பாரத் ஜோடோ யாத்திரை: அரசியல் நடைபயணங்களை மேற்கொள்ள என்ன மாதிரியான உடல் வலு தேவை?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @INCIndia/Twitter

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக

கொளுத்தும் வெயிலில் ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டர் தூரம் வரை நடப்பது எப்படி இருக்கும்? இதை அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எப்படி செய்கிறார்கள் என்று நீங்கள் யோசித்தது உண்டா?

இந்த நடைபாதை தூரம் வயலில் வேலை செய்யும் விவசாயியின் உழைப்பையோ அல்லது வாழ்வாதாரத்திற்காக நடப்பதை போன்றதோ இல்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் எவ்வாறு இந்த பாத யாத்திரையை நடத்துகிறார்கள்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த சமயத்தில் ஒரு நாளைக்கு இத்தனை தூரம் நடக்க வேண்டும் என்றால் மக்கள் என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்? என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே இதுபோன்று நெடுந்தூரம் நடப்பதற்கு என்ன தேவை என நாங்கள் நிபுணர்களிடம் பேசினோம்.

'நிச்சயம் பரிசோதனை தேவை'

"40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஏரோபிக் பயிற்சி போன்ற பயிற்சியை செய்ய வேண்டுமென்றால் கூட லிபிட் ப்ரோஃபைல் எனப்படக் கூடிய கொழுப்பு பரிசோதனையோ அல்லது இதயத்தில் ஏதேனும் அழுத்தம் உள்ளதா என்பதை பரிசோதிக்க இசிஜி போன்ற பரிசோதனைகளையோ மேற்கொள்ள வேண்டும். அதிக உடல் எடை கொண்டவர்கள் இதய ஓட்டம் சீராக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். 25 கிலோ மீட்டர் நடப்பது என்பது நிச்சயம் இதயத்தை பாதிக்கும்" என்கிறார் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் சயின்ஸின் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவர் ப்ரலே மஜும்தார்.

"ஒருவர் நீண்ட தூரம் நடக்கும் போது உடலுக்கு அதிக ரத்தம் பாய்வதால் இதயம் அழுத்தத்தை உணர்கிறது. எனவே ஒருவரின் இதயம் அதை செய்யும் அளவிற்கு வலுவாக இல்லை என்றால் அப்போது பிரச்னை ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்கள் தடகள வீரர்கள் இல்லை" என்கிறார் அவர்.

கருத்தில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்

இதய நிபுணர் ஆனந்த் மார்தாண்ட பிள்ளை, "அடிப்படையில் மூன்று விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார். "முதலில் இதயம், நுரையீரல் அல்லது சிறுநீரகத்தில் ஒருவருக்கு பிரச்னை இருந்தால் எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்."

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"இரண்டாவது ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயத்தில் அடைப்பு இருப்பது அதுவரை அறியப்படாமல் இருந்தால் அது திடீரென தெரியவரும். மூன்றாவது ஒருவர் எத்தனை ஆரோக்கியமாக உள்ளார் என்பது" என்றார்.

"குறைந்தபட்சம் வழக்கமாக நடைப்பயிற்சி அல்லது யோகா செய்யாதவர்கள் ரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ட்ரெட் மில் டெஸ்ட் என்ற ஒன்றுடன் சர்க்கரை பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனைகள் நீங்கள் எந்த அளவிற்கு உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் நெடுந்தூர நடைப்பயணங்களை நீங்கள் மேற்கொள்ளலாமா என்றும் கூறிவிடும்" என்கிறார் மருத்துவர் ஆனந்த் மார்தாண்ட பிள்ளை.

எவ்வளவு நீர் அருந்த வேண்டும்? எப்படி அருந்த வேண்டும்?

"அதேபோன்று ஒருவர் பாத யாத்திரை செல்லும் அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளார் என்றால் தகுந்த இடைவெளியில் நீர் அருந்துவதும் அவசியம், அதுவும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். ஒரே அடியாக முழுங்க கூடாது. அது வாயு தொல்லைகளை ஏற்படுத்தலாம்" என்கிறார் மஜும்தார்.

பாத யாத்திரை மூலம் என்ன கிடைக்கிறது?

பாத யாத்திரை என்பது இந்தியாவில் காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற அவர், பாத யாத்திரையை கருவியாக பயன்படுத்தினார்.

உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை கண்டித்து முதன்முறையாக 1930ஆம் ஆண்டு அவர் பாத யாத்திரை மேற்கொண்டார்.

அதன்பிறகு 17 வருடங்கள் கழித்து 1983ஆம் ஆண்டு வினோபா பாவே தனது பூதான் இயக்கத்தை தொடங்கினார்.

பின் 1983ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சந்திர சேகர் தனது பாத யாத்திரைய தொடங்கினார்.

இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட அவர் உள்ளூர் விவசாயிகளிடம் கலந்துரையாடி பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தார்.

"அந்த சமயத்தில் இப்போது இருப்பது போன்ற ஷூக்களோ அல்லது பிரத்யேக ஆடைகளோ இல்லை. அந்த சமயத்தில் கரோனா என நிறுவனம் தயாரித்த ப்ரவுன் கேன்வாஸ் ஷூ ஒன்று மட்டுமே இருந்தது" என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். ஷங்கர்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், @INCIndia/Twitter

ஆனால் சந்திர சேகர் ஷூக்களை அணியவில்லை. "எனது காலுக்கு பொருத்தமான ஷூக்களை அவர்களால் கண்டறிய முடியவில்லை. எனக்கு ஷூ அணியும் பழக்கமும் இல்லை. எனக்கு செருப்புகள் வேண்டும் என்று எனது இளைய நண்பர்களிடம் தொடர்ந்து சொல்லுவேன். ஒரு ஜோடி காலணி அதிகபட்சமாக ஒன்றரை நாளில் பிய்ந்து விடும்" என அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் சந்திர சேகர்.

2003ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பாதயாத்திரை மேற்கொண்டார். அது தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கான ஒரு கருவியாக அமைந்தது. அதேபோல கர்நாடகாவில் பாஜக முதலில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா பெங்களூருவிலிருந்து பல்லாரிக்கு பாத யாத்திரை சென்றார். அது 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வர உதவியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தேர்தலில் நமக்கு நாமே நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஸ்டாலின். மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியும் தேர்தல் சமயத்தில் பாத யாத்திரை சென்றுள்ளார்.

பாத யாத்திரை செல்லும் அரசியல் தலைவர்கள் தங்கள் உடல் நலத்தில் எந்த அளவு கவனம் செலுத்துகின்றனர்?

பாரத் ஜூடோ யாத்திரைக்கு செல்லும் முன் ஏதேனும் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டாரா என கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ரமேஷ் சென்னிதலாவிடம் கேட்டோம். "மருத்துவரிடம் செல்ல தேவையில்லை. நான் தினமும் 45 மணி நேரம் நடைப்பயிற்சி செய்கிறேன். அதனுடன் யோகாவும் செய்கிறேன். யோகா மிகவும் உதவியாக இருக்கும். அதனால்தான் தற்போது எந்த அசெளகரியங்களும் இல்லாமல் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

ரமேஷ் சென்னிதலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரமேஷ் சென்னிதலா

64 வயதாகும் ரமேஷ் சென்னிதலா இதற்கு முன்பு 2021ஆம் ஆண்டும் பாத யாத்திரை சென்றுள்ளார். அப்போது அவர் சுடு தண்ணீரை அதிகமாக பருகியதாக தெரிவித்தார். மேலும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் அதை பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்திய இளைஞர் காங்கிரஸின் ஊடக பிரிவை சேர்ந்த ராகுல் ராவ், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தியுடன் இணைந்த 119 தன்னார்வலர்களில் ஒருவர். இவர்கள் 'வெறுப்பை விடுத்து இந்தியாவை இணைக்க வேண்டும்' என்ற கோஷங்களை எழுப்புகின்றனர்.

கடற்கரை மாநிலங்களில் வெப்பத்தை உணர்ந்ததால் அதிக நீரை தான் பருகியதாக ராகுல் ராவ் தெரிவித்தார். மேலும் தனக்கு தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளதால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்றார் ராவ்.

ராவும் பிற தன்னார்வலர்களை போல அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். இவர்கள் 12 மெத்தைகள் கொண்ட கண்டெய்னரில் தங்கியுள்ளனர். "அது டார்மிட்டரியை போல இருக்கும். அதைபோல 6.30 மணிக்கு காலை வழிபாடு முடிந்தவுடன் காலை உணவு சாப்பிட்டு கிளம்பிவிடுவோம். அதன்பின் 11.30 மணிக்கு பாத யாத்திரையை நிறுத்துவோம். மதிய உணவு சாப்பிட்டு சிறிது ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் 4 மணிக்கு பயணத்தை தொடங்குவோம். மாலை பாத யாத்திரை பொது கூட்டம் ஒன்றில் நிறைவடையும்" என்கிறார் ரமேஷ் ராவ்.

Banner

அவசியமான மருத்துவ பரிசோதனை

இந்த பாத யாத்திரையில் பாம்பே உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோல்சே படில், முன்னாள் மத்தியப் பிரதேச முதலமைச்சர் திக்விஜய் சிங், கேரள காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.எம். ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதில் சிங் மற்றும் ஹாசனுக்கு 75 வயதாகிறது.

இதுகுறித்து படில் பேசுகையில், "எனக்கு 80 வயது நிறைவடைந்துள்ளது. நான் எந்த மருத்துவ பரிசோதனையையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல நீண்ட நடைப்பயணமும் செய்தது இல்லை. எனது உடல்நிலயை நன்றாக பேணி வருகிறேன். அவ்வளவுதான். கன்னியாகுமரிக்கு சென்று யாத்திரையில் கலந்து கொண்டேன். நான் காங்கிரஸ் கட்சியிலும் இல்லை. ஆனால் வேற்றுமைக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.

மருத்துவ பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

மாறாக இந்த பாத யாத்திரையில் தன்னார்வலராக இணைய வேண்டும் என்று முடிவு செய்த கேரள காங்கிரஸின் மாநில செயலர் ஷீபா ராமசந்திரன் முழு மருத்துவ பரிசோதனை நடைமுறையை பின்பற்றி வருகிறார்.

"பாத யாத்திரையில் என்னை இணைத்து கொள்வதற்கு முன்பாக நான் முழு மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டேன். எனது சகோதரர் மருத்துவராக உள்ளார். பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் அளவிற்கு நான் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஏனென்றால் இது ஒரு வரலாற்று நிகழ்வு. பாரதத்தை இணைக்க வேண்டும் என்ற முக்கிய செய்தியை இந்த பாத யாத்திரை சொல்கிறது. ஒற்றுமையான இந்தியாவே எங்களது முழு இலக்கு. கட்சி அதற்கு பிறகுதான்" என்றார் ஷீபா.

ஆனால் இந்த யாத்திரையில் கலந்துகொண்டுள்ள பலரும் ஷீபாவை போன்று மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

Banner
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: