கோவை மண்ணெண்ணெய் குண்டு வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் இருவர் கைது - நடந்தவை என்ன?

பத்திரிகையாளர்களுடன் பேசிய கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் (வலது)
படக்குறிப்பு, பத்திரிகையாளர்களுடன் பேசிய கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் (வலது)
சிவப்புக் கோடு

இந்த செய்தியில்...

•கோவையில் 2 எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் கைது - ஆணையர் பாலகிருஷ்ணன்

•அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

•குண்டு வீசிய குற்றவாளிகள் கைது - டிஜிபி சைலேந்திர பாபு என்ன சொன்னார்?

•பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனைகள்.

சிவப்புக் கோடு

கோவையில் நடந்த மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "கோவை மாநகரில் நடைபெற்ற சம்பவங்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

கடந்த 23 ஆம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்ற வைக்கப்பட்டது.

அதே நாள் காலை 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களிலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தோம்.

இந்த ஒவ்வொரு வழக்கிலும் மூன்று மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து செய்யப்பட்டு வந்தது. இதில் இன்று மாலை 4.30 மணியளவில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ், குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Presentational grey line
Presentational grey line

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளான இருவரும் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். இன்று விசாரணைக்கு பின் இவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவர்," என்றார்.

6 வழக்குகளில் நிலை என்ன?

மேலும் இது குறித்துப் பேசிய பாலகிருஷ்ணன், "கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது.

மேலும் மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க பல்வேறு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பல்வேறு மதங்களைச் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பேசி உள்ளோம். அனைவரும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.

காணொளிக் குறிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: போலீஸ் நடவடிக்கையும், அண்ணாமலை கருத்தும்

கோவை மாநகரில் பதற்றம் ஏதுவுமில்லாமல் அமைதியாக உள்ளது. கூடிய விரைவில் வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, ஒப்பணக்கார வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஆகியவற்றிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது.

இந்த இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். அதேபோல மீதி வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொழுதுதான் இந்த சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையா என்பது தெரியவரும்.

பாஜக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். அது தொடர்பாக முடிவெடுத்து வருகிறோம்" என்றார்.

பாக்பத்

அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

annamalai bjp

பட மூலாதாரம், @annamalai_k twitter

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள், வாகனங்கள் எரிக்கப்படும் நிகழ்வுகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே தாக்குதல் செயல்களில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 24) கே. அண்ணாமலை அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சூழ்நிலை சரியாகும்வரை தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அமித் ஷாவின் அலுவலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி. எஃப்.ஐ) அமைப்பினர் தொடர்பான இடங்களில் சோதனை செய்ததே சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சோதனைகளுக்கு பிறகு பி. எஃப்.ஐ அமைப்பினர் 11 பேர் கைது செய்யப்பட்டது அந்த அமைப்பினர் மற்றும் உள்நோக்கத்துடன் செயல்படும் சில இஸ்லாமிய அமைப்புகளிடையே அமைதியின்மையை உண்டாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பாஜக உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பாக்பத்

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சொல்வது என்ன?

Sylendra babu ips

பட மூலாதாரம், Sylendra babu ips facebook

படக்குறிப்பு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு

சமீபத்திய தாக்குதல்களுக்கு பிறகு அந்தந்த காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கு நேற்று அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சி. சைலேந்திர பாபு, உள்துறைச் செயலாளர் பனீந்தர் ரெட்டி ஆகியோர் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து நேற்று மதியம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

இதனிடையே இந்த செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதுவரை 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 100 பேரிடம் விசாரணை தொடர்வதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து பெட்ரோல் குண்டு தாக்குதல்கள்

பட மூலாதாரம், Tn police

கோவை மாநகரில் ஆர்.ஏ. எஃப் (அதிவிரைவு அதிரடிப் படையினர்) இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படையினர் இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படையினர் இரண்டு பிரிவுகள் என அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பி. தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1410 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல் வீசிய 19 பேரும், தஞ்சாவூரில் பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய அரித்திரி, சலீம், சிறாஜிதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனைகள்

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை, இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் இணைந்து மிகப்பெரிய சோதனையை வியாழக்கிழமை நடத்தின.

கோவையில் இந்திய அரசின் அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய அணிவகுப்பு.
படக்குறிப்பு, கோவையில் இந்திய அரசின் அதிவிரைவு அதிரடிப் படையினர் நடத்திய அணிவகுப்பு.

தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு சில பிஎஃப்ஐ தலைவர்கள் உதவி செய்ததாகவும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கடும்போக்கு அமைப்பில் சேர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்த அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது தமிழ்நாட்டில் பதிவான இரண்டு வெவ்வேறு வழக்குககள் ஒன்றில் மூன்று பேரும் மற்றொன்றில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் பிறகு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது மற்றும் வாகனங்கள் எரிக்கப்படும் நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.

தமிழ்நாட்டில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வந்திருந்த வேளையில் இந்த சம்பவங்கள் நடந்தன.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளியன்று (செப்டெம்பர் 23) தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் மற்றும் மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

சிதம்பரம் அருகே ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள், வண்டிகள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல இடங்களில் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பரங்கிப்பேட்டை சாலையில் உள்ள சீனு என்கிற ராமதாஸ் என்பவர் வீட்டின் முன்பு நிறுத்திவைத்த ஜீப், அருகில் உள்ள இரண்டு மரங்கள் மீது நேற்று புதன்கிழமை, செப்டம்பர் 28ம் தேதி, நள்ளிரவில் மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.

சீனு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நிர்வாகியாக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜீப் முன்பக்கம் லேசாக சேதம் அடைந்தது. வேறு பாதிப்புகள் இல்லை. இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர்(பொறுப்பு) ஆரோக்கியராஜ் "இந்த சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறோம். மண்ணெண்ணெய் பாட்டிலை இரண்டு முறை வீசியுள்ளனர். அதில் ஜீப் மீதும், மரத்தின் மீதும் பட்டுள்ளது. அதில் ஒரு குண்டு வெடித்து வண்டியின் முன்பகுதியில் கொஞ்சம் எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என அறிய அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறோம்,"என்றார் அவர். "தமிழ்நாட்டில் நடக்கும் தொடர் மண்ணெண்ணெய் குண்டு சம்பவத்தின் தொடர்ச்சி இது என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம். அதே நேரம், கோயில் விவகாரம் தொடர்பாக கடந்த 15ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனை காரணமாக இது நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது," என்று ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு, ரஷ்யா: ஆண்கள் அவசரமாக நாட்டை விட்டு வெளியேற காரணம் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: