இந்தியாவில் ஓராண்டில் 14 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கொலை – அதிர்ச்சியளிக்கும் குளோபல் விட்னஸ் அறிக்கை

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

"ஒவ்வொரு வாரமும் உலகளவில் மூன்று பேராவது தங்களுடைய நிலத்தை, சுற்றுச்சூழலை, வெளிப்புற சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப் போராடியதற்காகக் கொலை செய்யப்படுகிறார்கள் என்று நான் சொல்லலாம்.

இது பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது, கடந்த ஓராண்டில் மட்டுமே 200 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் நான் சொல்லலாம்.

ஆனால், இந்த எண்கள் எல்லாம், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீங்கள் கேட்கும் வரை உண்மையாகாது. இப்படி கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தால், சமூகத்தால் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய சொந்த நிலத்திற்காக மட்டுமின்றி, பூமியின் ஆரோக்கியத்திற்காகப் போராடியவர்கள்."

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று வெளியான 2021ஆம் ஆண்டுக்கான குளோபல் விட்னஸ் எனும் பன்னாட்டு அரசு சாரா அமைப்பின் அறிக்கையின் முன்னுரையில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் வந்தனா சிவா இப்படி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம், Getty Images

உலகளவில், 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவதைப் பதிவு செய்து, குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அதன்வரிசையில், 2021ஆம் ஆண்டு உலகளவில் கொலை செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் குறித்த அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கைப்படி, உலகளவில் கடந்த ஓராண்டில் 200 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஓராண்டில் 14 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் 1,733 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 79 பேர் நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குச் செயல்பட்டதற்காக பலியாகியுள்ளனர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"அரசால் அரங்கேற்றப்பட்ட கொலை"

2021ஆம் ஆண்டு மே 17 அன்று சட்டீஸ்கரில் பழங்குடிகள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொவாசி வாகா, உர்சா பீமா, உய்கா பண்டு ஆகிய பழங்குடியின செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டனர். கர்நாடாகவில் ஜூலை 15ஆம் தேதி விஜயநகர மாவட்டத்தில் டி ஸ்ரீதர் என்ற ஆர்டிஐ ஆர்வலரும் ஜூலை 18ஆம் தேதி, வெங்கடேஷ் என்ற ஆர்டிஐ ஆர்வலரும் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காகக் குரல் எழுப்பிய பழங்குடியின செயற்பாட்டாளரான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, 2020 அக்டோபர் மாதம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் 8 மாதங்கள் வைக்கப்பட்டார். ஸ்டேன் சுவாமி 83 வயதில் கைது செய்யப்பட்டபோது பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிறைவாசத்தால் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

ஸ்டான் சுவாமி

பட மூலாதாரம், RAVI PRAKASH

படக்குறிப்பு, பாதிரியார் ஸ்டான் சுவாமி முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காகச் செயல்பட்டார்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு அமைப்பு அவரை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது. எட்டு மாதங்களுக்கு அவர் மும்பை சிறையில் இருந்தார். அவருடைய உடல்நிலை காரணமாக அவருக்குத் தேவையாக இருந்த அடிப்படை வசதிகளை மறுத்ததற்காக சிறை அதிகாரிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

அவருடைய கடைசி ஜாமீன் மனு விசாரணையின்போது நீதிபதிகளிடம், "இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும், விரைவில் இறந்தும்கூடப் போகலாம்," என்று ஸ்டேன் சுவாமி தெரிவித்திருந்தார்.

ஒன்பது மாதம் சிறைவாசத்தில் உடல்நிலை மிகவும் மோசமடைந்து 2021, ஜூலை மாதம் உயிரிழந்தார். அவருடைய மரணம் அரசால் அரங்கேற்றப்பட்ட கொலை என்கிறார் மனித உரிமை ஆர்வலரும் பழங்குடியின செயற்பாட்டாளருமான சேவியர் டையாஸ்.

"ஸ்டேன் சுவாமி, நவீன காலனியாக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிவாசி நிலங்களைக் கொள்ளையடிப்பது, காடழிப்பு ஆகியவற்றில் ஜார்கண்ட் மக்களின் எதிர்ப்புக்கான அடையாளமாகத் திகழ்ந்தார். அதனாலேயே இந்த நிறுவனமயப்பட்ட அமைப்பு அவரைக் கொலை செய்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு 83 வயது, மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மோசமான உடல்நிலையோடு இருந்த அவரை சிறையில் அடைத்தது, அவருடைய நிலைமையை மேலும் மோசமாக்கியது. அதோடு, அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியான பிறகும் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது தான் அவரைக் கொன்ற தோட்டா," என்கிறார் சேவியர் டையாஸ்.

ஸ்டான் சுவாமி

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்ட நடந்த போராட்டம்

குளோபல் விட்னஸ் அமைப்பு, கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 4 பேர் என்ற விகிதத்தில் 200 நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் உலகளவில் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.

மேலும், "வன்முறை, மிரட்டல், அவதூறு பிரசாரங்கள், செயல்பாடுகளைக் குற்றமாகச் சித்தரித்தல் ஆகியவற்றின் மூலம், அரசு, வணிக நிறுவனங்கள் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்களால் குறிவைக்கப்படும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான பரந்த அளவிலான அச்சுறுத்தல்களின் பின்னணியில் இந்தக் கொடிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இது உலகின் ஒவ்வொரு பகுதியிலும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் நடக்கிறது," என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

குறிவைக்கப்படும் பழங்குடிகளும் விவசாயிகளும்

2021ஆம் ஆண்டில், பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களின் விகிதம் அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக மக்கள்தொகையில் 5% மட்டுமே இருந்தாலும், பழங்குடியினரைக் குறி வைத்து நடந்த தாக்குதல்களின் அளவு, மொத்த தாக்குதல்களில் 39 சதவீதம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மெக்சிகோ, கொலம்பியா, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பெருமளவில் பழங்குடி செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டில் பலியான செயற்பாட்டாளர்களில் 10 பேரில் ஒருவர் பெண் என்றும் அவர்களில் மூன்றில் இருவர் பழங்குடி செயற்பாட்டாளராகள் என்றும் அறிக்கை கூறுகிறது. அதோடு, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாகச் செயல்படும் பெண் செயற்பாட்டாளர்களைக் கட்டுபடுத்தவும் அவர்களுடைய குரலை ஒடுக்கவும் பெண்ணின வெறுப்பு, பாரபட்சமான பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம், Global Witness

படக்குறிப்பு, இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டதாக குளோபல் விட்னஸ் அறிக்கை கூறுகிறது

அதோடு, 2021இல் கொல்லப்பட்டவர்களில் 50 பேர் சிறு-குறு விவிசாயிகள் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. "நிலம் சார்ந்த ஒப்பந்தங்கள் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதால், தொழில்முறை வேளாண்மைக்கான இடைவிடாத தனியார்மயமாக்கல் எப்படி சிறு-குறு விவசாயிகளை அதிகளவில் ஆபத்தில் தள்ளுகிறது என்பதை இந்தக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெரிய அளவிலான தோட்டங்கள், ஏற்றுமதி சார்ந்த வேளாண்மை உற்பத்தி ஆகியவற்றால் உலகின் பெரும்பாலான கிராமப்புற ஏழைகள் இன்னமும் நம்பியிருக்கும் சிறிய அளவிலான குடும்ப வேளாண்மை அச்சுறுத்தப்படுகிறது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நில சமத்துவமின்மை

நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் ஆகியவற்றை ஏற்படுத்துபவர்கள் மிகவும் பல வகையானவர்கள் மற்றும் சிக்கலானவர்கள். ஆனால், தாக்குதல்கள் அதிகமுள்ள நாடுகளுக்குச் சில பொதுவான தன்மைகள் உள்ளதாக குளோபல் விட்னஸ் அறிக்கை கூறுகிறது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அறிக்கையின்படி, நிலத்தின் கட்டுப்பாடு மற்றும் பயன்பாடு தொடர்பான மோதல்கள் தான், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் பிரதான பிரச்னையாக உள்ளது. செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள், கொலைகள் மற்றும் அடக்குமுறைகளில் பெரும்பாலானவை நிலத்திலிருந்து இயற்கை வளங்களைச் சுரண்டுவதோடு தொடர்புடையது. நில உடைமைகளில் உள்ள அதீத சமத்துவமின்மையால் எதிர்ப்பும் அந்த எதிர்ப்பால் ஏற்படும் மோதலும் அதிகரிக்கிறது. இது சமூக, பொருளாதார சமத்துவமின்மைக்கான முக்கிய இயக்கிகளில் ஒன்றாக உள்ளது.

மேலும், அதிகாரம் மற்றும் ஜனநாயக நெருக்கடிகள், காலநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடிகள் உட்பட பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு அரசியல் முடிவுகள், சந்தை சக்திகளுடைய கவலையின் விளைவாக ஏற்படும் நில சமத்துவமின்மை மையப் பிரச்னையாக இருப்பதாகக் கூறுகிறது குளோபல் விட்னஸ்.

குளோபல் விட்னஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர், "உலகெங்கிலும் வாழும் பழங்குடி மக்கள், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிர் இழப்புக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு மீது கவனம் செலுத்துவதைவிட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அடக்குமுறை அரசுகள் மற்றும் நிறுவனங்களால் தொடர்ச்சியான வன்முறைக்கு உள்ளாவது, தங்கள் செயல்பாடுகள் குற்றமயமாக்கப்படுவது, துன்புறுத்தலுக்கு ஆளாவது போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம், Global Witness

படக்குறிப்பு, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 79 சமூக சூழலியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் கூறுகிறது

உலகளவில் ஜனநாயகம் அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு, காலநிலை மற்றும் பல்லுயிர் நெருக்கடிகள் மோசமடைந்து வருவதால், இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் செயற்பாட்டாளர்களின் முக்கியப் பங்கை இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைப் பாதுகாப்பதற்கும் குறைப்பதற்கும் உலகளாவிய முயற்சிகளை உடனடியாக முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

"பாதுகாப்பு என்பதே இல்லை"

இந்தியாவில் சமூக, சூழலியல் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் தமிழகக் கடலோர மீனவர்களின் நில உரிமைக்காகச் செயல்பட்டு வரும் சரவணன்.

"ஒரு விதிமீறல் குறித்து எதிர்த்துக் குரல் கொடுப்பது, சட்டப்படி முன்னெடுத்துச் செல்வது போன்றவற்றை ஒருவர் செய்யும்போது, அது அரசு சார்ந்ததாக இருக்கையில் வேறு கதை. அதுவே, ஒரு தனியார் நிறுவனமோ அல்லது செல்வாக்கு மிக்க நபரோ சம்பந்தப்படிருந்தால், அவர்கள் மூலமாக மிரட்டல் வரும். ஆரம்பத்தில் பணம் கொடுத்து சரிகட்டப் பார்ப்பார்கள். நேர்மையானவராக இருந்தால் மிரட்டல், அதைத் தொடர்ந்து தாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்வார்கள்.

ஒருவேளை இவை எதற்குமே பின்வாங்காமல், தொடர்ந்து நேர்மையாகக் குரல் கொடுக்கும்போது, அவர்கள் கையில் எடுத்திருக்கும் பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து கொலையும்கூடச் செய்கிறார்கள். இத்தகைய தாக்குதல்கள் இயல்பாக நடந்து வருகின்றன. ஆனால், காவல்துறை தரப்பில் இதுபோன்ற மிரட்டல்களோ அச்சுறுத்தல்களோ வரும்போது அதுகுறித்து அளிக்கும் புகாரை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை," என்கிறார் சரவணன்.

இந்தியாவில் ஓராண்டில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் கொலை

பட மூலாதாரம், Global witness

அதுமட்டுமின்றி, அரசு அதிகாரிகளே சில நேரங்களில் புகார் கொடுத்தவரின் விவரங்களை யார் மீது புகார் கொடுக்கப்பட்டதோ அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள் என்றும் கூறுகிறார் சரவணன்.

கடந்த ஆண்டில் 2020ஆம் ஆண்டுக்கான குளோபல் விட்னஸ் அறிக்கை வெளியானபோது, அந்த அமைப்பின் மூத்த பிரசாரகராக இருந்த க்ரிஸ் மேடென், "நம் நிலத்தைப் பாதுகாக்கப் போராடுவோருக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில், செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். பெருநிறுவனங்கள், லாபத்தைவிட பூமிக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவை இரண்டும் நடக்காத வரை, காலநிலை நெருக்கடியோ படுகொலைகளோ குறையப்போவதில்லை.

நிலத்திற்காக, அதிலுள்ள வளங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடும் மக்கள் எவ்வளவு அழுத்தங்களையும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்த அறிக்கை ஓர் அடையாளமாக நிற்கிறது," என்று பிபிசியிடம் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு கூறியதைப் போலவே, இப்போது வெளியாகியுள்ள 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் கூட அத்தகைய அச்சுறுத்தல்களுக்கான மற்றுமோர் அடையாளமாகவே தோற்றமளிக்கிறது.

Banner
காணொளிக் குறிப்பு, அடிபட்டு இறந்த தாய் தேவாங்கு; குட்டி பிழைத்தது எப்படி? வீடியோ காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: