திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? - பிபிசி தமிழின் கள ஆய்வு

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது. மசூதி தரப்பினர் என்ன சொல்கிறார்கள்? நேரடி கள ஆய்வு.

கடந்த ஜுன் முப்பதாம் தேதியன்று திருப்பூரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாக சென்றனர். அங்கு மாநகராட்சி சிக்னலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது நகரில் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த, மாநில அளவிலான கவனம் அந்தப் பகுதி மீது திரும்பியது. இந்த மசூதி தொடர்பாக பல்வேறு தகவல்கள் மாநிலம் முழுவதும் வாட்ஸ் அப்பில் பரவ ஆரம்பித்தன. உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக பள்ளிவாசல் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பள்ளிவாசல் அனுமதிபெறாமல் கட்டப்பட்டதாகக் கூறி அதனை மூட வேண்டுமென அப்பகுதியின் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில் அந்த பள்ளிவாசலை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இஸ்லாமியர்கள் அதற்கு மறுக்கவே, பிரச்னை எழுந்திருக்கிறது.

திருப்பூர் பள்ளிவாசல் விவகாரத்தின் பின்னணி

சையது ஃபக்ருதீன் என்பவர் 2011ல் மகாலட்சுமி நகரில் ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் தொழுவதற்காக அங்கே ஒரு பள்ளிவாசல் கட்ட அந்த இடத்தை வழங்கினார். இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமாத்தார்கள் இணைந்து 30/17 அடி என்ற அளவில் சிறிய பள்ளி வாசல் ஒன்றைக் கட்டினர்.

2012 பிப்ரவரிவாக்கில் தொழுகை தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்தப் பள்ளிவாசல் தமிழ்நாடு வஃக்ப் வாரியத்தின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் மேலே இருந்த மாடியில் ஒரு ஷெட்டை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அமைத்தனர்.

இந்த நிலையில்தான் அந்தப் பகுதியின் குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சார்பில், அந்தப் பள்ளிவாசல் அந்தப் பகுதியின் அமைதியைக் குலைப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு அதே ஆண்டு மே மாதத்தில் அனுமதியில்லாமல் விரிவாக்கம் செய்ததாக நகராட்சியும் நோட்டீஸ் அனுப்பியது.

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி
படக்குறிப்பு, திருப்பூர் வேலம்பாளையம் மசூதி

பிறகு, குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் மசூதியை மூடுவதற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், எதற்காக அனுமதி பெறப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக மட்டும் அந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

பள்ளிவாசல் கட்டும்போது, வழிபாட்டுத் தலம் என்பதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரிடம் பெறவில்லை என்பதால் அதனை மூடும் நிலை ஏற்பட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சில ஆண்டுகள் கழிந்தன. பிறகு, கொரோனா காரணமாக ஊரடங்கு வந்துவிடவே உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் நீதிமன்றத்தை அனுகிய பள்ளிவாசல் தரப்பினர், தங்களுடைய பள்ளிவாசலுக்கு வழிபாட்டுத்தலத்திற்கான அனுமதியைத் தர வேண்டுமென உத்தரவிடக் கோரினர். இதை விசாரித்த நீதிமன்றம், பள்ளிவாசல் தரப்பு மனுவைப் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் அனுமதி தரலாம் என்று மாவட்ட நிர்வாகத்திற்குக் கூறியது. ஆனால், நான்குவார முடிவில், அனுமதி தர மறுத்தது மாவட்ட நிர்வாகம்.

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டின் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டது. இதையடுத்துத்தான் கடந்த 30ஆம் தேதி அதனை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் வந்தனர். இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

"இந்தப் பள்ளிவாசலில் தினமும் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் மிகக் குறைவானவர்களே வந்து தொழுவார்கள். வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு மட்டும் கூடுதல் எண்ணிக்கையில் ஆட்கள் வருவார்கள். எங்களால் இந்தப் பகுதியில் வசிக்கும் யாருக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. இந்தப் பிரச்னையின் பின்னணியில் சில அமைப்புகள் இருக்கின்றன. எங்களுக்கு யாரோடும் மோதல் போக்கு இல்லை. எல்லாரோடும் நட்புணர்வோடு செல்லவே நினைக்கிறோம். இந்தப் பள்ளிவாசலுக்கு வழிபாட்டுத் தலத்திற்கான அனுமதியைத் தர வேண்டும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை" என்கிறார் பள்ளிவாசலின் தலைவரான ஐ.எம். முபாரக் அலி.

ஐ.எம். முபாரக் அலி (இடமிருந்து இரண்டாவது)
படக்குறிப்பு, "பள்ளிவாசலால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்கிறார் மசூதியின் தலைவரான ஐ.எம். முபாரக் அலி (இடமிருந்து இரண்டாவது)

இந்தப் பகுதியில் 150 இஸ்லாமியக் குடும்பத்தினர் இருப்பதாகவும் இந்தப் பள்ளிவாசல் இல்லாவிட்டால், வேறொரு பள்ளிவாசலுக்குச் செல்வதென்றால் வெகுதூரம் போக வேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார் முபாரக் அலி.

"கடந்த பத்தாண்டுகளில் ஒரு இந்துச் சகோதரன்கூட பள்ளிவாசலால் பிரச்னை என்று வந்ததில்லை. மாறாக, பிள்ளைகளுக்கு மந்திரிக்க வேண்டுமென்றுதான் வருவார்கள்" என்கிறார் முபாரக் அலி.

ஆனால், இந்த விவகாரத்தில் இந்து முன்னணியும் தலையிட ஆரம்பித்திருப்பது, ஒரு விதிமீறல் விவகாரத்தை மத விவகாரமாக மாற்றியிருக்கிறது. இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் தாமு வெங்கடேஸ்வரனிடம் கேட்டபோது, "இந்துக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நாங்கள் தலையிடுவோம். இந்துக்கள் நீதிமன்றத்தில் போய் ஆணையைப் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே அந்தப் பகுதி இந்துக்கள் நியாயம் கேட்டு எங்களிடம் வந்தார்கள். ஆகவே, நாங்கள் இதில் தலையிடுகிறோம்" என்று தெரிவித்தார்.

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன்
படக்குறிப்பு, இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன்

வழிபாட்டுத்தலத்திற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் பெறப்படாத நிலையில், அந்த மசூதி எப்படி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார் தாமு வெங்கடேஸ்வரன்.

இந்த விவகாரத்தில் வழக்குத் தொடர்ந்த குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசுவதற்கு பிபிசி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதற்கிடையில், திருப்பூர் தெற்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான க. செல்வராஜ் ஜூன் 28ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், "திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் சொந்த இடத்தில் மசூதி ஏற்படுத்தி தொழுகை நடத்தி வந்துள்ளார்கள். அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரில் மசூதி செயல்பட எதிர்ப்புத் தெரிவித்து 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தற்போது முடியப்பெற்று மசூதிக்கு சீல் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தெற்குத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ செல்வராஜ்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் சமயம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடம் பதற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மசூதிக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்தினர் 30ஆம் தேதியன்று வந்தபோது, இந்தக் கடிதம் வாட்ஸ் அப்பில் பரவியது. இதையடுத்து கோபமடைந்த இந்து முன்னணியினர் இதற்கு அடுத்த நாள், செல்வராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதற்குக் காவல்துறை அனுமதிக்காத நிலையில், பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் செல்வராஜின் உருவப் படம் எரிக்கப்பட்டும் செருப்பால் அடித்தும் அவமானப்படுத்தப்பட்டது.

திருப்பூர் வடக்குத் தொகுதியில் நடக்கும் சம்பவத்திற்கு, தெற்குத் தொகுதி எம்எல்ஏவான செல்வராஜ் ஏன் எதிர்வினையாற்றுகிறார் என இந்து முன்னணியினர் கேள்வியெழுப்புகின்றனர்.

"திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் நான். எனது பகுதிக்குள் பிரச்னை வருமென்றால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. முதலமைச்சருக்கு நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும். அதைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்" என்கிறார் செல்வராஜ்.

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி

இந்த விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் தன் மீது பாய்வதற்கு வேறு பழைய காரணங்களும் இருப்பதாகக் கூறுகிறார் அவர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணிக்கு வாக்குக்கோரி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திருப்பூருக்கு வருவதாக இருந்த நிலையில், இந்து முன்னணி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதனை மீறி கி. வீரமணி வந்தபோது அவரது வாகனத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதாகவும் அதனை உடைத்து பிரச்சாரக் கூட்டத்தை தான் நடத்தியதாலேயே, அதனை மனதில் வைத்து இந்த விவகாரத்தில் பிரச்னையைக் கிளப்புவதாக சொல்கிறார் செல்வராஜ்.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சொல்வதைத்தான் நாங்கள் செய்ய முடியும் என்கிறது மாவட்ட நிர்வாகம். இது குறித்து பிபிசியிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வினீத், "மசூதி தரப்பில் மனுக்கள் ஏதும் பரிசீலனையில் இருந்தால் அதில் இரு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்தது. எங்கள் பரிசீலனைக்கு வந்த எல்லா மனுக்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. அந்த முடிவுகள் என்ன என்பதையெல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். இனி நீதிமன்றம் சொல்வதைச் செய்வோம்" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேல்முறையீட்டு மனுவை முழுமையாக விசாரித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்குள், அந்த மசூதி சட்டபூர்வமானது என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: