தமிழ்நாட்டில் நடக்கும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள்: அரசியலாக்க முயற்சிக்குமா பாஜக?

பட மூலாதாரம், @annamalai_k/twitter
- எழுதியவர், எம்.ஆர்.ஷோபனா
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் சமீப நாட்களாக சென்னை, கோவை, திண்டுக்கல் ஈரோடு, ராமநாதபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ். எஸ் ஆதரவாளர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்த நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தாக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சூழ்நிலை சரியாகும்வரை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அமித் ஷாவின் அலுவலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆகியவை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி. எஃப்.ஐ) அமைப்பினர் தொடர்பான இடங்களில் சோதனை செய்ததே சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணம் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த இரு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரம், கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்களைப் போல பாஜக, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தாங்களே பெட்ரோல் / மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தமிழ்நாட்டில் மத மோதல்களை உருவாக்க முயற்சி செய்யக்கூடும் என்ற சந்தேகத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், @annamalai_k/twitter
அரசியல் நாடகமா?
இந்த சம்பவங்களைப் பயன்படுத்தி பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு சென்னையில் உள்ள மூத்த பத்திரிகையாளர் டி. சுரேஷ் குமார் பதிலளித்தார். "முதலில் நான் பார்க்கும் விஷயம் என்னவென்றால், தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் காவல்துறையினர் கொஞ்சம் அலட்சியமாக இருக்கிறார்களா என்ற பார்வை எனக்கு இருக்கிறது. ஏனென்றால், ஞாயிறன்றுதான் டி.ஜி.பி இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கிறார்.
பொது அமைதியை கெடுக்கும் எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 'அமைதிப் பூங்கா' என்ற பெயர் எடுத்திருக்கும் ஒரு மாநிலத்தில், வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது. எந்த தரப்பு இதை செய்து இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு முன்பு, ஒரு சில கட்சியினர் அவர்களே அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நாடகமெல்லாம் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இது போன்ற நாடகங்கள் வெளிமாநிலத்தில்கூட நடந்ததிருக்கின்றன. ஆனால், கடந்த நான்கு நாட்களாக நடக்கும் சம்பவங்களை இந்தக் கோணத்தில் பார்ப்பதற்கான ஆதாரமில்லை.
இந்த சம்பவங்கள் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையது. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
ஒருவேளை இந்த வன்முறையை வளரவிட்டார்கள் எனில், பா.ஜ.க இந்த விவகாரத்தை அவர்களுக்கு சாதகமாக எவ்வளவு தூரம் மாற்ற முடியுமோ, அரசியல் ரீதியாக எவ்வளவு ஆதாயம் தேட முடியுமோ, அதை செய்வார்கள்.
இந்த விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை எனில், பாஜகவுக்கு இவர்களே அதற்கான பாதையை அமைத்து கொடுப்பது போல் ஆகிவிடும்," என்றார்.
'நடவடிக்கை எடுப்பதை விட இத்தகைய சம்பவங்களை தடுக்க வேண்டும்'
ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். "இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது எந்த முத்திரையும் குத்தாமல், சட்டரீதியாக கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், @annamalai_k/twitter
மேலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராமல், தடுப்பதும் காவல்துறையினரின் பொறுப்பு என்கிறார் அவர். "யாராலெல்லாம் குறிவைக்கப்படலாம் என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, சந்தேகத்துக்குரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். அதே சமயத்தில், மனித உரிமை மீறலும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்றார்.
முதல்வருக்கு இருக்கும் சவால்
அமித்ஷாவுக்கு அண்ணாமலை எழுதிய கடிதத்தில், பாஜக உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் குமார் கூறுகையில், "ஸ்டாலின் அவர்கள் எந்தவிதமான அரசியல் அழுத்ததிற்கும் ஆளாகாமல், இந்த விவகாரத்தை கையாள வேண்டும். ஏனென்றால் கடந்த நான்கு நாட்களாக நடந்த சம்பவங்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் சவாலாக அவர் முன் நிற்கிறது. இந்த விவகாரம் அவரது நிர்வாக திறனை சோதிக்கும் விஷயமாக உள்ளது," என்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/MKSTALIN
தமிழ்நாட்டில் பாஜகவின் இன்றைய அரசியல் சூழல் பற்றி சுரேஷ் குமார் கூறுகையில், "இன்று இருக்கும் பாஜக கட்சியும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாஜக-வும் வேறு. தமிழ்நாட்டில் இன்று பாஜக ஒரு மாற்று சக்தியாக தன்னை முன் நிறுத்திக்கொள்ள முயல்கிறது.
இயல்பாகவே, அவர்கள் பேசும்போது ஒரு சார்பான நிலைப்பாடுதான் தெரியும். இப்போது இதனை அரசியல்ரீதியாக கொண்டு செல்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறதுதானே? இதற்கெல்லாம் ஒரு சதவீதம் கூட இடமளிக்கக்கூடாது.
ஒருவேளை அரசியல் ரீதியாக அவர்கள் இந்த விவகாரத்தை கையாண்டால், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள் என மத ரீதியாக எடுத்துக்கொண்டு போகலாம். இன்றைக்கு இருக்ககூடிய அரசியல் சூழ்நிலையில், அது அவர்களுக்கு சாதகமாக கூட போகலாம்," என்கிறார்.
மத்திய அரசு தலையிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மாநில அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கிறது என்ற பட்சத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பெரிதாகத் தலையிட வாய்ப்பில்லை. ஆனால், இதற்கு மேல் இந்த விவகாரம் பூதாகரமாகாமல் பார்த்துகொள்வதுதான் மாநில அரசுக்கு உள்ள பொறுப்பு," என்றார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












