிறார். பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்ததற்காக கைது செய்யப்பட்டு, பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளானபோதிலும், இந்திய அரசால் அவரது சேவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை, கூடவே அவரது சேவைகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவும் இல்லை என்பது அவரது கூற்று.

தான் எட்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்று உளவுத் தகவல்களை சேகரித்ததாக, இந்தியாவின் எல்லைப் பகுதியில் வசிக்கும் டேனியல் மசிஹ் கூறுகிறார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசு பதிலளிக்கவில்லை.

எட்டாவது முறையாக இந்திய எல்லையைத் தாண்டி தான் பாகிஸ்தானை அடைந்தபோது, கைது செய்யப்பட்டதாக டேனியல் மசிஹ் கூறுகிறார். தான் ஒரு கடத்தல்காரர் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அவர் கூறினார், ஆனால் அந்த சாக்குபோக்கு வேலை செய்யவில்லை. உளவு பார்த்ததற்காக அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் நான்கு ஆண்டுகள் கழித்த பின், அவர் இறுதியாக விடுதலை செய்யப்பட்டபோது டேனியல் மசிஹ், மனம் முழுக்க பெருமையுடன் தாயகம் திரும்பினார். அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இந்திய உளவுத்துறை நிறுவனம் அவரை அங்கீகரிக்க மறுத்துவிட்டது என்று அவர் கூறுகிறார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

டேனியல் மசிஹ் இப்போது சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறார். அவரது மனைவி துப்புரவு பணி செய்கிறார். தான் சிறையில் இருந்தபோது ஓர் அநாமதேய முகவரியில் இருந்து மாதம் 500 ரூபாய் தனது தாய்க்கு அனுப்பப்பட்டு வந்தது என்றும் ஆனால் தான் விடுதலையானபிறகு அது திடீரென்று நிறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

பல வருடங்கள் கடந்துவிட்டபோதும், 'உளவு' வேலை செய்வதற்காக தான் சந்திக்க நேரிட்ட ஆபத்துகளுக்கு ஈடாக, அரசிடம் இருந்து இழப்பீடுக்காக அவர் காத்திருக்கிறார்.

டேனியல் தனது இளமைக்கால படத்தைக் காட்டுகிறார்
படக்குறிப்பு, டேனியல் தனது இளமைக்கால படத்தைக் காட்டுகிறார்

டேனியல் மட்டுமே அல்ல. தனது எல்லை கிராமம், 'உளவாளிகளின் கிராமம்' என்று பெயர் பெற்றுள்ளது என்றும், இங்கிருந்து பலர் இந்தியாவுக்காக உளவு பார்க்க பாகிஸ்தான் சென்றதாகவும், அதில் பல உளவாளிகளுக்கு பணம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் எல்லை மாவட்டங்களில் புலனாய்வு அமைப்புகளுக்காக மக்கள் வேலை செய்வது மற்றும் உளவு பார்ப்பது அசாதாரணமானதல்ல என்று இந்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற உளவாளிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் இப்போது இறந்துவிட்டனர், பலர் ஊடகங்களுடன் பேசுவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் மசிஹ் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படையாகக் கூறுகிறார். டேனியலின் கிராமம், பிற இந்திய கிராமங்களைப் போலவே உள்ளது. பழைய மற்றும் கட்டி முடிக்கப்படாத கட்டடங்கள், குறுகிய தெருக்கள் மற்றும் அதில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள். அங்கும் இங்கும் அமர்ந்திருக்கும் வேலையில்லாத இளைஞர்கள்.

தன்னுடைய கோரிக்கைகள் மிகவும் சாதாரணமானவை என்று அவர் கூறுகிறார். இழப்பீடு மற்றும் 'நாட்டிற்குச் செய்த சேவைகளுக்கு' அதிகாரப்பூர்வ அங்கீகாரம். சமீபத்தில் ஒரு நபருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.1970களில் ஓர் உளவு அமைப்பு மூலம் உளவு வேலைக்காக தான் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு உளவு பார்த்ததற்காக பிடிபட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

டேனியலின் உளவுப்பயணம்

தனது உளவுப் பயணம் 1992ஆம் ஆண்டு மாலையில் தொடங்கியது என்று டேனியல் கூறுகிறார். டேனியல் தனக்குத் தெரிந்த ஒருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த நபர், இந்திய உளவு அமைப்பில் பணியாற்ற பாகிஸ்தானுக்கு செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். டேனியல் சரி என்றார்.

அந்த நேரத்தில், அவரது நிதி நிலைமை மோசமாக இருந்தது. கூடவே பாகிஸ்தானுக்குச் செல்லும் ஒவ்வொரு பயணத்திற்கும் சில ஆயிரம் ரூபாய்கள் கிடைப்பதை ஒரு லாபகரமான ஒப்பந்தமாக டேனியல் கண்டார்.

புலனாய்வு முகமைக்காக பணியாற்றும் ' 'ஹேண்ட்லர்' ஒருவரிடம், அந்த நபர் தன்னை அறிமுகப்படுத்தினார் என்றும் அவர் தனக்கு மதுபானம் வழங்கியதாகவும் டேனியல் தெரிவித்தார். பின்னர் டேனியலுக்கு அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு 'மிஷனுக்காக' அவர் பணியமர்த்தப்பட்டார்.

அந்த 'ஹேண்ட்லர்' காரில் தன்னை எல்லைக்கு அருகே அழைத்துச் சென்றதாக டேனியல் குறிப்பிட்டார். "இதற்குப் பிறகு ராவி ஆற்றை அடைந்தபோது அவர் என்னை ஒரு படகில் உட்கார வைத்தார்," என்கிறார் அவர்.

உளவாளி என தன்னை டேனியல் கூறிக் கொள்கிறார்

'அங்குசெல்வதால் வாழ்க்கை வீணாகிறது'

பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணி முடிந்ததும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் எல்லையைத் தாண்டினார். "இரண்டாவது முறை நான் தனியாகப் போனேன். இதே போல நான் எட்டு முறை பாகிஸ்தான் சென்றேன்."

பாகிஸ்தானில் ஓர் அறிமுகமானவரின் வீட்டில் தான் வசித்ததாகவும், அவரும் இந்தியாவுக்காக பணிபுரிந்ததாகவும், டேனியலின் ' ஹேண்டலர்' கேட்டுக்கொள்ளும் பணியை முடிக்க அவர் உதவியதாகவும் டேனியல் கூறுகிறார்.

"எங்களிடம் எந்த வேலை சொல்லப்பட்டாலும் அதை முடித்துவிட்டு வருவோம். அதாவது ரயில்வே டைம் டேபிள், பாலத்தின் படம் அல்லது ராணுவ சின்னம் போன்றவற்றை எடுத்து வருவோம். அந்த காலகட்டத்தில் இணையம் அத்தனை பொதுவாக இல்லை என்பதையும் செய்திகளை அனுப்ப நவீன வழிகள் இருக்கவில்லை என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்."

பாகிஸ்தானில் வேலையை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பும்போது, ஹேண்ட்லர்களுக்கு தெரிவிக்க முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறியீடு இருந்தது. அதன் உதவியுடன் அவர் இரவில் எல்லையைத் தாண்டுவார்.

"ஹேண்ட்லர்களுக்கு தெரியப்படுத்த தூரத்தில் இருந்து சிகரெட்டைப் பற்ற வைப்பேன் அல்லது நான் குரல் கொடுப்பேன். அவர்கள் 'யார்' என்று கேட்பார்கள். நான் 'கலைஞர்' என்று சொல்வேன். அதுதான் எங்கள் ரகசியகுறியீடு."

ஒருமுறை பாகிஸ்தானில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரரை இந்தியாவுக்கு அழைத்து வருமாறு தன்னிடம் கூறப்பட்டதாக அவர் கூறுகிறார். "என்னால் ஓய்வு பெற்ற வீரரை அழைத்து வர முடியவில்லை. ஆனால் நான் ஒரு குடிமகனை அழைத்து வந்தேன். பின்னர் அவரை திரும்ப அங்கேயே கொண்டுவிட்டுவிட்டேன்."

இந்த வேலை ஆபத்துகள் நிறைந்தது என்று அவர் கூறுகிறார். ஒரு முறை எல்லையைக் கடக்கும்போது தான் ஏறக்குறைய பிடிபட்டதாக டேனியல் தெரிவிக்கிறார். கோதுமை வயல் வழியாக சென்று கொண்டிருந்தபோது பாகிஸ்தான் ரேஞ்சர்கள் நெருங்கி வருவதை அவர் கண்டார். விஷயம் கைமீறி போயிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் ரேஞ்சர்களின் ஒரு தவறு டேனியலுக்கு உதவியது.

இந்தியா-பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

ரேஞ்சர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக டேனியல் அவர்கள் வருவதை அறிந்தார். மேலும் அவர்கள் பார்ப்பதற்கு முன்பே ஒளிந்துகொண்டார். "அவர்கள் பாடிக்கொண்டே வந்ததால், தூரத்தில் அவர்கள் வருவதை நான் பார்த்துவிட்டேன். நான் வயலில் அமர்ந்துகொண்டேன். அவர்கள் என் பக்கத்தில் இருந்து என்னைக் கடந்து சென்றனர், அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை," என்று டேனியல் கூறினார்.

ஆனால் கடைசி முறை அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. எட்டாவது முறையாக எல்லையைக் கடக்க முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார். தான் ஒரு உளவாளி அல்ல, மது கடத்துபவர் என்று அவர் நாடகமாடினார். இருப்பினும், உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், ஆனால் தான் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உளவுவேலை

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் தகவல்களைப் பெறுவதற்காக எல்லை தாண்டி உளவாளிகளை அனுப்புவது புதிய விஷயம் அல்ல. தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் இந்த சார்பு நிலையை ஓரளவிற்கு குறைத்திருந்தாலும், உளவாளிகள் நேரடியாக பணியில் ஈடுபடுவது இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது.

மறுபுறம், பாரம்பரிய எதிரிகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒத்த கலாசாரம், மொழி மற்றும் பிற காரணிகள் இந்த உளவு செயல்முறைக்கு உதவியாக உள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உளவாளிகள் என்று கூறப்படும் டஜன் கணக்கானவர்களை விடுவிக்கக் கோரி, சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சன் லகன்பால், இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். "இரு நாடுகளும் ஒருவர் மற்றவர் நாட்டிற்கு உளவாளிகளை அனுப்புவது பொதுவான வழக்கம்தான்" என்கிறார் அவர்.

இரு நாடுகளும் ஒருவர் மற்றவர் நாட்டிற்கு உளவாளிகளை அனுப்புவது பொதுவான வழக்கம்தான் என்கிறார் வழக்கறிஞர் ரஞ்சன் லகன்பால்
படக்குறிப்பு, இரு நாடுகளும் ஒருவர் மற்றவர் நாட்டிற்கு உளவாளிகளை அனுப்புவது பொதுவான வழக்கம்தான் என்கிறார் வழக்கறிஞர் ரஞ்சன் லகன்பால்

"பாகிஸ்தானில் இருந்தும் உளவாளிகள் வருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் அங்கு செல்கிறார்கள். தங்கள் வேலையைச் செய்கிறார்கள். சிலர் பிடிபட்டு, 20 அல்லது 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்," என்கிறார் அவர்.

"இரு நாடுகளிலும் விஷயங்கள் இப்படித்தான் இருக்கின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

சரப்ஜீத் இறந்த பிறகு இழப்பீடு அளிக்கப்பட்டது

சரப்ஜீத் சிங் ஓர் இந்திய உளவாளி என்று கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் சிறையில் அவர் காலமானபிறகு அவரது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கியது.

"சரப்ஜீத் இறந்தபோது, நிறைய பணம் வழங்கப்பட்டது, பொருளாதார உதவி வழங்கப்பட்டது. 15 ஆயிரத்தைத் தவிர எங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை," என்று டேனியல் கூறினார்.

கார்கில் போரின் போது டேனியலின் அண்டை வீட்டாரான சுரேந்திர பால் பால் சிங்கின் தந்தை உளவாளியாகப் பணிபுரிந்தார்.

'என் தந்தை சத்பால் சிங் 14 ஆண்டுகள் உளவு அமைப்புகளுக்காக பணியாற்றினார்," என்கிறார் சுரேந்திர பால் சிங்
படக்குறிப்பு, 'என் தந்தை சத்பால் சிங் 14 ஆண்டுகள் உளவு அமைப்புகளுக்காக பணியாற்றினார்," என்கிறார் சுரேந்திர பால் சிங்

'என் தந்தை சத்பால் சிங் 14 ஆண்டுகள் உளவு அமைப்புகளுக்காகப் பணியாற்றியவர். 1999ம் ஆண்டு அவர் கடைசியாக பாகிஸ்தானுக்கு சென்றபோது கார்கில் போர் நடந்து கொண்டிருந்தது. போரின் போது அவர் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அவர் எல்லையில் பிடிபட்டார்," என்று அவர் தெரிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அவரது தந்தையின் உடல் வந்தது. எல்லை தாண்டி உடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, உடல் இந்திய மூவண்ணக்கொடியால் மூடப்பட்டிருந்தது. "அதில் ரத்தக் காயங்கள் இருந்தன. அந்த அடையாளங்கள் இன்றும் அந்தக் கொடியில் உள்ளன. அரசின் உதவி கிடைக்கும் வரை அதை இப்படியே வைத்திருப்பேன். அதுவே என் தந்தையின் கடைசி அடையாளம்," என்கிறார் சுரேந்திர பால் சிங்.

தன் தந்தை உயிருடன் இருந்தபோது, சீருடை அணிந்தவர்கள் வீட்டிற்கு பரிசுகளை கொண்டு வந்ததாக அவர் கூறுகிறார். "ஒருமுறை சகோதரியின் திருமணத்திற்கு அன்பளிப்பையும் கொண்டு வந்தார்கள். மூடிய அறையில் அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பா இறந்த பிறகு யாரும் வரவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

சுரேந்திர பால் மற்றும் அவரது தாயார், சத்பால் சிங்கின் உடலை பெற்றுக்கொண்ட பிறகு

பட மூலாதாரம், Surendra Pal Singh

படக்குறிப்பு, சுரேந்திர பால் மற்றும் அவரது தாயார், சத்பால் சிங்கின் உடலை பெற்றுக்கொண்ட பிறகு

சுரேந்திர பால் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் . அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. அரசிடம் இருந்து இழப்பீடு பெற அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அவர் எல்லா அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் சென்றார். ஆனால் அவரது தந்தையை ஓர் உளவாளி என்று யாரும் அங்கீகரிக்கவில்லை. டெல்லி, மும்பை அல்லது அமிர்தசரஸில் உள்ள அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

"அதன் பிறகு அம்மாவும், சகோதரிகள் இருவரும் நகரத்திற்குச் சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது," என்று சுரேந்திர பால் கூறுகிறார்.

எல்லை மாவட்டமான ஃபெரோஸ்பூரின் கௌரவ் பாஸ்கர், முன்னாள் உளவாளிகளுக்கு ஓர் உதவிக் குழுவை நடத்தி வந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர். 1970களில் பாகிஸ்தானில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிம்லா உடன்படிக்கை மற்றும் சக கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் முறையீட்டின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அப்படிப்பட்ட உளவாளிகளிடம் ஆதாரமாகக் காட்ட எந்தக் காகிதமும் இல்லை என்று கௌரவ் பாஸ்கர் கூறுகிறார். "யார் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டார்களோ அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டனர் அல்லது காலமாகிவிட்டனர்."

மற்ற உளவாளிகளின் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய அவர், "அவர்கள் வீடுகளை தங்கம் மற்றும் வெள்ளியால் நிரப்பும்படி நான் கேட்கவில்லை. மனிதாபிமானத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். உயிருடன் இருப்பவர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் ஏதாவது வேலை கிடைக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு இரண்டு வேளை உணவு கிடைக்கும்," என்று குறிப்பிட்டார்.

உளவாளிகளின் விரக்தியை டேனியலின் பேச்சு பிரதிபலிக்கிறது. "என் இளமைக் காலத்தில் நான் அங்கு கழித்த வாழ்க்கைக்கான இழப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. அங்கே செல்வதால் வாழ்க்கை வீணாகிறது. என்னுடைய வாழ்க்கை அதற்கு ஓர் உதாரணம்," என்று டேனியல் தெரிவித்தார்.

Banner
காணொளிக் குறிப்பு, திருட்டுப்பட்டத்திலிருந்து குடும்பத்தை மீட்ட 60 வயது பெண் விவசாயி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: