சிதம்பரம் நடராஜர் கோவில்: அறநிலையத் துறை - தீட்சிதர்கள் மோதல் - வரலாற்று காரணம் என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை நடத்த அங்குள்ள தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோவில் மீது அறநிலையத் துறை கட்டுப்பாடுகளைச் செலுத்த முடியாது எனக் கூறுகின்றனர். தில்லை கோவிலுக்கும் அறநிலையத் துறைக்கும் இடையில் மோதல் தொடர்வது ஏன்?
சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் ஜூன் ஏழாம் தேதியன்று சென்றபோது, அவர்களுக்கு கணக்குகளைக் காட்டுவதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இருந்தபோதும், இரண்டாவது நாளாக ஜூன் எட்டாம் தேதியும் இந்த ஆய்வை மேற்கொள்ள அறநிலையத் துறை முயற்சித்தது. இருந்தபோதும் தீட்சிதர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
கண்டிப்பாக ஆய்வுகளை நடத்தியே தீருவோம் என்கிறது அறநிலையத் துறை. ஆனால், இந்தக் கோவில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்; இதில் ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள் தீட்சிதர்கள்.
வைணவர்கள் 'கோவில்' என்று குறிப்பிட்டால், அது திருவரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலைக் குறிப்பதைப்போல, சைவர்கள் 'கோவில்' என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராசர் கோவிலையே குறிக்கும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என சைவ சமய குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட கோவில் இது.
ஒரே தருணத்தில் கட்டப்படாமல், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டு தற்போதைய நிலையை அடைந்துள்ளது இந்தக் கோவில். தேவாரப் பாடல்கள் இந்தக் கோவிலில்தான் பூட்டிவைக்கப்பட்டிருந்து, ராஜராஜ சோழன் காலத்தில் மீட்கப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.
சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரை, அந்தக் கோவிலின் கட்டுப்பாடு எப்போது தீட்சிதர்களின் கீழ் வந்தது என்பது குறித்து ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காலகட்டத்தைச் சொல்கின்றனர். பக்தி இலக்கியங்களில் சொல்லப்படும் "தில்லை வாழ் அந்தணர்கள்" தீட்சிதர்களைக் குறிப்பதாகவே, தீட்சிதர்கள் ஆதரவு தரப்பு சொல்கிறது. ஆனால்,, "தீட்சிதர்கள்" என்ற சொல் திருமுறைகளிலோ, சங்க இலக்கியத்திலோ குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சிலர், 'தில்லை வாழ் அந்தணர்கள்' என்போர், இந்தத் தீட்சிதர்களின் முன்னோர்கள் என்ற கருத்தை ஏற்க மறுக்கின்றனர்.
தவிர, கோவில் எப்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் வந்தது என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இந்தக் கோவில் மீதான தங்கள் அதிகாரம் குறித்து தீட்சிதர்கள் நீண்ட காலமாகவே வழக்குகளைத் தொடுத்து, வாதாடி, பல வழக்குகளில் வென்று வந்துள்ளனர். இது தொடர்பான சுருக்கமான வரலாற்றை இப்போது பார்க்கலாம்.
தில்லைக் கோவிலை நிர்வகிப்பது யார்? - தொடரும் மோதல்

1920களில் இந்து சமய அறக்கட்டளைகள் தொடர்பாக சென்னை மாகாண பிரதமர் பனகல் ராஜா சட்டம் கொண்டுவந்தபோது தீட்சிதர்கள் அதை ஏற்கவில்லை. சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய ஆளுநரை அணுகிய அவர்கள், அந்தச் சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஆங்கில அரசு முழுமையாக ஏற்கவில்லை. வரவு - செலவு கணக்குகளைச் சமர்ப்பித்தல், கோவிலை நிர்வகிப்பதற்கு திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகள் பொருந்தும் என்று கூறியது.
இதற்குப் பிறகு, கோவிலின் நிர்வாகத்தை நடத்த ஒரு திட்டம் (Scheme) வகுக்க வேண்டுமென சிலர் அறநிலைய வாரியத்திடம் கோரினர். இதன்படி அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்தது. ஆனால், தீட்சிதர்கள் அந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. தென்னார்க்காடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் 1937ல் தீர்ப்பளித்த தென்னார்க்காடு நீதிமன்றம், அறநிலைய வாரியம் வகுத்த திட்டத்தை சில மாறுதல்களுடன் ஏற்கும்படி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டில், இந்தக் கோவில் தனியார் கோவில் இல்லை என்றும் பொதுக் கோவில் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், கோவில் நிர்வாகத்தில் எவ்வித முறைகேடும் இல்லை என்றாலும் நிர்வாகத்திற்கு திட்டம் அவசியம் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், முந்தைய திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து, அதனை ஏற்கும்படி கூறியது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, அரசு கோவில் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. மிக மோசமாக நிர்வாகம் இருந்தால் ஒழிய, அரசே நிர்வாகத்தை கையில் எடுக்கக்கூடாது என்று கூறி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பதற்கான விரிவான திட்டம் இந்தத் தீர்ப்பில் தரப்பட்டது.
தீட்சிதர்கள் தரப்பு வாதம் என்ன?

இதற்குப் பிறகு 1951ல் புதிய இந்து சமய அறநிலையத் துறை சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்வதற்கு புதிய அரசாணை அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டது. புதிய செயல் அலுவலரையும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.
"தீட்சிதர்கள் ஒரு தனி சமய குழுவினர். அவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். தீட்சிதர்கள் அல்லாத யாரும் நிர்வாகத்திலோ, பூஜையிலோ ஈடுபட முடியாது. தீட்சிதர்களின் இந்தத் தனிப்பட்ட உரிமை, பல நூற்றாண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமை செயல் அதிகாரியின் நியமனத்தால் பறிபோகிறது. ஒரு சமயக் குழுவினரின் சொத்தை அவர்களே நிர்வகிக்கும் உரிமை அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது" என தீட்சிதர்கள் தரப்பு வாதிட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீட்சிதர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 1951 டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில், "சிதம்பரம் கோவிலுக்கு ஒரு செயல் அதிகாரியை நியமித்தது சரி அல்ல. ஏற்கெனவே கோவில் நிர்வாகத்திற்கென ஒரு திட்டம் உள்ளது. நீதிமன்றத்தாலும் அது இறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில் பொறுப்பாளர்களாக இருக்கும் அறங்காவலர்களை நீக்கும் அளவுக்கு நிர்வாகம் மோசமாக இருந்தால்தான் நிர்வாகத்திலிருந்து அவர்களை நீக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். எனவே, நிர்வாக அதிகாரியை நியமிக்கும் ஆணை ரத்துசெய்யப்பட வேண்டும்" என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், திடீரென அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. இதனால், அந்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
தீட்சிதர்கள் தனி சமய பிரிவினரா?
இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1982இல் அப்போதைய ஆணையர் யு. சுப்பிரமணியம் அந்தக் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, ஏன் செயல் அலுவலரை நியமிக்கக்கூடாது என கேள்வியெழுப்பினார். இதனை எதிர்த்து, தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றனர். 1987இல் ஜூலையில் புதிதாக நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிப் பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தில், துறையின் செயலரிடம் முறையிடும் வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2004ஆம் ஆண்டில் துறையின் செயலரிடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர்.
இந்த முறையீடு 2006ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையின் மூலம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். அந்த மனுவை நீதிபதி பானுமதி 2009ல் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பில், தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. 1951லேயே தாங்கள் தனி சமயப் பிரிவினர் என உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், அந்த விவகாரம் குறித்து விவாதிக்க 'முன் தீர்ப்புத் தடை' (Res Judicata) இருக்கிறதெனக் கூறி, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்தனர். அந்த அமர்வும், தீட்சிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. அரசியல் சட்டப்பிரிவு 26ஐ ஆராய்ந்த நீதிபதிகள், வழிபாடு நடத்தத்தான் உரிமை உள்ளதே தவிர, சொத்துக்களை நிர்வகிப்பது சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். தீட்சிதர்களின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். கோவில் நிர்வாகம் செயல் அலுவலரின் கீழ் வந்தது. உயர் நீதிமன்றம் தங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மூன்று தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். தீட்சிதர் தரப்பு, தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒருவர், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி என மூன்று மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது. 2014ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு தீட்சிதர்களுக்கு ஆதரவாக அமைந்தது. தீட்சிதர்கள் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை உச்ச நீதிமன்றம் 1951லேயே வரையறுத்துவிட்ட பிறகு, கீழமை நீதிமன்றமான உயர் நீதிமன்றம் அதனை விசாரிக்க முடியாது என்றது உச்ச நீதிமன்றம்.
"கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்காக அரசு எடுத்துக் கொண்டால், தவறுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, அதனை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால், தற்போது செயல் அலுவலரை நியமிக்கும் அரசாணையில், அவருக்கான கால வரையறை இல்லாததால், அந்த உத்தரவு செல்லாது" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது தீட்சிதர்கள் கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.
மேலே கூறப்பட்ட 1951ஆம் ஆண்டின் தீர்ப்பு, 2014ஆம் ஆண்டின் உச்ச நீதின்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே கோவிலில் அறநிலையத் துறை ஆய்வுசெய்யக்கூடாது என தீட்சிதர்கள் தரப்பு கூறுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை அனுமதிக்காதது குறித்து, தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞரான சந்திரசேகரிடம் கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கோவிலில் ஆய்வு செய்ய அறநிலையத் துறைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தார். "உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி அளித்த தீர்ப்பின்படி, தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவு என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அரசியல் சட்டத்தின் 26வது பிரிவின்படி, சமய ரீதியான அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களுக்கு உண்டு" என்றார்.

ஆனால், 2014ஆம் ஆண்டின் தீர்ப்பின்படி, தவறு நடப்பதாக தகவல் வந்தால், ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அனுமதி உண்டுதானே என்று கேட்டபோது, "இது அந்தத் தீர்ப்பை புரிந்துகொள்லாமல் பேசும் பேச்சு. ஏன் அது பொருந்தாது என்பதை விளக்கி 14 பக்கத்திற்கு அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறோம். இருந்தபோதும் அதை ஏற்காமல் ஆய்வுசெய்வேன் என்கிறார்கள். அமைச்சர் சொல்லிவிட்டார், ஆய்வு செய்தே தீருவோம் என்கிறார்கள்.
இப்படி ஆய்வுக்கு வருவதற்கு முன்பாகவே, அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீட்சிதர்கள் குறித்த தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. கோவிலை கையகப்படுத்தமாட்டோம் என்கிறார்கள். அப்படியானால், அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவர வேண்டியதுதானே.
கனக சபையில் நின்று பாடுவதற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென ஒரு அரசாணையை வெளியிட்டு, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். தீட்சிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதனை அரசே ஊக்குவிக்கிறது. எங்களுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது" என்கிறார் அவர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டபோது, "அவர்கள் கணக்குகளைக் காட்ட மறுக்கிறார்கள். அவர்கள் அப்படி மறுக்க முடியாது. இனி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
தில்லை நடராஜர் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை இப்போதைக்குத் தீர்வதைப் போல தெரியவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












