வாரணாசி ஞானவாபி மசூதி, காசி விஸ்வநாதர் ஆலயம் தொடர்பான சர்ச்சை என்ன? - விரிவான விளக்கம்

பட மூலாதாரம், SAMEERATMAJ MISHRA/BBC
- எழுதியவர், ஃபைசல் முகமது அலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
1986-ல் பாபர் மசூதி திறக்கப்பட்டதற்கும், ராமர் கோவில் இயக்கத்தின் எழுச்சிக்கும் இடையில், மதுரா மற்றும் காசியின் பெயர்களும் அடிக்கடி அடிபட ஆரம்பித்தன.
தற்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் காசி மற்றும் மதுரா வழக்குகள் இப்போது நீதிமன்றத்தில் உள்ளன.
ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தற்போது மசூதியில் தொழுகை நடந்து வருகிறது.
வாரணாசி வழக்கு என்ன?
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங் மற்றும் வேறு நான்கு பெண்களும் ஞானவாபி மசூதியின் வளாகத்தில் உள்ள சிருங்கார் கெளரி மற்றும் வேறு சில தெய்வங்களையும் வழிபட அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த தெய்வங்கள் தாவாவுக்கு உட்படாத பிளாட் எண் 9130 இல் இருப்பதாக வாரணாசியின் ஒரு கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆய்வு நடத்தி முழு பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பிறகு, 2022 ஏப்ரல் 8 ஆம் தேதி, ஆய்வை மேற்கொள்ளவும், வீடியோ எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை பல தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் மஸ்ஜித் ஜாமியா (மேலாண்மைக் குழு), உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. ஆயினும் அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.



பட மூலாதாரம், ARRANGED
ஆய்வின் போது மசூதியின் வசுகானாவில் (நீரூற்று) காணப்பட்ட ஒரு வடிவம் சிவலிங்கம் என்று தற்போது கூறப்படுகிறது. அதன் பிறகு மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது. மசூதியில் தொழுகையை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் வசுகானாவுக்கு இப்போதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சிருங்கார் கௌரியின் வழிபாடு வருடத்திற்கு ஒருமுறை நவராத்திரி சதுர்த்தி அன்று இப்போது வரை நடந்துவருகிறது. ஆனால் தினமும் வழிபாடு நடத்த தற்போது அனுமதி கேட்கப்படுகிறது.
வழிபாட்டு தலம் மசூதியின் மேற்குச் சுவரின் வெளிப்புறத்தில் அதாவது சர்ச்சைக்குரிய இடத்தில் இல்லாத நிலையில், மசூதிக்குள் நுழைந்து ஆய்வு நடத்துவது என்ன நியாயம் என்று முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஞானவாபி வழக்கின் விசாரணை வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் இந்த விஷயத்தில் முஸ்லிம் தரப்பின் மேல்முறையீட்டை செப்டம்பர் 12 ஆம் தேதி நிராகரித்தார்.
ஞானவாபி மசூதி வளாகத்தில் தெய்வங்களை வழிபட அனுமதி கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்துள்ள மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக பிபிசி செய்தியாளர் வினீத் கரே தெரிவிக்கிறார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. முஸ்லிம் தரப்பும் அன்றைய தினம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இது காசி விஸ்வநாதர்-ஞானவாபி மசூதி தொடர்பான முதல் நீதிமன்ற வழக்கு அல்ல.
"மசூதி கட்டப்பட்ட இடம் காசி விஸ்வநாதரின் நிலம். எனவே முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றப்பட்டு, அந்த நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது," என்று அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித்தின் வழக்கறிஞர் அபய் யாதவ் பிபிசி செய்தியாளர் அனந்த் ஜணாணேயிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் உள்ளது.



மசூதி பற்றிய முதல் தகராறு 1809 இல் ஏற்பட்டது என்றும் இது வகுப்புவாத கலவரமாக மாறியது என்றும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
1936 இல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தீர்ப்பு அதற்கு அடுத்த ஆண்டு வந்தது.
இந்தத்தீர்ப்பில் முதலில் கீழ் நீதிமன்றமும் பின்னர் உயர் நீதிமன்றமும் மசூதியை வக்ஃப் சொத்து என்று கூறின.
1996-ம் ஆண்டும் சோஹன் லால் ஆர்யா என்பவர் பனாரஸ் நீதிமன்றத்தில் ஆய்வு நடத்தக்கோரி மனு தாக்கல் செய்தபோதும் அது நடைபெறவில்லை.
இந்த முறை ஆய்வுக்கான கோரிக்கையை எழுப்பிய ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவர் சோஹன் லாலின் மனைவியான பனாரஸைச் சேர்ந்த லட்சுமி தேவி ஆவார்.

ஞானவாபி வழக்கு - இதுவரை நடந்தது என்ன?

• 12 செப்டம்பர் 2022 அன்று நடைபெற்ற விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் தெய்வங்களை வழிபட அனுமதி கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு
ஏற்றுக்கொண்டது. மேலும், முஸ்லிம் தரப்பின் மேல்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்தது.
• 1991: வழிபாட்டு தலச் சட்டம். பிவி நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசு 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டத்தை (சிறப்பு விதிகள்) நிறைவேற்றியது. பாஜக இதை எதிர்த்தது. ஆனால் அயோத்தியை விதிவிலக்காக வைத்ததை வரவேற்றது. அதே நேரம் காசி மற்றும் மதுராவையும் விதிவிலக்காகக் கருத வேண்டும் என்று கோரியது. ஆனால் சட்டத்தின்படி, அயோத்திக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
• 1991: ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தை எட்டியது. ஞானவாபி மசூதி தொடர்பாக 1991ஆம் ஆண்டு முதன்முறையாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாரணாசியில் உள்ள சாதுக்கள் மற்றும் துறவிகள் அங்கு வழிபாடு நடத்தக் கோரி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மசூதி நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகக் குழு, இது வழிபாட்டுத் தலச்சட்டத்தை மீறுவதாகக் கூறியது.
• 2019: அயோத்தி தீர்ப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு 2019 டிசம்பரில் ஞானவாபி மசூதியை ஆய்வு செய்யக்கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
• 2020: அடிப்படை மனுவை விசாரிக்குமாறு வாரணாசி சிவில் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது
• 2020: அலகாபாத் உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. பின்னர் இந்த விஷயத்தில் தீர்ப்பை ஒத்திவைத்தது.
• 2021: உயர்நீதிமன்றத்தின் தடை இருந்தபோதிலும், வாரணாசி சிவில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் வழக்கை மீண்டும் தொடங்கி மசூதியை ஆய்வு செய்ய அனுமதித்தது
• 2021: அலகாபாத் உயர் நீதிமன்றத்தை மஸ்ஜித் ஜாமியா அணுகியது. உயர்நீதிமன்றம் மீண்டும் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, அதை கண்டித்தது.
• 2021: ஆகஸ்டில் சிருங்கர் கௌரியை வழிபட அனுமதி கோரி ஐந்து இந்து பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
• 2022: ஏப்ரலில், ஞானவாபி மசூதியின் ஆய்வு மற்றும் வீடியோ பதிவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
• 2022: மஸ்ஜித் ஜாமியா இந்த உத்தரவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.
• 2022: மே மாதம், ஞானவாபி மசூதியின் வீடியோ பதிவு தொடர்பாக மஸ்ஜித் ஜாமியா உச்ச நீதிமன்றத்தை அணுகியது
• 2022: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன் மே 16 அன்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் பகுதியை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு தொழுகைக்கும் தடை விதிக்கப்பட்டது.
• 2022: மே 17 ஆம் தேதி, 'சிவலிங்கத்தின்' பாதுகாப்பிற்காக வுசுகானாவை (நீரூற்று) சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.அதே நேரம் மசூதியில் தொழுகையைத் தொடர அனுமதித்தது.
• 2022: மே 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி, இந்த வழக்கு மேலும் விசாரிக்கத் தகுதியானதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதிமன்றத்திடம் கூறியது.



வழிபாட்டு தலச்சட்டம்
1996-ம் ஆண்டு ஒரு கீழ் நீதிமன்ற உத்தரவு மற்றும் அதன்பின்னர் நிர்வாகம் அவசர அவசரமாக பாபர் மசூதியை திறந்துவிட்ட பிறகு ராமர் கோயில் கட்டும் இயக்கம் நாளுக்கு நாள் வேகமெடுத்தது.
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி தனது ரத யாத்திரையை சோம்நாத்தில் இருந்து துவக்கினார். இதன் காரணமாக வகுப்புவாத பதற்றம் உச்சத்தை அடைந்தது.
அதே நேரம் காங்கிரஸின் நரசிம்மராவ் அரசு 1991 செப்டம்பர் 18 ஆம் தேதி வழிபாட்டு தலங்கள் சட்டத்தை நிறைவேற்றியது. இது பாபர் மசூதியைத் தவிர அனைத்து சமய இடங்களுக்கும் பொருந்தும். வருங்காலத்தில் சர்ச்சைக்குரிய சமய தலங்களின் வடிவத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று இந்தச்சட்டம் கூறுகிறது. .
அப்போது இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

பட மூலாதாரம், ROBERT NICKELSBERG/GETTY IMAGES
எந்தவொரு சமயத்தலத்திலும் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இருந்த அதே நிலை பராமரிக்கப்படவேண்டும் என்றும் அவற்றில் - எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்றும் சட்டத்தில் ஒரு விதி உள்ளது.
இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் தள்ளுபடி செய்யப்படும் அதாவது அவை மேலும் விசாரிக்கப்படாது என்ற விதிமுறையும் சட்டத்தில் உள்ளது.
ஆனால் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய், வழிபாட்டுத் தலச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வாதத்தில் முக்கியமாக இரண்டு விஷயங்களை முன்வைத்துள்ளார்.
'சட்டம் ஒழுங்கு' என்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், மத்திய அரசு அதன் மீது சட்டம் இயற்ற முடியாது என்பது முதல் வாதம்.
'வழிபாட்டு தலங்கள்' தொடர்பான சட்டங்களை இயற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்று அஸ்வினி உபாத்யாய் இரண்டாவது வாதத்தை முன்வைத்தார்.
கைலாஷ் மானசரோவர் அல்லது நன்கானா சாஹிப் போல புனித தலங்கள் சர்வதேச அளவில் இருக்கும்போது, அந்த அதிகார வரம்பு மத்திய அரசின் கீழ் வருகிறது. மாநிலங்களுக்குச் சொந்தமான மத வழிபாட்டுத் தலங்கள் என்று வரும்போது, அது மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
இந்த வழக்கை அக்டோபர் 11ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
ஞானவாபி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்த மஸ்ஜித் தரப்பு வழக்கறிஞர், வழிபாட்டுத் தலச் சட்டம் அமலில் இருப்பதால் மனுதாரர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவே கூடாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் பெண்கள் தாக்கல் செய்த மனுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்காக காத்திருக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மசூதி எப்படி உருவானது? தற்போதைய கோவில் எப்போது கட்டப்பட்டது?
முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் உத்தரவின் பேரில் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் வரலாற்றாசிரியர்களிடம் பேசும்போது முழு விஷயமும் அதை விட மிகவும் சிக்கலானதாகத் தெரிகிறது.
தற்போதைய காசி விஸ்வநாதர் கோவில் மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது.
காசி விஸ்வநாதர் கோவில் இடிக்கப்படுவதற்கு முன் அது ஒரு பிரம்மாண்டமான சமய தலமாக இருந்ததாக சில இந்து தரப்புகள் கூறுகின்றன.
இந்த கோயில் விக்ரமாதித்ய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
வாரணாசியில் கொள்ளை, படுகொலை மற்றும் சேதம் ஆகியவற்றின் செயல்முறை மஹ்மூத் கஸ்னியின் படையெடுப்பு காலத்திலிருந்து தொடங்கியது என்று நாவலாசிரியரும் கவிஞருமான மகரந்த் பரஞ்ச்பே கூறுகிறார். .
"கி.பி 1033 இல், நகரத்தின் ஜவுளி, வாசனை திரவியங்கள் மற்றும் நகைக்கடை சந்தை காலை முதல் மதியம் தொழுகை வரை கொள்ளையடிக்கப்பட்டது. இருந்தபோதிலும், மஹ்மூத் கஸ்னியின் ஆளுநரான அஹ்மத் நியாலிதிகின், நேரம் மிகக் குறுகியதாக இருந்ததால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை என்று வருந்தினார்," என்று வரலாற்றாசிரியர் அபு அல்-ஃபஸ்ல் அல்-பைஹாகியை மேற்கோள்காட்டி மகரந்த் பரஞ்ச்பே எழுதியுள்ளார்.
ஆனால் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தான் எழுதிய கட்டுரையில், கோயில் மீதான தாக்குதல் குறித்து 'சாத்தியகூறு' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
ஞானவாபியைப் பொருத்தவரை அந்த புனித தலமானது மீண்டும் மீண்டும் இடிக்கப்பட்டு பின்னர் கட்டப்பட்ட சாத்தியகூறு உள்ளது என்று மக்ரந்த் பரஞ்ச்பே கூறுகிறார்.

பட மூலாதாரம், ARRANGED
1585 ஆம் ஆண்டில் ராஜா தோடர்மல் இந்த கோவிலை கட்டினார் என்று வரலாற்றாசிரியர் ராஜீவ் திவேதி பிபிசி உடனான உரையாடலில், கூறியிருந்தார்.
அக்பரின் உத்தரவின்பேரில் இந்தப்பணி நடந்ததா அல்லது அரசவையின் நவரத்தினங்களில் ஒருவரான தோடர்மல் இந்த வேலையை தானாகச்செய்தாரா என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
தோடர்மல்லால் கோயில் கட்டப்பட்டு 1669 இல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், இடிக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு காசியில் விஸ்வநாதர் ஆலயம் எதுவும் இருக்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளரும் ஞானவாபி மசூதியைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தவருமான யோகேந்திர ஷர்மா பிபிசியிடம் கூறினார்.
பின்னர் 1735 ஆம் ஆண்டில் இந்தூரின் மகாராணி அஹில்யாபாய் கோயிலைக் கட்டினார். அது இன்று காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
பழைய கோவிலின் பெருமை தொடர்பாக வரலாற்றாசிரியர்கள் உடன்படவில்லை. இருப்பினும் அதன் புராண முக்கியத்துவத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
விஸ்வநாதர் கோவிலின் புராண முக்கியத்துவம் நீண்ட நெடுங்காலமாக இருப்பதாக உள்ளூர் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் காசி கோவில் மிகப் பெரியதாக இருந்திருக்கலாம் என்பது ஆதாரபூர்வமாக எங்கும் பதிவு செய்யப்படவில்லை.
"புனிதத்தலம், அதன் வடிவம் மற்றும் செயல்படுத்தலில் அற்புதமாக இருந்தது. மேலும் அதன் மையத்தில் எட்டு தொகுதிகளால் சூழப்பட்ட ஒரு புனித இடம் இருந்தது," என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சமய ஒப்பீட்டுத்துறை பேராசிரியரான டயானா எல். ஈக் குறிப்பிடுகிறார்.
2019 மார்ச் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி, 800 கோடி ரூபாய் செலவில் காசி விஸ்வநாதர் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதன் கீழ் கோவிலுக்கு செல்லும் வழி அழகுபடுத்தப்பட்டது. கூடவே கங்கை ஆற்றிலிருந்து பல பாதைகள் மூலம் இப்போது கோவிலை நேரடியாக அடையலாம்.
இதன் பின்னர் பல இடங்களில் முஸ்லிம் தரப்பு மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவாபி மசூதி ஆகிய இரண்டும் அக்பரின் காலத்தில் கட்டப்பட்டதாக மஸ்ஜித் இந்தஜாமியா கூறுகிறது.
ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது கோயில் இடிக்கப்பட்டது என்பதையும் அது ஒப்புக்கொள்கிறது.
"தற்போதைய ஞானவாபி மசூதி, பாதி சிதைந்த பகுதியில் கட்டப்பட்டது" என்கிறார் பேராசிரியர் ஈக்.
"மசூதியை பின்புறத்தில் இருந்து பார்க்கும்போது இரண்டு வகையான கலை மரபுகளை தெளிவாக வேறுபடுத்தி அறியலாம். கோவிலின் அலங்கரிக்கப்பட்ட கல்சுவர் சேதப்படுத்தப்பட்ட பிறகும் அழகாக காட்சி அளிக்கிறது. அதன் மீது பூசப்பட்ட சாதாரண குவிமாடம் உள்ளது," என்றுபேராசிரியர் ஈக் மேலும் எழுதுகிறார்.
Aurangzeb: The Man and the Myth என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆண்ட்டே டுஸ்கே," மசூதியில் கோயில் சுவரைப் பயன்படுத்துவது முகலாய ஆதிக்கத்தை சவால் செய்வதால் ஏற்படும் விளைவுகளை தெரிவிக்கும் அரசியல் செய்தியாகவும் இருக்கலாம்," என்கிறார்.
இருப்பினும் சமகால வரலாறு, விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டதை குறிப்பிடவில்லை என்று அலகாபாத் பல்கலைக்கழகத்தின் இடைக்கால வரலாற்றுத் துறையின் பேராசிரியர் ஹேரம்ப் சதுர்வேதி கூறுகிறார். 'ஒளரங்கசீப்பின் சமகால வரலாற்றாசிரியர்களான சாகி முஸ்தைத் கான் மற்றும் சுஜான் ராய் பண்டாரி ஆகியோரின் விளக்கங்கள் அந்த காலகட்டத்தின் நம்பகத்தன்மையுடன் கூடிய ஆவணங்களாக கருதப்படுகின்றன. நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள இவற்றில் இந்த சம்பவம் குறிப்பிடப்படவில்லை.
'ஒளரங்கசீப்பிற்குப் பிறகு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் வர்ணனைகளில் இருந்து இந்த விஷயம் முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இதை முதலில் குறிப்பிட்டது யார் என்று சொல்வது கடினம்' என்று பிபிசி உடனான உரையாடலில் அவர் கூறினார்.
"ஞானவாபி ஒரு அறிவுப் பள்ளியாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனுடன் ஒரு கோவிலும் இருந்திருக்கலாம். அந்த கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என்றால் அதன் பெயர் ஞானவாபி என்று ஆகியிருக்கக்கூடும். மசூதி கட்டப்பட்டதற்கான ஆவண ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், ஒரு மசூதிக்கு ஞானவாபி என்று பெயர் வந்ததற்கு வேறு காரணம் இருக்கமுடியாது என்றும் சிலர் கூறுகிறார்கள்,"என்று பேராசிரியர் ஹேரம்ப் சதுர்வேதி கூறுகிறார்.
பாட்னா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஓம் பிரகாஷ் பிரசாத் எழுதிய ' ஒளரங்கசீப்-ஒரு புதிய கோணத்தில்' என்ற புத்தகத்திலும், பட்டாபி சீதாராமையாவின் 'ஃபெதர்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்' என்ற நூலிலும், பிரபல வரலாற்றாசிரியர் பி.என்.பாண்டேயும் 'மோதலின் போது கோவில் அழிக்கப்பட்ட சம்பவத்தை' குறிப்பிட்டுள்ளனர்.

கட்ச் ராணி கடத்தப்பட்டதையும், ஔரங்கசீப்பின் வீரர்களுக்கும் சில மகான்களுக்கும் இடையே நடந்த சண்டையின் சூழ்நிலையையும், ஆலயம் சேதமடைந்து சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதையும் புத்தகம் குறிப்பிடுகிறது.
கச்வாஹா ஆட்சியாளர் ஜெய் சிங்கின் மேற்பார்வையில் கோயில் இடிப்பு நடந்ததாக குறிப்பிடப்படுகிறது.
கருவூல ஆவணங்களில் ஞானவாபி மசூதியின் முதல் குறிப்பு 1883-84 இல் உள்ளது. இது ஜம்மா மஸ்ஜித் ஞானவாபி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் ஜோன்பூரின் ஷர்கி சுல்தான்களால் மசூதி கட்டப்பட்டதாகவும், அதற்காக அங்கு இருந்த விஸ்வநாதர் கோவில் இடிக்கப்பட்டது என்றும் ஒரு கூற்று நிலவுகிறது. ஆனால் இந்த விஷயம் ஆதாரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
எண்பதுகளில் வெளியான 'பனாரஸ், சிட்டி ஆஃப் லைட்' என்ற புத்தகத்தில் டயானா ஈக், "டெல்லி சுல்தானகத்தின் புகழ்பெற்ற இளவரசி ரசியாதுதீன் (ரஸியா) தனது குறுகிய ஆட்சிக் காலத்தில் மசூதியைக் கட்டினார்,"என்று குறிப்பிட்டுள்ளார்.
ஞானவாபி மசூதி-கோவில் சர்ச்சையின் மத்தியில் பல வாதங்களும் எதிர்வாதங்களும் உள்ளன. அவை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அப்படிச்செய்வது எளிதானதும் அல்ல.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













