கர்நாடகாவின் ஷாஹி மசூதி ஒரு காலத்தில் அனுமன் கோயிலாக இருந்ததா?

பட மூலாதாரம், Imran Qureshi
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூருவில் இருந்து பிபிசி ஹிந்திக்காக
கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் கட்டிய ஜாமியா மசூதியை முற்றுகையிட்டு 'கோயிலை விடுவிக்கும்' முதல் பெரிய முயற்சி தோல்வியடைந்தது. திப்பு சுல்தானால் கட்டப்பட்ட இந்த மசூதி ஒரு கோயிலின் எச்சத்தின் மீது நிற்கிறது என்று இந்துத்துவ அமைப்புகள் நம்புகின்றன.
இந்துத்துவ அமைப்புகளின் அழைப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. போராட்டக்காரர்களை மசூதி அருகே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த மசூதியின் கதை வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி அல்லது மங்களூருவில் உள்ள மலாலி மஸ்ஜித் (கோயில் போன்ற அமைப்பு காணப்படுகிறது) ஆகியவற்றிலிருந்து ஜாமியா மசூதி மிகவும் வித்தியாசமானது என்று இது தொடர்பான வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
ஜூன் 4 அன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோதி விசார் மஞ்ச் (NMVM), விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளின் சுமார் நூறு தொண்டர்கள், மசூதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் போது ராணுவத்தைச் சேர்ந்த சுமார் ஐநூறு பேர் மசூதியின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட மூலாதாரம், Imran Qureshi
காவி சால்வை அணிந்து, 'ஜெய் ஹனுமான், ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாண்டியா மாவட்ட உதவி ஆணையர் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். பின்னர், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அதிகாரியும் அவர்களிடம் பேசினார்.
போராட்டக்காரர்களிடம் பேசிய ASI அதிகாரி, "உங்கள் மனு, (கோயில் இருப்பதை விசாரிக்க) டெல்லி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நான் கன்னடக்காரன். நானே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்" என்றார்.
நரேந்திர மோதி விசார் மஞ்ச் (என்எம்விஎம்) ஒருங்கிணைப்பாளர் சி.டி.மஞ்சுநாத் பிபிசி ஹிந்தியிடம், "இந்த மசூதி ஒரு கோயில் என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. தூண்கள், கலசம், விநாயகர், கல்யாணி, சக்ரா (விஷ்ணு கோயில்களில் உள்ளது போல) இவை அனைத்தும் மசூதியில் உள்ளது. எனவே, இது ஒரு மசூதி அல்ல. அது ஒரு கோயில். ஞானவாபியைப் போல இது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்றார்.

பட மூலாதாரம், Imran Qureshi
ஆய்வு முடிந்து, கோயில் என்பது நிரூபணமானால் இதை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இங்கு முண்டுலபாகிலு அஞ்சனசுவாமி தேவஸ்தானம் இருப்பதாக நம்புகிறோம்,'' என்றார் மஞ்சுநாத்.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி போல முன்பு இந்து கோயில் இருந்தது என்று கூறப்படும் கர்நாடகாவின் இரண்டாவது மசூதி இதுவாகும். மங்களூருவின் மலாலி மசூதியைப் பாதுகாக்கும் போது அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு கோயில் போன்ற அமைப்பு வெளிவந்தது. இதைத்தொடர்ந்து இங்கு கோயில் இருப்பதான பேச்சு எழுந்தது.
உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்போது இந்த வழக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஞானவாபி, மலாலி மசூதி போன்று இந்து அமைப்புகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என்று மஞ்சுநாத் கூறுகிறார். வழிபாட்டுத் தலச் சட்டம் 1991ஐ ரத்து செய்யக் கோருவோம் என்றார் அவர்.

பட மூலாதாரம், Imran Qureshi
இந்த சட்டம் பாபர் மசூதி சர்ச்சையின் போது பி.வி.நரசிம்மராவ் அரசால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் 1947க்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், எல்லா மசூதிகளிலும் சிவலிங்கத்தை தேடவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தார். இது குறித்துப்பேசிய மஞ்சுநாத், "அவர் நேரடியான மற்றும் தெளிவான செய்தியை கூறவில்லை. நாட்டின் நலனுக்காக செயல்படும் சக்தி வாய்ந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ஆனால், சங்க தலைவரின் அறிக்கையில் தெளிவு இல்லை," என்று குறிப்பிட்டார்..
ஆதாரம் என்ன?
"தொல்பொருள் ஆய்வு அமைப்பின் 1935 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை, ஒரு காலத்தில் இங்கு ஒரு கோயில் இருந்ததாக தெளிவாகக் கூறுகிறது. தாரிக்-இ-திப்பு மற்றும் மலபார் கையேடுகளில் இன்று மசூதி இருக்கும் இடத்தில் அஞ்சனசுவாமி கோயில் இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது," என்று மஞ்சுநாத் கூறுகிறார்.

பட மூலாதாரம், Imran Qureshi
1781 முதல் 1786 வரை திப்பு சுல்தானின் அரசவையில் பணியாற்றிய இரானிய வம்சாவளி எழுத்தாளர் மிர் ஹுசைன் அலி கிர்மானி எழுதிய "ஹிஸ்டரி ஆஃப் திப்பு பீயிங் எ கன்டினுவேஷன் ஆஃப் தி நிஷான்-இ-ஹைத்ரி" என்ற புத்தகத்தில் மசூதியின் கட்டுமானம் பற்றிய விரிவான விளக்கம் உள்ளது. முதலில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை கர்னல் டபிள்யூ. மைல்ஸ் மொழிபெயர்த்தார். இதை ASI வெளியிட்டுள்ளது.
"இந்த மசூதி கட்டப்பட்டதற்கான சுருக்கமான காரணம் பின்வருமாறு. பிராமணரான குண்டா ராவ், தனது எஜமானருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன், பிரச்னைகளை உருவாக்கத் தொடங்கினார். மறைந்த நவாப் (ஹைதர் அலி) தனியாக பெங்களூருக்கு தப்பிச் செல்லவேண்டி வந்தது. நவாபின் மனைவிகள் மற்றும் திப்பு சுல்தானை (அப்போது அவருக்கு ஆறு-ஏழு வயது) இந்த வில்லன் சிறைபிடித்தான். அவர்கள் முன்பு கஞ்சம் கதவு என்று அழைக்கப்பட்ட கோட்டையின் தேவராய பீட வாயிலுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். அந்த நாட்களில், இந்த வீட்டுக்கு முன்பு ஒரு இந்து கோயில் இருந்தது, அதைச் சுற்றி ஒரு பெரிய மைதானம் இருந்தது," என்று புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
சுல்தான் தனது குழந்தைப் பருவத்தில், மற்ற குழந்தைகளைப் போலவே விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த மைதானத்தில் கின்ஹிரி (கன்னட சாதியினர்) மற்றும் பிராமணர்களின் குழந்தைகளும் விளையாடி மகிழ்ந்தனர். திப்புசுல்தான், வீட்டின் அமைதியான இடத்தில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் அந்த வழியே சென்ற ஒரு துறவி சுல்தானைப் பார்த்து, 'அதிர்ஷ்டசாலி பையனே, எதிர்காலத்தில் நீங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள்' என்று வரம் கொடுத்தார். அந்த நேரம் வரும்போது, என் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கோயிலை இடித்து இங்கே ஒரு மசூதியைக் கட்டுங்கள். அந்த மசூதி பல நூற்றாண்டுகளுக்கு உங்கள் நினைவிடமாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

பட மூலாதாரம், Imran Qureshi
சுல்தான் சிரித்துக்கொண்டே ஃபக்கீரிடம், அவர் ஆசீர்வாதத்தில் தான் எப்போது ராஜாவாக ஆனாலும், அவர் சொன்னபடியே செய்வதாகக்கூறினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை ஆட்சியாளராகி, ஏராளமான செல்வமும், நிலப்பரப்பும் அவர் வசம் வந்தபோது, திப்பு தனது வாக்குறுதியை நினைவு கூர்ந்தார். புண்டேரில் இருந்து திரும்பிய பிறகு, அவர் கோயிலின் வழிபாட்டாளர்களிடமிருந்து (காளையின் வடிவம் மற்றும் சுவர்களைத் தவிர அங்கு வேறு எதுவும் இருக்கவில்லை) அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் நிலத்தை வாங்கினார். பிராமணர் அந்த காளை உருவத்தை தேவராய பீடத்திற்கு கொண்டு சென்று அங்கு நிறுவினார். பின்னர் கோயில் இடிக்கப்பட்டு புதிய நிலத்தில் மசூதியின் அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த மசூதி பீஜாபூரில் உள்ள அலி ஆதில் ஷா மசூதியின் வரைபடத்தை பின்பற்றி கட்டப்பட்டது.
(இங்கு விவரிக்கப்பட்டுள்ள காளை உருவம் சிவபெருமானின் வாகனம் என்று நம்பப்படும் நந்தி)

பட மூலாதாரம், Imran Qureshi
இந்த புத்தகத்தின் அடிப்படையில், திப்பு காலத்தை தொடர்ந்து எழுதி வரும் வலைப்பதிவாளர் நிதின் ஒலிகாரா, இந்த மசூதியை கட்ட இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும், அதில் மூன்று லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
"இது ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மிக முக்கியமான மசூதியாகும். இது மஸ்ஜித்-இ-ஆலா அல்லது ஆட்சியாளரின் மசூதி என்று அழைக்கப்பட்டது, மேலும் இது திப்பு சுல்தானின் சாம்ராஜியத்தின் முக்கிய ஜாமியா மசூதியாகவும் இருந்தது" என்று அவர் கூறினார்.
மசூதியின் ஒரு பக்கத்தில் தூண் மண்டபம் இருப்பதாக நிதின் விளக்குகிறார். "இந்தத் தூண்களை உன்னிப்பாகப் பார்த்தால், தனித்துவமான இந்து உருவங்கள், குறிப்பாக ஒரு தூணில் உள்ளன. இந்த தூணில் இந்து உருவங்கள் தெளிவாகத் தெரியும், அது இங்கே இருந்த கோயிலின் ஒரு பகுதியாக இருக்கலாம். மசூதிக்குச் செல்லும் பாதையில் இன்னும் சிறிது தூரம் சென்றால், கொடிக்கல்லுக்கு அருகில் பல தூண்களைக் கொண்ட சிறிய ஆனால் தனித்துவமிக்க மண்டபம் காணப்படுகிறது. இது பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கலாம். இந்த மண்டபத்தின் சில தூண்களில் இதே போன்ற இந்து உருவங்களை நான் பார்த்திருக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
ஜாமியா மசூதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அன்று முதல் அந்த கோயில் அமைந்துள்ளது.
மற்றொரு கண்ணோட்டம்
மைசூர் பல்கலைக்கழகத்தின் திப்பு சுல்தான் ஆய்வுத் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் செபாஸ்டியன் ஜோசப், இந்தப் பிரச்னையில் மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார். இருப்பினும், முன்பு இங்கு ஒரு இந்து கோவியில் இருந்ததாக கிர்மானியின் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதை அவர் ஆதரிக்கிறார்.

பட மூலாதாரம், Imran Qureshi
"ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள் இருக்கும் இந்த மசூதி, திப்பு சுல்தான் அரசவையில் பூர்ணய்யா சக்தி வாய்ந்த திவானாக இருந்த காலத்தில் கட்டப்பட்டது. அவருடைய ஆலோசனை மற்றும் ஒப்புதல் இல்லாமல் ஒரு கல்லும் அசையாது. அனுமன் கோயிலின் முக்கிய அமைப்பு அங்கிருந்து அகற்றப்பட்டு, பூர்ணய்யாவின் மேற்பார்வையின் கீழ் கோட்டைக்கு வெளியே நிர்மாணம் செய்யப்பட்டது. அஸ்திவாரம் மற்றும் சில தூண்களை மசூதி கட்டும் பணியாளர்கள் பயன்படுத்தினர். இது தென்னிந்தியாவின் பொதுவான கலாசாரமாக இருந்தது," என்கிறார் பேராசிரியர் ஜோசப்.
"ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டையை உன்னிப்பாகப் பார்த்தால், காலஸ்த்வாடாவின் ஜெயின் கோயில்களின் இடிபாடுகளைக் காணலாம். இந்தக் கோயில்கள் அந்தக் கால தண்டநாயக்கரால் இடிக்கப்பட்டு, அதன் எச்சங்கள் ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டையைக் கட்ட பயன்படுத்தப்பட்டன. குறைந்தது நூறு ஜெயின் கோவில்கள் அழிக்கப்பட்டதாக கூறும் தேவராய காலத்து கல்வெட்டுகள் உள்ளன," என்றார் அவர்.
"தங்களது ஆட்சியாளரான விஜயநகர மகாராஜாவுக்கு விசுவாசத்தைக் காட்ட விரும்பிய தண்டநாயக்க வம்சத்தினர் மைசூருவில் உள்ள அனுமன் கோயில்களை கட்டினர். ஹனுமன் விசுவாசத்தின் சின்னம்," என்று வரலாற்றுப் பேராசிரியர் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Imran Qureshi
"மைசூருவில் உள்ள வடியார்கள் சுதந்திர ஆட்சியாளர்களாக உருவெடுத்தபோது, அனுமன் கோயில்கள் முக்கியத்துவத்தை இழந்தன. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் மற்றும் சாமுண்டதேவேஸ்வரி முக்கிய கோயிலாக மாறியது. மாறி வரும் அரசியல் காலங்களில் இந்த கோயில் அதன் முக்கியத்துவத்தை இழந்ததால், கோட்டையில் இருந்து வெளியே கொண்டுசென்று அனுமன் கோயில் அமைப்பதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை."
"விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்த தண்டநாயக்க வம்சத்தின் ஆட்சியாளர்கள் அனுமன் கோயில்களைக் கட்டிய காலத்தில், காவேரி பகுதியில் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ராவணனை வழிபடத் தொடங்கினர். இங்கே நீங்கள் பல ராவணன் கோயில்களைப் பார்க்கலாம்," என்கிறார் பேராசிரியர் ஜோசப்.
"இந்தியாவில் அரசியல் நோக்கங்களுக்காக மதம் எப்போதுமே பயன்படுத்தப்படுகிறது. சமண - சைவ மோதல், சைவ - வைணவ மோதல், பௌத்த - வைணவம் போன்ற மோதல்கள் இந்திய வரலாற்றில் எப்பொழுதும் நிகழ்ந்து வருகின்றன. சூழலை மோசமாக்கும்பொருட்டு வரலாற்றைத் தோண்டிக்கொண்டே இருக்கக் கூடாது," என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









